பலமான மாற்று அணியை உருவாக்க விக்கியும் கஜனும் இணைய வேண்டும் – கருத்துக்கணிப்பில் மக்கள் தீர்ப்பு

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான அறிக்கைப் போர் பலமான மாற்று அணி ஒன்றை எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு கடும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் தெரிவித்திருக்கின்றது.

விக்கினேஸ்வரன் கஜேந்திரகுமாரை உள்ளடக்கிய மாற்று அணி ஒன்று இன்றைய கால கட்டத்தில் அவசியம் என்பதை தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர்ந் தேசங்களில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் மேற்கொண்ட கள ஆய்வில் வலியுறுத்தி இருப்பதாகவும் மையம் தெரிவித் திருப்பதோடு இறுதி யுத்தத்திலே கஞ்சிக்காக வரிசையில் நின்போது அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களையும் முதியவர்களையும் நெஞ்சில் நிறுத்தி பலம் வாய்ந்த மாற்று அணியை உருவாக்குவதில் விக்கியும் கஐனும் கருத்தியல் முரண்நிலைகளை கடந்து அர்ப்பணிப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அதேவேளை தாம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் மக்கள் வெளிப்படுத்தியிருக்கும் உணர்வுகளின் அடிப்படையிலேயே இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்த அறிக்கையின் விபரம் வருமாறு:

“போர் முடிவடைந்த போதுஇ தமிழ் மக்களின் தலைமைப் பாத்திரத்தை ஏற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்குரிய வரலாற்றுக் கடமையை உரிய முறையில் செய்திருந்தால் மாற்றுத் தலைமை ஒன்றைத் தேட வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது. கடந்த நான்கு வருட காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைகள் நலன்கள் என்பவற்றை விட ஐ.தே.க.வின் நலன்களுக்கே கூட்டமைப்புத் தலைமை முக்கியத்தும் கொடுத்திருந்தது. அதனால் தமிழ் மக்களுடைய உரித்துக்களை முன்னிலைப்படுத்தக்கூடிய – அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய ஒரு தலைமையைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது.

அவ்வாறான ஒரு தலைமையை வழங்கக்கூடிய ஒருவராக விக்கினேஸ்வரன் அடையாளம் காணப்பட்டார். மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் எனச் செயற்பட்ட அரசியல் தலைமைகள் புத்திஜீவிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு இவ்விடயத்தில் கருத்து முரண்பாடுகள் இருக்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட இதனை ஏற்றுக்கொள்கின்றார். தன்னுடைய பிந்திய அறிக்கையில் கூட விக்கினேஸ்வரன் தலைமையில் இணைந்து செயற்படத் தான் தயார் என்பதை அவர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் உருவாகக்கூடிய மாற்று அணிக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு உள்ளடக்கப்படுவதை அவர் ஏற்க மறுக்கிறார். அவ்வமைப்பு வந்தால் அந்தக் கூட்டுக்குள் தான் வரப்போவதில்லை என்பது அவரது இறுக்கமான நிலைப்பாடு.

இந்த முரண்பாடு மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதில் தடங்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையத்தின் பிரதிநிதிகள் மக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றை கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொண்டார்கள். தாயகத்திலும் புலம்பெர்ந்த தேசங்களிலும் வசிக்கும் ஆயிரம் பேரிடம் தொலைபேசி மூலமாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்தவர்களில் 981 பேர் குறுகிய முரண்பாடுகளைத் தவிர்த்து விக்கினேஸ்வரனும்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

பொது நலன்களின் அடிப்படையில் இவ்வாறு இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் இனம் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கும் என்பதையும்இ 30 வருடங்களாகத் தொடர்ந்த போராலும் திட்டமிட்ட இன அழிப்பாலும் துவண்டுபோயுள்ள தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்க முடியாது என்பதையும் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயுத ரீதியாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்துவிட்டாலும் தமிழினத்துக்கு எதிராக மறைமுகமான ஒரு போர் முன்னெடுக்கப்படுகின்றது. நில அபகரிப்பு இராணுவ ஆக்கிரமிப்பு திட்டமிட்ட குடியேற்றங்கள் கலாசார ரீதியான சீரழிவுகள் என பல வடிவங்களில் எமது மக்கள் மீது போராகத் தொடுக்கப்பட்டிருக்கின்றது. இன ஒடுக்குமுறைக்கான கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளன. எமது மண் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துச் செல்லப்படுகின்றது. தனித்தனியாக எமக்குள் முரண்பட்டுக்கொண்டு நின்று இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடியாது.

அத்துடன்இ பாராளுமன்றத்தின் பலமும்இ மாகாண சபைகளும் தவறானவர்களின் கைகளுக்குச் சென்றடையும்போது அரசாங்கத்தின் இந்த ஆக்கிரமிப்பு தந்திரோபாயங்களுக்கு எதிராக காத்திரமான செயற்பாடுகளை அவர்கள் மேற்கொள்ளமாட்டார்கள். சிறிய சலுகைகளுக்காக இவற்றைக் கண்டும் காணாமலும் செல்வதே அவர்களுடைய அரசியலாக இருக்கும். அவர்களைத்தான் சர்வதேசமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கின்றது. அதனைத்தான் நாம் இப்போதும் காண்கிறோம். இதனைத்தான் நாம் தொடரவிடப்போகிறோமா?

இந்த சமகால வரலாற்றிலிருந்து சிலவற்றையாவது நாம் கற்றுக்கொள்ள முடியும்.

கொள்கை அடிப்படையில் இணைந்து செயற்படக்கூடிய கட்சிகள் தனித்தனியாகச் சென்று முரண்பாடுகளை மேலோங்கவிட்டால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தென்னிலங்கையின் தேசியக்கட்சிகளுக்குமே வாய்ப்பாகிவிடும். கடந்த கால வரலாறு மேலும் தொடர்வதற்கே அது வழிவகுக்கும். பறிபோய்க்கொண்டிருக்கும் தாயகம் முழுமையாகப் பறிபோவதற்கும் தாயகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினராவதற்குமே அது காரணமாக அமையும்.

ஆயுதப்போராட்டக்களத்திலே கடுமையான பகைமை உணர்வுடன் இருந்த சுரேஷ் செல்வம் போன்றவர்களை மக்களின் அரசியல் பலத்திற்காக தலைவர் பிரபாகரன் இணைத்து செயற்பட்ட விதத்தை அவரை ஏற்றுக்கொள்பவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

எமது மக்களின் அவல நிலையைக் கருத்திற்கொண்டு வரலாறு எமக்குத் தந்துள்ள பொறுப்பை ஏற்பதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக உழைக்கக்கூடிய கட்சிகள் முன்வரவேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற சிறிய தவறுகளைப் பெரிதுபடுத்தி – ஒற்றுமைக்கு வேட்டு வைக்காமல்இ தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக மட்டும் உழைப்பது என்ற பிரஞ்ஞையுடன்இ கட்டுக்கோப்பான யாப்பு – ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு செயற்படுவதற்கு இப்போதாவது முன்வராவிட்டால்இ எமது மக்கள் எம்மை மன்னிப்பார்களா என்ற கேள்வியை கேட்கவேண்டிய தருணம் வந்துவிட்டதாகவே தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.