பிரித்தானியாவின் கரோ நகரசபை முன்னாள் முதல்வருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சிறீலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோவுடன் இணைந்து பிரித்தானியாவின் கரோ பகுதி நகரசபையின் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்தமைக்காக சிறீலங்கா முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவரும் கரோ நகரச-பையின் முன்னாள் முதல்வருமான கரீமா மரிக்கர் மீது கரோ நகரசபை ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை நகரசபை அதன் இணையத்தளத்திலும், பத்திரிகையிலும் பிரசுரித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பெர்ணான்டோ தமிழ் மக்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிவேண்டி அமைதியான வழியில் போராடிய தமிழ் மக்களை நோக்கி படுகொலை செய்வோம் என உடல்மொழியினால் பெர்ணான்டோ எச்சரித்திருந்ததும், அதற்கு எதிராக தமிழ் மக்கள் பிரித்தானியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததும் நாம் அறிந்தவையே.

ஆனால் தமிழ் மக்கள் அதிகம் வாழும் கரோ பகுதியில் முன்னர் நகரசபைத் தலைவராக பணியாற்றிய தொழிற்கட்சியைச் சேர்ந்த மரிக்கர், நகரசபையின் முதல்வருக்குரிய சங்கிலியை அணிந்தவாறு பெர்ணான்டோவுடன் இணைந்து புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்டு தமிழ் மக்களின் மனங்களை வேதனைப்படுமாறு நடந்து கொண்டதற்கு எதிராக மேற்கொண்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்தே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரசபை உறுப்புரிமைச் சட்டத்தின் 5 ஆவது சரத்தை மரிக்கர் மீறி-யுள்ளதாகவும் இது நகரசபைக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் செயல் எனவும் விசாரணைகளை மேற்கொண்ட செயற்குழு தெரிவித்துள்ளது.