போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு – தமிழன் வன்னிமகன்-

1999 ஐப்பசி மாதம் அம்பகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால்  ‘’வோட்ட செட்” நடவடிக்கை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன் போது இடம்பெற்ற சண்டைகளில் படைத்தரப்பால் பெண் போராளிகளினது வித்துடல்கள் சில கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்த சந்தர்ப்பத்தில் அம்பகாமம் பகுதியில் நின்றிருந்த ஒரு இளநிலை படையதிகாரி, யாழ்ப்பாணத்தில் படையப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் தனது நண்பனான அதிகாரியுடன் நடத்திய உரையாடல்  விடுதலைப்புலிகளால் இடைமறிப்புச் செய்யப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பெண்போராளிகளின் உடல்களைப் பார்க்கும் போது தனக்கு மிகுந்த கவலையாக இருப்பதாக அம்பகாமத்தில் இருந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதற்கு யாழில் இருந்த புலனாய்வுப் படையாளி;

“இதற்காக நீ ஏன் வருந்த வேண்டும். இவர்களை மட்டுமல்ல இந்த இனத்தையே வைக்கக் கூடாது. இவர்களுக்கு இருக்கும் இந்த போராட்ட குணத்தை முதலில் இல்லாதொழிக்க வேண்டும். இவர்களின் சந்ததிக்கே போராட்டகுணம் இருக்கக்கூடாது.

அதற்கான நடவடிக்கைகள் பலேகல்ல ஐயா பொறுப்பாக இருந்த நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டன. நாங்கள் இப்போது போதைப் பொருட்கள், பாலியல் படங்கள் போன்றவற்றை இங்கு பரப்பும் வேலையை செய்துவருகிறோம்…..” என அந்த உரையாடல் தொடர்ந்து சென்றது……..radio operator போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

“வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனைக்கு அரசாங்கத்தின் திட்டமிட்டநிகழ்ச்சி நிரலே காரணம்” என அன்றைய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

2014இல் பாராளுமன்றில் உரையாற்றிய சுரேஷ் பிரேமச்சந்திரன் “வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு படையினரே காரணம்” என அழுத்தமாகக் கூறியிருந்தார்.

இது போன்றே பல்வேறு தரப்புகளிலிருந்தும் சிறிலங்கா அரசுமீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த கருத்துக்களில் உண்மை இல்லையெனில், இந்த பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக  சிறிலங்கா அரசால் அன்றே நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு எந்த நடவடியும் எடுக்கப்படவில்லை.

இந்த போதைப்பொருள் விநியோகம் திடீரென வானத்தில் இருந்து இறங்கிய சாபமல்ல. அது எதிரிகளால் இரண்டு சகாப்தங்களாக நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் ஒரு இனவழிப்பு நிகழ்ச்சிநிரல்.

இத்தகைய செய்திகள் பலருக்கு ஆச்சரியத்தை தோற்றுவித்திருக்கக் கூடும். இன்னும் சிலருக்கு இந்தச் செய்தியின் நம்பகத் தன்மை பற்றிய ஐயங்கள் எழவும் கூடும். ஆனால் இதில் ஆச்சரியப்படவோ ஐயம் கொள்ளவோ எதுவுமில்லை.487 1 news போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

இங்கு மட்டுமல்ல. எழுப்பப்படும் உரிமைக் குரல்களை வலுவிழக்கச் செய்யவும், ஒடுக்குமுறைகக்கு எதிராக போராடும் குணாம்சத்தை நீத்துப் போகச்செய்யவும் அடக்குமுறையாளர்கள் போதைப்பொருட்களை ஒரு கருவியாக உபயோகித்தே வந்துள்ளனர்.

இன்றும் அவுஸ்ரேலியா, கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் அந்த நாட்டின் சுதேச மக்கள் அந்த நாட்டு ஆளும் தரப்புகளால் திட்டமிட்டு பரப்பப்பட்ட, பரப்பப்படுகின்ற போதைப் பொருள் பாவனை மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகி அழிந்து கொண்டிருக்கிறார்கள். உலகின் அதி கூடிய தற்கொலை விகிதம் அவுஸ்ரேலிய சுதேச மக்களின் மத்தியில் நிலவுகிறது. சனத்தொகையில் 03 வீதத்திற்குக் குறைவான கனேடிய சுதேசிகள், கனேடிய சிறைச்சாலைகளில் 19 வீதத்தை நிரப்புகின்றனர்.

