புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என்கிறார் சுமந்திரன்

புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது – கொச்சைப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அவர்கள்  உயிரைத் தியாகம் செய்திருக்கின்றார்கள்.“எனத் தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

சிங்கள ஊடகம் ஒன்றிற்கு அண்மையில் வழங்கியிருந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்த சிலகருத்துகள் தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.அவர்சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் கூட அவரின் கருத்துகளுக்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் .இந்த நிலையிலேயே சுமந்திரன். தற்போது மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் – ஒரு குறித்த காலகட்டத்தில் தமிழர் விடுதலை பெறவேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்து செயலாற்றிப் போராடிய ஒருவர் பிரபாகரன். அவரது முறைமைகள் எனக்கு ஒவ்வாததாக இருந்தாலும் அவருடைய அர்ப்பணிப்பு என்னுடைய அர்ப்பணிப்பையும் வேறு பலருடைய அர்ப்பணிப்பையும் விடக் கூடுதலாகவே இருந்திருக்கின்றது” .

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவறு என்ற நிலைப்பாட்டை நான் எப்போதுமே எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகம் ஒன்றில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இப்படிக் கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ;

“புலிகள் செய்த ஆயுதப் போராட்டம் தவறுஎன்று நான் எப்போதுமே சொன்னதில்லை. இதுகுறித்து பல தடவைகள் பல விளக்கங்களை நான் சொல்லியுள்ளேன். அந்த விளக்கங்கள் எல்லாம் ஒரேவிதமான விளக்கங்கள்தான்.

அன்றைய நேரத்தில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அவர்கள் எடுத்த முடிவை இன்றைக்கு நாங்கள் விமர்சிக்க முடியாது. நான் முன்னர் தெளிவாகச் சொல்லியுள்ளேன். புலிகளின் தியாகங்களை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது – கொச்சைப்படுத்த முடியாது என்று. ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றார்கள்.

தங்களுக்காக அல்ல. எங்களுக்காக. அவர்களின் வழிமுறை என்னுடைய வழிமுறையாக இல்லாவிட்டாலும் அவர்களின் தியாகங்கள் போற்றப்படவேண்டும் என்பது எனது உறுதியானநிலைப்பாடு. அந்தத் தியாகங்களை வாக்குச் சேகரிப்பதற்காக நான் பயன்படுத்தவேமாட்டேன்.”