பொருளாதார நெருக்கடி – பயண எச்சரிக்கையை நீக்கக் கோருகின்றது சிறீலங்கா

சிறீலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு இராஜதந்திரிகளிடம் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (24) கேட்டுக் கொண்டார்.

இராஜதந்திரிகளுடனான  ஒரு சந்திப்பொன்றில் பேசிய பிரதம மந்திரி, மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் புனித ஞாயிறு தாக்குதல்களின் விசாரணையின் முன்னேற்றம் பற்றி பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் வெளியுறவுத் தூதர்களிடம் கூறும் போது, நாட்டில் தீவிரவாத சம்பவங்களை தூண்டிவிடுவோர் மீது சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என கூறியதாக பிரதமர் அலுவலகம் தனது செய்தியாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மந்திரி ருவன் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளியுறவு விவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே கடந்த மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து. அனைத்துலக நாடுகள் தமது மக்களை சிறீலங்காவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன. இந்த பயண எச்சரிக்கையானது சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. சுற்றுலாப்பயணத்துறையும் அதனுடன் இணைந்தத விமானப்போக்குவரத்து மற்றும் ஆடம்பர விடுதிகளின் வருமானம் என்பன கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்கள் வேலை வாய்ப்புக்களையும் இழந்து வருகின்றனர்.