பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம் என்பது வடக்கில் இருந்து வந்த ஜைன மதமல்ல பழந்தமிழர் மத்தியில் உருவான ஆசீவகம் என்று பேசுபவர்களில் பிரபலமானவர். இதுபற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளையிடம் நான் கேட்டபோது பொறுத்திருந்து பார்ப்போம் என்று மட்டுமே சொன்னார்.

ஆ.வேலுப்பிள்ளை, ஒரு நூலில் பின்வருமாறு கூறுகிறார்   (Jainism in Tamil Inscriptions and Literature, in Buddhism among Tamils, Ed: Peter Schalk & A Velupillai, Uppsala University, 2002. ) தனிப்பட்ட ஒரு சமண பொதுமக்கள் சமூகம் அக்காலத்தில் உருவாகாமல் இருந்ததால், சமணக் கருத்துக்கள் காணப்படும் பல தமிழ் நூல்களின் ஆக்குணர் சமணரே என்று அடையாளப்படுத்துவதில் பல தடங்கல்கள் ஏற்படுகின்றன. மிகச்சிறந்த பழந்தமிழ் நூல்கள் என ஆய்வாளரால் கருதப்படும் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் மூன்றும் சமணம் சார்ந்தவையானாலும் அவற்றின் ஆக்குணர் சமணர் என்று திட்டவட்டமாக கூறமுடியாமல் உள்ளது.

 இதேவகையில், பௌத்த துறவிகளும் தமிழகத்தில் அக்காலத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சிலப்பதிகாரம் ஐந்தாம் நூற்றாண்டில் இருந்த இந்நிலையை, அதாவது ஒரே குடும்பத்துக்குள் பல சமய சார்புத்தன்மை இருந்துள்ளதை,  பிரதிபலிக்கிறது.

 கோவலனின் தந்தையும் பொதுமகனுமான மாசாத்துவான் ஒரு பௌத்த துறவியாகவும், கண்ணகியின் தந்தையும் ஒரு பொதுமகனுமான மாநாயகன் ஒரு சமணத் துறவியாகவும் சென்றதை அது கூறுகிறது. திருஞானசம்பந்தரின் காலத்திய வேறொரு சைவசமய நாயனாராகிய அப்பர் சமணத்திற்கு ஈர்க்கப்பட அவர் சகோதரி சைவதொண்டராக இருந்திருக்கிறார்.a 2 பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

 ஒரு சமணர் என்று கருதப்பட்ட ஒருவர் சமணத்துறவியாகவே இருந்துள்ளதாகத் தெரிகிறது. 7ம் நூற்றாண்டில் கூட ஒரு தனிப்பட்ட சமணப்பொதுமக்கள் சமூகம் இல்லாதிருந்தமையால் போலும் திருஞானசம்பந்தரும் அவருடைய சமணம் மற்றும் பௌத்தத்திற்கு எதிரான வாதங்களில் சமணபௌத்த துறவிகளின் வெளித்தோற்றத்தைப் பற்றியே சாடியிருக்கிறார். சமயவாதங்கள் செய்வதற்கான பட்டி இயக்கம் பெருமளவில் பாமரமக்களை தன்வசமிழுக்க ஆரம்பித்த பின்னரே தமிழகத்தில் ஒரு சிறிய தனிப்பட்ட சமண சமூகம் உருவாகத் தொடங்கியிருக்கிறது. இவ்வாறு உருவான சமூகத்திற்கு இறந்த காலத்தின் நீண்ட தொடர்ச்சியான சமணத்துறவிகள் பற்றிய நினைவுகள் இருக்கவில்லை.’

7ம் நூற்றாண்டுக் காலத்தில் ஆரம்பமான பக்தி அலைகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழ் இலக்கியங்களில் 400க்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பெற்ற சங்ககாலக் கவிதைத் தொகுப்புகள் ஒன்று. இவை ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே இயற்றப்பட்டவை. சிறிது பிற்பட்ட காலத்திலேயே சமணரால் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்கள் தோன்றுகின்றன.

ஆக, சமயம் சாராத மிகப்பழைய சங்கக்கவிதைகளை விட, ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் பெரும்பான்மையானவை சமணராலேயே எழுதப்பட்டவை. ஐம்பெரும் காப்பியங்களுள் அடங்கும் ஏனைய மூன்று காப்பியங்களும், மேலும் ஐந்து சிறுகாப்பியங்கள் எனப்படுபவையும், 7ம் நூற்றாண்டுக்குப் பிந்தியவையாகக் கணிக்கப்படுகிறது.

