மகிந்தா பக்கம் திரும்பும் மேற்குலகம் – கருணை காட்டுவாரா மகிந்தா?

சிறீலங்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணைச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் இன்று (11) எதிர்க்கட்சித்தலைவர் மகிந்த ராஸபக்சாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி தெப்லிஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜி.எல் பீரீஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மேற்குலகம் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாயா வருவதை மறைமுகமாக எதிர்த்த அமெரிக்கா அவர் மீதான வழக்குகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்தது.

ஆனாலும் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ள கோத்தபாய அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் மகிந்தா தரப்பை தன்னவசப்படுத்தம் காய்நகர்த்தல்களை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றது.

அதற்கு ஏதுவாக கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் இராஜதந்திரி ஒருவர் மகிந்தாவை தனியாக சந்தித்திருந்தார். இந்த சந்திப்புக்களை பீரீஸ் மறைமுகமாக ஏற்பாடு செய்துவருவது குறிப்பிடத்தக்கது.