பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விக்னேஸ்வரனின் புதிய கூட்டணி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் சார்பில் போட்டியிட முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டணி  அமைக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.

முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து, அதை தேர்தலில் முன்னிலைப்படுத்துவதற்கு, வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழுவொன்று கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் புத்திஜீவிகள் குழுவில் சமய மதத் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் அடங்கியுள்ளதாகவும், இவர்கள் அடுத்து வரும் நாட்களில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது பல்கலைக்கழக மாணவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழ் தேசியப் பிரதேசத்தில் உள்ள ஐந்து கட்சிகளை ஒருங்கிணைத்து 13 அம்சக் கோரிக்கை தயாரிக்கப்பட்டிருந்த போதும் அடுத்தகட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது போய்விட்டது.

இந்த கட்சிக் கூட்டமைப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்,ஸ்ரீகாந்தா தலைமையிலான ரெலோ அமைப்பு ஆகியவை பங்குபற்றியிருந்தன.

பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஐந்து கட்சிகளை ஒன்றுசேர்த்து ஒன்றுகூடலை அமைத்து கோரிக்கைகளை முன்வைத்த போதும், இறுதியில் இக்கட்சிகள் தனித்தனியாக தமது தீர்மானத்தை வெளியிட்டிருந்தமையால் பலனற்றுப் போயிற்று.

எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக அறியப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகள் நேரகாலத்துடன் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்திஜீவிகள் குழுவினைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணிக்கும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இடையில் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, கொள்கையளவில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், எனவே இக்கட்சிகள் புதிய கூட்டணியில் இணைந்து கொள்வதற்கு எந்தவித தடையும் இருக்காது என அக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.