புதிய அரசமைப்பு நிறைவேறா விட்டால், பதவி விலகுவேன் – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய அரசமைப்பு உருவாக்கத்தை முற்றாக கைவிட்டதாக கூறப்படும் தீர்மானத்தில் உண்மைத் தன்மை இல்லை என்றும், அப்படி ஒரு தீர்மானம் எடுக்கப்படும் போது, தான் பதவி விலகுவேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் பதவி விலகவேண்டும் என தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பாக விளக்கும் போதே சுமந்திரன் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

பதவி விலகுவது தொடர்பான தீர்மானத்தை நானே எடுக்க வேண்டும். அதை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும், அரசியலமைப்பு நிறைவேறா விட்டால், நான் பதவி விலகும் முடிவில் தான் இருக்கின்றேன்.

எங்கள் மீது இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதை நாங்கள் தவிர்க்க முடியாது. கூட்டமைப்பிற்குள்ளேயும், வெளியிலும் இருப்பவர்கள் விமர்சிப்பது ஜனநாயக சூழலில் சாதாரணமானதே. அதைக் குறித்து நாங்கள் விசனப்பட மாட்டோம். புதிய அரசியலமைப்பு முற்றாக கைவிடப்பட்டது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.

தேர்தலிற்குப் பின்னர் மகிந்த ராஜபக்ஸ என்னுடன் நடத்திய சந்திப்பில், இப்பொழுது அதைச் செய்ய முடியாது. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதைச் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றார். அவர்கள் பேச்சை நம்பி நான் பேசவில்லை.

என்னை பதவி விலக வேண்டும் என்று சொல்பவர்கள், தாங்கள் அதனால் ஏதாவது அரசியல் இலாபம் அடையலாம் என சிந்திக்கின்றனர் போலும்.

எனது வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவேன்.  புதிய அரசியலமைப்பு உருவாகுவதற்கான சந்தர்ப்பம் வரும்வரை நான் பதவி விலக மாட்டேன். அப்படியான ஒரு சந்தர்ப்பம் நிகழா விட்டால், நான் நிச்சயமாக பதவி விலகுவேன். என சுமந்திரன் தெரிவித்தார்.