போர்க்குற்றத்துக்குள்ளான படையினரால் நாடு ஆளப்படுகிறது

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது நிர்வாகத்தில் அச்சம் தரும் எண்ணிக்கையில் யுத்தகுற்றச்சாட்டிற்குள்ளான பலரிற்கு நியமனம் வழங்கியுள்ளார் எனதென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் ஊழலில் ஈடுபட்டனர் என்ற அதிகாரிகளும் அவரது நிர்வாகத்தில் காணப்படுகின்றனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு நெருக்கமான அதிகாரிகளின் விபரங்கள் அடங்கிய இன்போகிராபிக்சினையும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு நெருக்கமான அதிகாரிகளில் அவரது கஜபா படைப்பிரிவை சேர்ந்த ஆறு ஜெனரல்களும் , பிரிகேடியர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு இராணுவதளபதி, முப்படைகளின் பிரதானி, பாதுகாப்பு செயலாளர்,தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கஜபா படைப்பிரிவை சேர்ந்த இரு ஜெனரல்கள் 1989ம ஆண்டு மாத்தளை மாவட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் செயற்பட்டவர்கள் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட பகுதிக்கான இராணுவ ஒருங்கிணைப்பாளராக அவர் செயற்பட்டவேளை சுமார் 700 சிங்கள இளைஞர்கள் காணாமல்போனார்கள் என அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் காண்பிக்கின்றன என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது கோத்தபாய ராஜபக்ச அதிக பலம் பொருந்திய அச்சத்தை ஏற்படுத்தும் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை அவரின் கீழ் பணிபுரிந்த 14 இராணுவ மற்றும் காவல்துறை அதிகாரிகள் தற்போதை அவரது அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கின்றனர் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

1989 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் தங்களின் சொந்த பிரஜைகள் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டதுடன் தொடர்புபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளிற்காக ஒருநாள் பதிலளிக்கவேண்டிய இராணுவ அதிகாரிகளால் இலங்கை தற்போது நிர்வகிக்கப்படுகின்றது என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று இயக்குநர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளமை இலங்கை தனது அதிகாரிகளின் மனித உரிமைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்பது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் தீர்மானங்களிற்கு அனுசரனை வழங்கிய நாடுகள் இந்த விழுமியங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.