புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது – அமலநாயகி

புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நாங்கள் தொடர்ந்து போராடிவருகின்றோம். இனியொரு கடத்தல் காணாமல்போதல் நடைபெறக்கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளரும் அச்சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவியுமான திருமதி அமலதாஸ் அமலநாயகி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

கேள்வி: தற்போது சிறீலங்கா அரசியலில் தோன்றியுள்ள சூழ்நிலையில் உங்கள் போராட்டத்தை மேற்கொண்டு முன்நகர்த்துவதற்கான திட்டம் என்ன?

நாங்கள் இந்த நாட்டில் எமது உறவுகளை தேடி முன்னெடுக்கும் போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்தில் இருந்து எந்த எதிர்பார்ப்பினையும் செய்யாமலேயே போராடிவருகின்றோம். தற்போதுள்ள அரசாங்கத்திடம் இருந்து எந்தவித தீர்வும் எங்களுக்கு கிடைக்கப்போவதுமில்லை.

தற்போதைய சூழலில் தொடர்ச்சியாக போராட்டங்களை கொண்டுசெல்லமுடியுமா என்ற சந்தேகம் உள்ளபோதிலும் வலியுடன் போராடிவரும் மக்கள் என்ற வகையில் எவ்வாறான தடைகள் ஏற்பட்டாலும் எங்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும். இன்று தமிழர்களுக்கான குரலும் பாராளுமன்றத்தில் குறைந்துள்ளது.கடந்த காலத்தில் 22 உறுப்பினர்கள் 16 உறுப்பினர்கள் என்று எமது பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் இருந்தபோதும் அவர்களினால் எதுவும் செய்யமுடியாத சூழ்நிலையே இருந்தது. இன்று அந்த பிரதிநிதித்துவம் குறைந்துள்ள நிலையில் அவர்களினால் இனிவரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும் என்பதும் கேள்விக்குறியே.

கேள்வி: புலம்பெயர் தமிழ் சமூகமும், வெளிநாடுகளும் உங்களின் இந்த போராட்டத்திற்கு எந்த வகையான ஆதரவுகளை வழங்கவேண்டும் என நீங்கள் எதிர்பார்கிறீர்கள்?

இன்று புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நாங்கள் தொடர்ந்து போராடிவருகின்றோம். குறிப்பாக இளையோர் மத்தியில் எமக்கான ஆதரவு தளம் உணர்வுரீதியாக அதிகரித்துவருகின்றது.இந்த ஆதரவு தளமே எமது போராட்டத்தினை உறுதியுடன் முன்நகர்த்துகின்றது.

Amala nayagi 1 புலம்பெயர் மக்கள் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு தளம் உறுதியாக உள்ளது - அமலநாயகிகனடாவில் உள்ள இளையோர் அமைப்பினால் பாரிய நடைபவனியொன்று சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகின்றோம்.இவ்வாறு ஜேர்மன், இலண்டன் உட்பட பல நாடுகளில் உள்ள இளைஞர்களினால் தாயகத்தில் நடைபெற்ற இன அழிப்பு, கடத்தல் காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டி முன்னெடுக்கும் தொடர்ச்சியான போராட்டம் வலுவானதாக இருப்பதன் காரணமாகவே சர்வதேசம் இன்று எம்மை நோக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகள் தங்கள் மத்தியில் உள்ள வேறுபாடுகளை மறந்து அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து பலமான குரலைவெளிப்படுத்துவதன் ஊடாக சர்வதேசம் எங்களுக்கான தீர்வினை வழங்குவது குறித்து சிந்திக்கும் நிலைமையேற்படும்.சர்வதேச நாடுகளைப்பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் கடத்தல்கள்,இனஅழிப்புகளை செய்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.இன்று நாங்கள் இலங்கையில் எங்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாடு உள்ள நிலையில் எமக்கான நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.

கேள்வி: 1200 இற்கு மேற்பட்ட நாட்களை கடந்து மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தின் போது நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

72 தாய்மார்கள் என்ன 750தாய்மார்கள் இறந்தாலும் இந்த அரசாங்கம் எங்களை திரும்பிக்கூட பார்க்கமாட்டாது என்பதே நாங்கள் கற்றுக்கொண்டபாடகுமாகும். எங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று வெளிவேசத்துடன் நுழைந்து எமது போராட்டத்தினை சின்னாபின்னமாக்கும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.எங்களின் குரல்வலைகளை நசக்கும் செயற்பாடுகளை மிகவும் நாசுக்கானமுறையில் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றனது.இந்த நாட்டில் உள்ள எந்த அரசும் எமக்கான நீதியை வழங்கப்போதில்லை.மாறாக எமது போராட்டத்தினையும் எமது உணர்வினையும் இல்லாமல்செய்யலாம் என்ற வகையிலேயே செயற்படுகின்றது.

கேள்வி: உங்களின் இந்த போராட்டத்திற்கு தாயகத்து மக்கள் அதிக ஆதரவுகளை வழங்கி வருகின்றார்களா?

உண்மையில் தாயகத்தில் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து கிடைக்கும்ஆதரவு காரணமாகவே நாங்கள் தொடர்ச்சியான முறையில் பல போராட்டங்களை பாரியளவில் முன்னெடுக்கும் நிலையேற்பட்டது.

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் தமிழ் உறவுகள் எமக்கான போராட்டத்திற்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கிவருகின்றது.கடந்த முறை மட்டக்களப்பில் இந்த போராட்டத்தினை மேற்கொண்டபோது ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு எங்களுக்கு ஆதரவு வழங்கினர்.இளையோர் மத்தியில் எமது போராட்டத்திற்கான ஆதரவு அதிகளவில் காணப்படுகின்றது.நாங்கள் எங்கள் சொந்தங்களை இழந்து அனுபவித்த வேதனைகளையும் சோதனைகளையும் எமது எதிர்கால சமூகம் அனுபவிக்ககூடாது. இனியொருபோதும் எமது சமூகத்தில் யாரும் கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்படும் சூழ்நிலையுருவாகக்கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் இவ்வாறான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.