பாகிஸ்தானில் இரகசிய கடற்படைத் தளம் அமைக்கும் சீனா

பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில் சீனா இரகசியமாக கடற்படைத் தளம் அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகெங்கும் தனது வணிக செயற்பாடுகளை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா, தற்போது மத்திய கிழக்கு மற்றுமு் ஆபிரிக்க நாடுகளில் அதிக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பகுதிகளுக்கு கடல்வழியாக வணிகப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென்றால், தென்சீனக் கடல் அல்லது இந்தியக் கடலைச் சுற்றியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேரம் அதிகம் தேவை என்பதோடு செலவும் அதிகமாகும்.

இவற்றை குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகளையும் தற்போது சீனா மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் உள்ள பொருட்களை தென்சீனக் கடல் வழியாக அனுப்பாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் வழியாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்றால், அங்கிருந்து அரபிக் கடல் வழியாக எளிதில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் மூலம் பல்வேறு வணிகத் திட்டங்களை சீனா பாகிஸ்தானில் செயற்படுத்தி வருகின்றது. இதற்கு சீனா பல இலட்சம் கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பெரியளவிலான கட்டுமானத் தளங்களை வடிவமைத்து வருகின்றது. செயற்கைக் கோளிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாதுகாப்புத்துறை இதழான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தை சீனா கடற்படைத் தளமாக பயன்படுத்திக் கொள்ளும் என கருதப்படுகின்றது.