‘போட்ஸ்வானா’ 2 லட்சம் வருடத்திற்கு முன்பு முதல் மனிதனின் தாயகமாக இருந்திருக்கலாம்

போட்ஸ்வானா நாட்டிலுள்ள சம்பேசி நதியின் கிழக்கு பிராந்தியம்தான் தற்போதுள்ள மனிதகுலத்தின் தாயகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.தற்போது உப்பளங்கள் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரி இருந்துள்ளது.

அது 2 லட்சம் வருடத்துக்கு முன் நம் முன்னோர்களின் தாயகமாக இருந்திருக்கலாம்.அங்குள்ள காலநிலை மாறுவதற்கு முன் 70,000 வருடங்கள் அங்கு நம் முன்னோர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அதன்பிறகு பசுமையான வளமான நிலங்கள் விரிவடைந்ததால், அவர்கள் ஆப்ரிக்காவைவிட்டு வெளியேற அது வழிவகை செய்திருக்கலாம். என்கின்றனர்.

“தற்போதைய மனிதர்கள் 2 லட்சம் வருடங்களுக்கு முன் ஆப்ரிக்காவில் தோன்றியதாக தெளிவாக தெரிகிறது.” என்கிறார் ஆஸ்திரேலியாவில் உள்ள கார்வன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் மரபியலாளர் பேராசிரியர் வனீசா ஹேயிஸ்.

“அவர்கள் எங்கு தோன்றினார்கள், அடுத்தடுத்து அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதுதான் விவாதிக்கப்பட்டு வரக்கூடிய விஷயமாகும்.” என்கிறார் அவர்.ஆனால், இத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்கள் ஹேயிசின் முடிவுகள் மீது ஐயம் கொண்டுள்ளனர்.

வடக்கு போட்ஸ்வானாவில் உள்ள சம்பேசி படுகையின் தெற்கு பகுதியில்தான் இந்த இடம் உள்ளது.மக்காடிக்கடி என்னும் ஆப்ரிக்காவின் பெரிய ஏரி அமைப்பில் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். தற்போது அந்த பகுதி உப்பளம் நிறைந்த பகுதியாக உள்ளது.

“அது மிகப்பெரிய ஒரு பகுதி, அது மிகவும் ஈரப்பதம் மிகுந்து செழிப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கும்.” என்கிறார் பேராசிரியர் ஹேயிஸ்.109451384 e9cc0338 f3d4 4670 91fc d4d2d6f6e83c 'போட்ஸ்வானா' 2 லட்சம் வருடத்திற்கு முன்பு முதல் மனிதனின் தாயகமாக இருந்திருக்கலாம்

எனவே அது தற்கால மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு தகுந்த வாழ்விடமாக இருந்திருக்கும் என பேராசிரியர் ஹேயிஸ் தெரிவிக்கிறார்.

அங்கு 70,000 வருடங்கள் வாழ்ந்த பிறகு, மக்கள் இடம் பெயரத் தொடங்கிவிட்டனர். மழை பொழிவில் ஏற்பட்ட மாற்றத்தால், 1,30,000 முதல் 11,000 வருடங்கள் முன்புவரை மூன்று முறை அலையலையாக இடம் பெயர்வுகள் நடைபெற்றன.

முதல் முறை இடம் பெயர்ந்தவர்கள், வட கிழக்கை நோக்கியும், இரண்டாம் முறை இடம் பெயர்ந்தவர்கள், தென் மேற்கு திசை நோக்கியும் இடம் பெயர்ந்தனர். மூன்றாம் தரப்பினர் அங்கேயே தங்கிவிட்டனர்.

இது, மனித குடும்பத்தின் வரலாற்றை, அங்கு வாழும் நூற்றுக்கணக்கான ஆப்ரிக்கர்களின் மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏவை கொண்டு கண்டுபிடிப்பதன் அடிப்படையில் அமைந்தது.

மரபியலை, புவியியல் மற்றும் கால நிலை கணினி மாதிரி உருவகப்படுத்துதலுடன் இணைத்து, 2 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்க கண்டம் எவ்வாறு இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால் நேச்சர் என்ற புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வை ஒரு வல்லுநர் எச்சரிக்கையுடன் அணுகுகிறார்.

மைட்டோ காண்ட்ரியல் டிஎன்ஏவை மட்டும் வைத்துக் கொண்டு மனிதகுலத்தின் தோற்றம் பற்றிய கருத்தை மீட்டுருவாக்கம் செய்ய முடியாது என்கிறார் அவர்.

இந்த ஆய்வில் தொடர்பில்லாத, லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் ஸ்டிரிங்கர், ஹோமோ சாப்பியன்ஸின் பரிணாம வளர்ச்சி ஒரு சிக்கலான செயல்முறை என்று தெரிவிக்கிறார்.