மகளின் திருமண நிகழ்விற்காக நளினி பிணையில் விடுதலை

மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, 28 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த, நளினி இன்று பிணையில் விடுதலையாகியுள்ளார்.

துப்பாக்கி தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரயை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேராயர் சிங்கராயர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.  அரசியல்வாதிகளையோ, பத்திரிகையாளர்களையோ சந்திக்கக்கூடாது என்பன அடங்கலாக 12 நிபந்தனைகளுடன் நளினி விடுதலையாகியுள்ளார். மீண்டும் ஓகஸ்ட் 25ஆம் திகதி சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே இவருக்கு பிணை வழங்கப்பட்டது.

நளினியின் மகள் ஹரிதா சிறையில் பிறந்தவராவார். தற்போது லண்டனில் கல்வி பயில்கின்றார். இவருக்கு அமையவுள்ள மாப்பிளை இலங்கையில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்று நளினி விரும்புகின்றார். இலங்கையில் வசிக்கா விட்டாலும், இலங்கைத் தமிழரையே நளினி தேர்ந்தெடுக்க விரும்புகின்றார்.

திருமணம் ஏற்பாடானதும், முருகனை பிணையில் எடுக்க ஒழுங்கு செய்யப் போவதாக நளினி தெரிவித்தார்.