பலத்த கண்காணிப்பின் கீழ் யாழ். மாநகரசபை பகுதி

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  Smart Lamp Poles பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இதனுடன் கண்காணிப்பு கமரா மற்றும் தொலைத்தொடர்பு அன்டனா போன்றவை இணைக்கப்பட்டும் உள்ளது.

இது மாநகரசபை அனுமதியின்றியே பொருத்தப்பட்டு வரப்படுகின்றது. இந்த நடவடிக்கை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த தொழில் நுட்பங்கள் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும் என்றும் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்ட யாழ். மாநகரசபை உறுப்பினர்களான வ.பார்த்தீபன், இ.ரஜீவ் ஆகியோர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எதிர்காலத்தில் குறித்த Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அதில் சிறிய ரக தொலைத் தொடர்பு அன்ரனா பொருத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது கண்காணிப்பு கமரா பொருத்தப்பட்ட Smart Lamp Poles பொருத்தப்படுகின்றன.

இது தொடர்பாக மாநகரசபை முதல்வரின் எந்தவித பதிலும் கிடைக்காத போது, அவசர அவசரமாக Smart Lamp Poles பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 18 Smart Lamp Polesகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பான தெளிவான விளக்கங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அவர்கள் மேலும் கூறுகையில், எமது பிரதேசத்தில் நடைபெறும் எந்தவித அபிவிருத்திப் பணிகளுக்கும் நாங்கள் தடை விதிக்கவில்லை. ஆனால் இதன் தொழில் நுட்பம் தொடர்பான விளக்கத்தினை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பவையாக அமையும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துக் கூறினர்.