போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு விவசாயிகளின் அபார முயற்சியினால் நடப்பாண்டில் பப்பாசி பழ ஏற்றுமதிகளில் 7 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இதன் மூலம் வவுனியா வடக்கு பழச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு 24 இலட்சம் ரூபாய் இலாபமாக கிடைத்துள்ளது.

யுத்தத்தினால் பொருளாதார ரீதியாக நொந்து போயுள்ள மக்களுக்கு பப்பாசி செய்கை வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றது. குறிப்பாக  வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமங்களில் வாழும் மக்கள் பலர் மெல்ல மெல்ல தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி வருகின்றனர்.

நெடுங்கேணிப் பகுதியில் உள்ள சன்னாசிபரந்தன், சின்னடம்பன், ஒலுமடு, மாறாஇலுப்பைக்குளம், துவரங்குளம், பட்டிக்குடியிருப்பு, புளியங்குளம் வடக்கு, கனகராயன்குளம் வடக்கு உள்ளிட்ட பல கிராமங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக பப்பாசிச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.7 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

வவுனியா வடக்கு பகுதியில் பப்பாசி செய்கையை செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று விவசாய திணைக்களம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து ஆரம்பத்தில் உதவி செய்திருந்தது. தற்போது பல கிராமங்களில் மக்கள் தாமாகவே இப் பயிர் செய்கையில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். இதேவேளை, அவர்களது உற்பத்தியை சந்தைப்படுத்தும் நோக்கிலும் அவர்களது பிரச்சனைகளை கலந்தாலோசிக்கும் நோக்கிலும் பழப் பயிர்ச் செய்கையாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

200 பயிர் செய்கையாளர்கள் இணைந்து இந்த சங்கத்தை அமைத்திருந்தனர். இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளத்தினால் 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதைப் பெற்றுள்ள இந்தச் சங்கம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பப்பாசிப் பழத்தை ஏற்றுமதி செய்து வருகிறது.

கையில் ஒரு பையுடன் இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த நிலையில் மீள்குடியேறிய மக்கள், இன்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு இப் பயிர்செய்கை பெரிதும் உதவியுள்ளது.

கணவனை யுத்தத்தில் காவு கொடுத்து விட்டும், தமது கணவன்மாரை காணாமல் போனோர் வரிசையில் இணைந்து விட்டும் வாழ்வதற்கு வழி தெரியாது தவித்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பலவற்றுக்கும் பப்பாசி செய்கையே வாழ்வாதாரத்தை கொடுத்துள்ளது.

கணவனை இழந்த நிலையில் கல்வி கற்கும் மூன்று பிள்ளைகளுடன் துவரங்குளம் பகுதியில் வாழும் தாயார் ஒருவர் கூறுகையில்,

என்னுடைய கணவன் யுத்தத்தில் இறந்து விட்டார். மூன்று பிள்ளைகளையும் கல்வி கற்க வைக்க முடியாமல் மிகவும் கஸ்ரப்பட்டேன். தோட்டம் செய்து அதில் வரும் வருமானத்தில் என்றாலும் குடும்பத்தை கொண்டு நடத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் அது கூட சாதகமாக அமையவில்லை. கூலி வேலைக்குச் சென்றேன். கணவன் இல்லை என்பதால் பலரும் பலவிதமாக சிந்தித்தார்கள்.5 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

என்னாலே எதுவுமே முடியவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து பிள்ளைகளுடன் செத்திடலாமோ என்று கூட நினைத்தேன். ஆனால் பப்பாசி பயிர்ச் செய்கை பற்றி அறிந்து அதையும் ஒரு தடவை செய்து பார்ப்போம் என முடிவெடுத்து அதனைச் செய்தேன். தற்போது வருமானம் கிடைக்கிறது. அதன் பாராமரிப்புக்கான செலவுகள் போக கிடைக்கும் வருமானத்தில் எனது பிள்ளைகளை நான் நல்ல படியாக கல்வி கற்க வைக்கின்றேன் என்றார்.

