படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்கும் துணிச்சலை ராஜபக்க்ஷக்கு வழங்கியது கூட்டமைப்பே சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆட்சியாளர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே அப்பாவி மக்களை படுகொலை செய்த குற்றவாளிக்கு பொதுமன்னிப்பளிக்குமளவிற்கு ராஜபக்க்ஷ அரசாங்கம் துணிகரமாகச் செயற்படுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபாயவின் செயற்பாடு இலங்கை நீதித்துறைக்கு விழுந்த பேரிடியாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இறமையின் பெயரால் குற்றவாளிகளை காப்பாற்றும் போக்கினை உடன் கைவிட்டு பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிருசுவிலில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட எண்மரின் படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக இலங்கை நீதித்துறைக் கட்டமைப்பின் உயரிய இரண்டு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த சுனில் ரத்தநாயக்க என்ற முன்னாள் இராணுவ வீரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டில் நடைபெற்ற இறுதிப்போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் என்பவற்றுக்கான நீதியைக் கோரும் செயற்பாட்டில் பத்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

அவ்வாறிருக்கையில் 2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் முன் கூட்டமைப்பு வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக வடகிழக்கு மக்கள் ஆணையை வழங்கியிருந்தார்கள். எனினும் மக்கள் வழங்கிய ஆணைக்கு நேரெதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட ஆரம்பித்தது.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே என்பது குறிப்பிடப்படாத நிலையிலும், இனப்படுகொலையே நடந்தது என்பது சுட்டிக்காட்டப்படாத நிலையிலும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை கூட்டமைப்பு ஆதரித்தது. அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கும் அளவிற்கு பொறுப்புக்கூறல் தொடர்பிலான தீர்மானத்தின் பரிந்துரைகளை மலினப்படுத்துவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்தது.

இந்தவிடயங்களை நாம் அக்காலத்தில் கூட்டமைப்பினுள்ளேயே சுட்டிக்காட்டியபோது அவற்றை முழுமையாக மறுதலித்திருந்ததோடு அதன் பின்னர் தலா இரண்டு வருடங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகசாத்தினையும் எமது எதிர்ப்புக்களையும் கடந்து பெற்றுக்கொடுத்திருந்தது.

அப்போதைய ஆட்சியாளர்களுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையிலிருந்து தேனிலவு காலத்தில் உறவுகள் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட விட்டுக்கொடுப்புக்களால் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை முன்வைப்பதற்கான பேரம்பேசல்கள் முற்றாக கைநழுவிச் சென்றன.

இதன் காரணமாகவே கடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் ராஜபக்க்ஷ தலைமையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அச்சமின்றி ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேறுவதற்காக அறிவித்ததோடு ஜனநாயகத்தினை மறுதலிக்கும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றது.

கடந்தகாலத்தை போன்றதான ராஜபக்க்ஷவினரின் ஜனநாயக மறுதலிப்புச் செயற்பாடுகள் தற்போது ஒன்று இரண்டு அல்ல எண்மரை கொடூரமாக படுகொலைசெய்த வழக்கில் இந்த நாட்டின் உயர் நீதிமன்றமே குற்றவாளியாக தீர்ப்பளித்த முன்னாள் இராணுவ வீரருக்கு ஒருவருடம் நிறைவடைவதற்குள் துணிச்சலாக பொதுமன்னிப்பளிக்கும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது.

ஆகவே சிங்கள பேரினவாத ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரங்களை எந்த எல்லைக்கும் சென்று பயன்படுத்துவதற்குரிய ஏதுநிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களாக தமிழ் மக்களின் ஆணையை நிராகரித்து சுயலாப அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை மலினப்படுத்தும் வகையில் இனப்படுகொலை நடந்தது என்பதையோ, சர்வதேச விசாரணை முடிவடையவில்லை என்பதையோ கூறுவதற்கு திராணியற்று அதற்கு நேரெதிரான கருத்துக்களை முன்வைத்து விவாதம் செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கும் வரையில் ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளே தொடரப்போகின்றன.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் பரவல் அச்சத்தின் மத்தியிலும் நாடாளவிய சிறைச்சாலைகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் 84தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளன.

எனவே சர்வதேச தரப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் அனைத்தும் ஆட்சியாளர்களின் போக்கு தெளிவாக புலப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிறைகளில் வாடும் உறவுகளுக்காக உடன் தலையீடுகளை செய்யவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.