பொறுமையிழந்த போப்பாண்டவர்,மன்னிப்புக் கோரினார்.

புத்தாண்டு வாழ்த்து கூறியபோது கையை பிடித்து இழுத்த பெண்ணின் கையை தட்டியதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார். புத்தாண்டை முன்னிட்டு இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டியில், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதன்பின், புனித பீட்டர் சதுக்கத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

குழந்தைகளை தொட்டு ஆசிர்வதித்தார். சிலர் போப்பிடம் கை குலுக்கினர். அப்போது, பெண் ஒருவர் போப்பின் கையை இறுக பற்றி இழுத்தார். இதனால் நிலை தடுமாறிய 83 வயது போப், சற்று கோபம் அடைந்தார். அந்த பெண்ணின் கையை இருமுறை தட்டி, தனது கையை விடுவித்து சென்றார். மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பிய போப், கூட்டத்தில் இருந்து சற்று விலகியே சென்று ஆசி வழங்கினார். குழந்தைகளை மட்டும் தொட்டு ஆசிர்வதித்தார்.

கைபிடித்த இழுத்த பெண்ணின் கையை, போப் தட்டிச் சென்ற வீடியோ காட்சி வைரலாக பரவியது. போப்பின் செயல் சரிதான் என்ற டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்தனர். ‘அவரும் மனிதர்தான். கையை இறுக பற்றி இழுக்கும்போது அவரால் வேதனையை தாங்கி கொள்ள முடியாது,’ என்று ஒருவர் தெரிவித்தார். இந்நிலையில், பெண்ணின் கையை தட்டி விட்டு சென்றதற்காக போப் பிரான்சிஸ் நேற்று மன்னிப்பு கோரினார். ‘‘பல நேரங்களில் நாம் பொறுமையை இழக்கிறோம். இது எனக்கும் நேரிடுகிறது. நேற்று முன்தினம் நடந்த மோசமான சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,’’ என்றார்.