பிரித்தானிய பிரதமரின் ‘முன்கூட்டிய தேர்தல்’ கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததையடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கோரிக்கையை எம்.பிக்கள் நிராகரித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் சட்டமூலத்தை தாக்கல் செய்து, பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பலமுறை வாக்கெடுப்பு நடந்த போதும் அப்போதைய பிரதமர் தெரசா மே அரசு தோல்வியடைந்ததால் அவர் கடந்த ஜூன் மாதம் பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதற்காக கடந்த 3ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி பிலிப் லீ, அக்கட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சியில் இணைந்ததையடுத்து பொரிஸ் ஜோன்சன் பெரும்பான்மையை இழந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு ஒக்டோபர் இரண்டாவது வாரத்திற்குள் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.