இவ்வாறு கடந்த பல மாதங்களாக தமது வாழ்வாதரத்தை கொண்டு நடத்துவதற்கு பப்பாசிச் செய்கையே உதவியது என்கின்றனர் செய்கையாளர்கள். பப்பாசி கன்று நாட்டப்பட்டு 6 மாதங்களில் இருந்து பயன் பெறக் கூடியதாக இருப்பதுடன், இதற்கான உற்பத்திச் செலவும் மிகக் குறைவாகவே உள்ளது.

ஆரம்பத்தில் பப்பாசி விதைகளை அல்லது கன்றுகளை வாங்கி நடுவதற்கும், வாரத்தில் மூன்று தடவை தண்ணீர் பாய்சுவதற்குமே செலவு. ஆறு மாதங்களில் காய் பிடிக்கத் தொடங்கியதும் 10 ஆம் மாதத்தில் இருந்து வருமானத்தைப் பெற முடியும்.

பப்பாசி செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு கால் ஏக்கருக்கு மாதாந்தம் 30,000 ரூபாய் தொடக்கம் 40,000 ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகவும் இதனைக் கொண்டு குடும்பத்தைக் கொண்டு நடத்தக் கூடியதாகவும் உள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பழப்பயிர் செய்கையாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் கூறுகையில், எங்களுடைய செய்கையாளரின் உற்பத்தியை சந்தைப்படுத்த தனியார் கம்பனி ஒன்றிடம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அவர்கள் கிழமையில் ஒரு தடவை வந்து கிலோவுக்கு 30ரூபாய் படி பப்பாசியை கட்டிக் கொண்டு போய் எங்கள் சங்கத்தின் மூலம் பணத்தை தருகிறார்கள்.

அவர்கள் கட்டிக் கொண்டு போன பின் தனியார் சந்தைகளில இருந்து வந்து பப்பாசிப் பழங்களை 20 ரூபாய் படி கட்டுவார்கள். தற்போது எல்லோருக்கும் வருமானம் வருகிறது என்கிறார்.3 2 போர் பாதிப்புக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வதற்கு வழிகாட்டும் பப்பாசி செய்கை-கோ-ரூபகாந்

இவ்வாறு பப்பாசி செய்கையில் வருமானம் வருகின்ற போதும் வவுனியா வடக்கின் சில கிராமங்களில் ஊடுவுரும் யானைகள் இப் பப்பாசி பயிர்களை நாசப்படுத்தி அக் குடும்பங்களின் பொருளாதாரத்தை அழித்து விடுகின்றது. இதனால் பலர் மீண்டும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர்.

வாழ்வதற்கு வழிகாட்டும் தமது பயிர்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் செய்து தரவேண்டும் என்பது பயிர் செய்கையாளரின் கோரிக்கையாகவுள்ளது.

இது தவிர, யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும் பல குடும்பங்கள் வாழ்வதற்கு வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இப் பப்பாசி செய்கையில் ஈடுபட ஆர்வமாகவும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு உள்ள ஒரே பிரச்சனை. பப்பாசி பயிர்ச் செய்கைக்கான விதைகளைப் பெறுவதற்கும், அதனை முதல் 6 மாதங்கள் வாரத்தில் மூன்று தடவையாவது நீர் இறைந்து பராமரிப்பதற்கும் உரிய மூலதன வசதி இன்மையே.

எனவே, வடக்கின் அபிவிருத்தி, தொழில் முயற்சி உதவிகள் என கூறிக் கொள்ளும் அரசாங்கமும், தாயக உறவுகளுக்காக உதவி செய்யும் புலம்பெயர் உறவுகளும் இவ்வாறான பயிர்செய்கை நடவடிக்கைகளுக்கு வழங்கும் உதவிகளை அதிகரிப்பதன் மூலம் மீள்குடியேறிய நிலையில் அவலத்துடன் வாழும் பல குடும்பங்களின் வீடுகளில் விளக்கு ஒளிரும் என்பதே உண்மை.