இவற்றில், ஒரு பௌத்தரால் இயற்றப்பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை தவிர்த்து ஏனையவை அனைத்தும் சமணராலேயே இயற்றபெற்றவை. 7ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்திலும் சமணம் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் தொடர்ந்து பல ஆக்கங்களை தந்திருக்கின்றது.  முக்கியமாக சோழ இராச்சியம் மேலோங்கி இருந்த 10ம் நுற்றாண்டை அண்மிய காலத்தில் சமண இலக்கியங்கள் பல எழுதப்பட்டிருக்கின்றன. 15ம் நூற்றாண்டு காலத்திற்குப் பின் சமண இலக்கியப் படைப்புக்கள் இல்லாது போய்விட்டது. சமணம் அளித்த இவ்விலக்கியங்கள், திருக்குறளைப்போலவே பகுத்தறிவுக்குட்பட்டவை.b பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

தமிழ் இலக்கணத்திற்கும் சமணத்தின் பங்களிப்பு மிக பரவலானது. முன்பே குறிப்பட்டது போல் தொல்காப்பியம் ஒரு பெரிய தமிழ் இலக்கண நூல். பிந்தைய நூற்றாண்டுகளில் சமணர் இயற்றிய வேறு இரண்டு இலக்கண நூல்கள் நேமிநாதமும் நன்னூலும் ஆகும். நேமிநாதம் தொல்காப்பியத்தை சுருக்கித்தர முயற்சிக்கிறது. பிந்தைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சிறந்த இலக்கண நூலாக நன்னூல் ருதப்படுகிறது. அவிநயம் எனப்படும் வேறொரு சமண இலக்கண நூல் இன்று சிறு சிறு பகுதிகளாகவே கிடைக்கப் பெறுகின்றன.

ஏறத்தாழ 7ம் நூற்றாண்டளவில் இப்பகுத்தறிவு சார்ந்த இலக்கிய பண்பாடு, திருஞானசம்பந்தரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பக்தி கலாசாரத்துடன் மாற்றமடைந்தது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவையும் இப்பக்தி கலாசாரத்துக்கு வலுவூட்டின. தமிழிலும் புராணங்களும் கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களும் இயற்றப்பட்டு இப்பக்தி கலாசாரத்துக்கு மேலும் உரமூட்டின. தமிழ் பக்தியை ஒட்டிய தத்துவமும் எழுதப்பட்டது. பிரமாண்டமான இந்து கற்கோவில்கள் கட்டப்பட்டன.

இன்று, தமிழரின் பக்தி இலக்கியங்களிலும், தமிழரின் பழமையான பகுத்தறிவுக்குட்பட்ட இலக்கியங்களிலும் பெருமை கொள்ளும் தமிழர்கள், இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகளை பற்றிய விழிப்புணர்வற்று இருக்கிறார்கள். இவ்விரண்டு இலக்கியப் பண்பாடுகளும் 7ம் நூற்றாண்டளவில் கடுமையாக மோதிக்கொண்ட இரு வேறு சமயங்களிலிருந்து உருப்பெற்றவை என்பதையும் உணராதுள்ளனர். இன்றைய தமிழர்களோ, வெறுக்கத்தக்க சமணத்துக்கு எதிராக திருஞானசம்பந்தர் வாதிட்டு வெற்றி கொண்டார் என்று பெருமை கொள்ளக் கற்பிக்கப்படுகிறார்கள்.c பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

இன்று தமிழ்நாட்டில் பயணிகளுக்கு கவர்ச்சியாக காட்டப்படுவது ஆயிரமாண்டுகளுக்கு பிந்தைய கோவில்களே. இதற்கு முற்பட்ட சமணத்தலங்கள் பயணிகளுக்கு விளம்பரப்படுத்த படுவதில்லை. இத்தளத்தில் காணப்படும் தமிழ்நாட்டின் சமண இடங்களின் பட்டியல் பிரமிப்பை தரும்.

http://www.tamiljains.org/historic-tamil-jain-sites.

தமிழர் தம் வரலாற்றறிவை மேம்படுத்துவதானால், பக்தி இயக்கம் எனப்படும் பெரும் அலை உண்டாக்கிய மாற்றங்களை ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.