பிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பிரெக்ஸ்ட் உடன்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியாததால் பிரதமர் திரேசா மே பதவி விலகியிருந்தார்.

ஆட்சியில் உள்ள கட்சியின் தலைவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்ற பிரித்தானியாவின் சட்டத்திற்கு அமைவாக ஆட்சியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது.

இதில் இறுதிச்சுற்றில் ஜெரமி கன்டிற்கும், ஜோன்சனுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் ஜோன்சன் 92,153 வாக்குகளும், கன்ட் 46,656 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

நேற்று (23) இந்த முடிவு அறிவிக்கப்பட்டபோதும், இன்று (24) பிற்பகல் பக்கிங்கம் அரன்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவி ஏற்புக்கான கடிதத்தை உத்தியோகபூர்வமாக ஜோன்சன் கையளிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.