புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வடக்கு ஆளுநர் விடுக்கும் அவசர கோரிக்கை

படைத்தரப்பு, பொலிசார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (12.09) நடைபெற்றது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் படைத்தரப்பு பொலிசார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாகவே இக்கலந்துரையாடல் அமைந்தது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஆளுநர் அவர்களின் இந்தக் கலந்துரையாடல் முதற்கட்டமாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடலின் போது படைத்தரப்பு, பொலிசார், திணைக்களங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் ஒவ்வொருவர் அடங்கலாக மாவட்ட ரீதியிலான குழு நியமிக்கப்பட்டு அவர்கள் தனியார் காணிகளை அடையாளம் கண்டு இது தொடர்பாக மேலதிக விபரங்களை சேகரிக்குமாறும், அந்த விபரங்களின் அடிப்படையில் எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெறும் என்றும் ஆளுநர் அவர்கள் இக்கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் படைத்தரப்பு, பொலிசார் மற்றும் திணைக்களங்கள் வசமுள்ள பொதுமக்கள் காணிகளின் உரிமையாளர்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருவார்களேயானால் அவர்கள் உடனடியாக தமது காணிகளை பதிவு செய்யுமாறும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராசா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்கள், கிளிநொச்சி மற்றும் வன்னிப் படைகளின் கட்டளை அதிகாரிகளும், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.