போர்க் குற்றவாளிகளுக்கு மீண்டும் அதிகாரம்: உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பு

வன்னிப் போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கெயிட்டியில் அமைதிப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சிறீலங்காவில் மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பும், சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதலை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே நிகழ்த்தியிருந்ததாக நம்பப்பட்டது எனினும் ஐ.எஸ் அமைப்பு அதற்கு உரிமை கோரியிருந்தது.

இந்த தாக்குதலின் பின்னர் சிறீலங்காவில் அச்சம் தோன்றியுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10,000 படையினர் மேற்கு மாகாணத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற காலத்தில் இந்த படையினருக்கு கைது செய்யவும், தடுத்து வைக்கவும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சிறீலங்கா அரசு மீண்டும் அவசரகாலச்சட்டத்தை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் அனுமதியின்றி தேடுதலை மேற்கொள்ளவும், கைது செய்யவும் படையினருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

புலானய்வுத்துறையினரை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் திட்டம் ஒன்றை ஏற்கனவே சிறீலங்கா முன்வைத்துள்ளது. இது துன்பமான விடயம், ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படவில்லை.

தற்போது படையினரை வழிநடத்தும் அதிகாரிகளின் விபரத்தை இந்த ஆவணத்தில் ஆராய்ந்துள்ளோம். பாதுகாப்பு முக்கியமானது எனினும் மனித உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் தற்போதை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகளவு மனித உரிமை மீறல்களுக்கான வாய்ப்புக்கள் உள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள படை அதிகாரிகளில் பலர் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களில் இருவரின் பெயர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது.

ஒருவர் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர், மற்றும் இருவர் கெயிட்டி பகுதியில் அமைதிப்படையாக பணியாற்றிய சமயம் சிறுவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டவர்கள்.

JDS ITJP போர்க் குற்றவாளிகளுக்கு மீண்டும் அதிகாரம்: உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்புகூட்டு நடவடிக்கை தலமைப் பொறுப்பு ஏப்பிரல் மாதம் 29 ஆம் நாளில் இருந்து மேஜர் ஜெனரல் சத்தப்பிரியா லியனகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிரிவின் தலைமையை பதுகாப்பு படையின் பிரதம அதிகாரியான அட்மிரல் ரவீந்திரா விஜயகுணரட்ன ஏற்றுள்ளார்.

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர். தற்போதைய நிமனத்திற்கு முன்னரே மேஜர் ஜெனரல் லியனகே 37 அதிகாரிகளையும் 1,783 படையினரையும் கொண்டு மேற்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

2009 ஆம் இடம்பெற்ற போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30-1 இல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. மறுவளமாக அவர்களுக்கு அதிக அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அமைதிப் பணியில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகள் இவர்கள். எனவே சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

http://www.ilakku.org/wp-content/uploads/2019/05/The-men-now-patrolling-sri-lanka-ITJP-JDS.pdf