பாதுகாப்பு அமைச்சு கோட்டாவுக்கு வழங்கப்படும்? விஜயதாச தனிநபர் பிரேரணை

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு ஏதாவது அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் அரசமைப்புத் திருத்தத்துக்கான தனிநபர் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ விரைவில் இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் அரசிதழில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ் தெளிவற்ற சரத்தாக மாறியுள்ள – ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

“அரசமைப்பின் 43 வது பிரிவின், திருத்தமாக கொண்டுவரப்படும் இந்த விதியின் கீழ், இலங்கை ஜனாதிபதியினால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு எந்த அமைச்சுகளையும் வைத்திருக்க முடியும். ஓர் அரசமைப்பில் தெளிவு இல்லாத விடயங்கள் இருக்க முடியாது. அதனால்தான், 19 ஆவது திருத்தம் நிறைய குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதால், இந்தத் திருத்தத்தை அறிமுகப்படுத்தவுள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில் ஜனாதிபதியிடமே, பாதுகாப்பு அமைச்சு இருந்துவந்தது. எனினும், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சராக இன்னமும் எவரையும் நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.