இவ்வாறே சிங்கள அரசும் போதையூட்டி தமிழரின் போர்க்குணத்தை அழிக்க கடந்த பல தசாப்தங்களாக முயன்றுவருகின்றது. இதன்மூலம் இனவழிப்பை இலகுபடுத்த முடியுமென்பது அவர்களின் நம்பிக்கை. அது உண்மையானதும் கூட.

இவ்வாறு ஒரு இனத்தை  அழித்தொழிப்பதற்காக போதைப்பொருட்களை ஆயுதமாக பயன்படுத்திவரும் கேவலமான ஒரு தேசத்தின் அன்றைய அரசியல்வாதி, இன்றைய சனாதிபதி, போதைப்பொருள் பற்றி இப்போது அதிகம் பேசிவருகிறார். அவரது அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அமைச்சர்கள் மீது கூட போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் தமிழர் தரப்பு  நோக்கி எந்தவித குற்ற   உணர்ச்சியுமின்றி கைநீட்டுகிறார்.

விடுதலைப் புலிகளை தமது படையினர் வெற்றிகொண்டதாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசு, இஸ்லாமிய பயங்கரவாதத்தை சில நாட்களிலேயே முடிந்துவிட்டதாக பெருமைப்படும் சிறிலங்கா அரசு வடக்கில் காவாலிக் குழுக்களையும் கஞ்சா கடத்தலையும் முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் இருப்பது முரண்நகை இல்லையா?Vaal 2 போதை ஊட்டு போர்க் குணம் மறையும் ; சிங்கள அரசின் சீர்கெட்ட சமன்பாடு - தமிழன் வன்னிமகன்-

சிங்கள தேசத்தின்  கோட்டைகளுக்குள்ளேயே புகுந்து விளையாடிய தமிழர் தேசத்தின் பிள்ளைகள்  சிறிலங்கா அரசுபோல குறுக்கு வழிகளில் கீழ்த்தனமாக சிந்தித்திருந்தால் ;

சிங்கள தேசத்தை போதையில் மிதக்கவிட்டிருக்கமுடியும். இரசாயன குண்டுகளை வெடிக்கச்செய்து பலசந்ததிகளையே அழித்திருக்க  முடியும். உயிரியல் போர்முறைமூலம் சத்தமின்றி சாவைக் கொடுத்திருக்கமுடியும் ; ஆகக்குறைந்தது சிறிலங்காவின் விவசாய பொருளாதாரத்தை வீணடித்திருக்க முடியும்.

ஆனால் அவர்கள் என்றுமே இவ்வாறான ஈனத்தனங்களில் ஈடுபடவில்லை.

“தமிழ்மக்களின் உரிமைக்காகவே பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இறுதிவரை அவர்கள் கொள்கையில் உறுதியாக நின்று போராடி மரணித்தார்கள். அப்படிப்பட்ட விடுதலைப்புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தி கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம். விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னர்தான் வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகின்றது“.

இவ்வாறு  மைத்திரியின் கூற்றுக்கு காட்டமாக மறுப்புத் தெரிவித்திருப்பது ஒரு தமிழரோ அல்லது தமிழீழ விடுதலைப் போராட்ட ஆதரவாளரோ அல்ல. விடுதலைப்புலிகளை பல சமர்களில் எதிர்கொண்ட சிறிலங்காவின்  முன்னைநாள் படைத்தளபதி சரத்பொன்சேகா. இவ்வாறு அவர் உரையாற்றிய இடம் சிறிலங்காவின் நாடாளுமன்றம்.

விடுதலை வீரர்களின் உயர்வான கட்டுப்பாடுகளும், மேன்மை மிக்க ஒழுக்கவியல் விழுமியங்களும், போரிடும் வீரமும் இன்று என்றுமில்லாதவாறு சிறிலங்காவில் மட்டுமன்றி  உலகெங்கும் உணரப்படுகிறது.

இந்த நிலையில் சிறிலங்கா சனாதிபதியின் இத்தகைய கூற்றை நாம் சாதாரணமானதாக எடுத்துவிடமுடியாது. சிறிலங்கா சிங்கள அரசு தமிழரை இல்லாதொழிக்கும் தனது நீண்டகால நிகழ்ச்சிநிரலை பல வழிகளிலும் மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றிவருகிறது. இந்தவகையில் இதுபோன்ற நடவடிக்கைகளும் அந்த நிகழ்ச்சிநிரலின் ஒருபகுதியாக இருக்கலாம்.