பிரான்சில் இடம்பெற்ற படுகொலை செய்ப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவு தினம்

இலங்கையில் இடம்பெற்ற உண்மைத் தன்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லிய ஊடகவியலாளர்கள் படுகொல செய்யப்பட்டதை நினைவுகூரும் நிகழ்வு நேற்று(19) பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வை லண்டனை தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.

நேற்று மாலை 3 மணியளவில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கைதுகள், படுகொலைகள், சித்திரவதைகள், இன்றைய தமிழ் தேசிய அரசியலும் தமிழ் ஊடகவியலாளர்களும் என்ற தொனிப் பொருளில் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

புலம்பெயர் ஈழத் தமிழ் ஊடகங்களும் அதன் நோக்கு நிலையும் ஈழப் போராட்டத்தில் ஆகுதியான ஊடகவியலாளர்களும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் யுத்தத்திற்குப் பின்னரான மனித உரிமைகள் அறிக்கையிடலும் இடம்பெற்றது.

தமிழ் ஊடகவியலாளர்களின் சர்வதேச ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊடகங்கள் உண்மைக்கான போராட்டத்தில் வெற்றியும், தோல்வியும் என்ற பொருளில் ஊடகவியலாளரான சண்.தவராசா, பாலச்சந்திரன், சுதன்ராஜ் துரைசிங்கம், இரா.தில்லைநாயகம், யோகரட்ணம் செல்வரத்தினம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

France1 பிரான்சில் இடம்பெற்ற படுகொலை செய்ப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் நினைவு தினம்இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களின் ஆவணப்பட வெளியீடு மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியராக இருந்து சேவையாற்றிய ஞானசுந்தரம் குகநாதனின் ஊடக சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கியது.

இந்நிகழ்வின் விளக்க உரையினை கோபி ரட்ணமும், வரவேற்புரையை ஒன்றியத்தின் செயலாளர் குகன், குழு விவாத ஒழுங்கமைப்பினை பிறேம் சிவகுரு மற்றும் குகநாதனுக்கான விருதினை நிர்வாக சபை உறுப்பினர் கந்தசாமி அவர்கள் வழங்கி வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.