பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

தேர்தல் ஆணையகம் சுதந்திரமாகவே செயற்படுகின்றது. அரச தரப்பிடமிருந்து எந்தவிதமான அழுத்தமும் கிடையாது. தலையீடுகளும் இல்லை என்றெல்லாம் அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால் நிலைமைகள் அப்படி இல்லை என்பதையே ஆணையகத்தின் தேர்தலுக்கான திகதி பற்றிய அறிவித்தலில் தெரிகின்றது.
ஏனெனில் ஜுன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்ற தீர்மானம் அரச தரப்பினருடனான சந்திப்பின்போதே மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலின் பின்புதான் தேர்தலுடன் நேரடியான தொடர்புடைய தரப்பினராகிய அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பை தேர்தல் ஆணையகம் நடத்தியுள்ளது. ஆகவே தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல் ஆணையகம் ஒரு தலைப்பட்சமாகவே தீர்மானித்து அறிவித்துள்ளது என்பது தெளிவாகின்றது.

இதனை தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட சு10ழலும் நிலைமைகளும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அது எப்படியானது என்பதை நோக்குவது அவசியம்.

நிலைமைகள்

கொரோனாவின் அச்சுறுத்தலும் ஆபத்தான நிலைமையும் இன்னும் தணியவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் நடமாடத் தக்க சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. நோய்த்தொற்று தீவிரமாகிக் கொண்டிருக்கின்றது. மக்களை வீடுகளில் முடக்கி வைப்பதற்காக தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவிலும் மாற்றங்கள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

எந்த வேளையிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் நாட்டின் எதிர்பாராத மூலை முடுக்குகளில் இருந்து வெளிப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கொரோனா பற்றிய அச்சம் மேலோங்கி இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றிப் பரவுவதை அரசாங்கம் வெற்றிகரமாகத் தடுத்திருக்கின்றது. ஏப்ரல் 24 ஆம் திகதியுடன் இந்த நடவடிக்கை வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்படும் என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவராகிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவும் கொரோனாவின் அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. ஆயினும் ஆபத்தான நிலைமை இன்னும் உள்ளது என்று கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கூறியிருந்தார்.

இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பொதுமக்கள் முண்டியடித்து வீதிகளில் இறங்கி கடைவீதிகளிலும் சந்தைகளிலும் குவிந்தனர். குறிப்பாக மதுபான விற்பனை நிலையங்களின் முன்னால் குடிமன்னர்களின் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் நடைமுறைக்கு வந்த கடைசி நேரமாகிய இரவு 8 மணி வரையிலும் இந்த விற்பனை நிலையங்களில் மதுபானம் வாங்குவதற்காகக் குடி மன்னர்கள் குவிந்திருந்தார்கள். இதனையடுத்து உடனடியாக மதுவிற்பனை நிலையங்களை இழுத்து மூடும்படி உத்தரவிடுவதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் மக்களை வீடுகளில் முடக்கி வைத்திருந்த அரசாங்கம் கொரோனா நோயைக் கட்டுப்படுத்துகின்ற நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுவதற்காகவே ஊரடங்கு உத்தரவை 20 ஆம் திகதி தளர்த்தியது என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் சாதாரணமாக நிலவுகின்றது.

ஊரடங்கு உத்தரவு திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் காலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரையிலான 15 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும் என்ற அறிவித்தல் வெளியாகியபோது, பெரும்பான்மையினராகிய பொதுமக்கள் அதிர்ச்சி கலந்த வியப்புக்கு உள்ளாகினார்கள்.

வெளிச்சத்தற்கு வந்துள்ள விடயம்

இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் மக்கள் பெரும் எண்ணிக்கையில் பொது இடங்களில் இடைவெளி பேணாமல் முண்டியடித்து நோய்த்தொற்று ஆபத்தை அதிகரிக்கச் செய்வார்கள் என்ற அச்சமும் பீதியும் அவர்களிடம் தெளிவாகவே தெரிந்தது. பலரும் அரசாங்கம் ஏன் அவசரப்பட்டு ஊரடங்கைத் தளர்த்தி இருக்கின்றது என்று அதிருப்தியுடன் வெளிப்படையாகவே வினவினார்கள்.

அது மட்டுமல்லாமல் அரசாங்கம் கொரோனா நோய்த்தொற்று நிலைமைகள் சீரடைவதற்கு முன்னதாகவே நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் வெற்றி பெற்றதாகக் காட்டி, தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கின்றது. அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள தருணத்தில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள். அவர்களது உணர்வை உறுதிப்படுத்தும் வகையிலேயே நிலைமைகளிலும் மாற்றங்கள் எற்பட்டன.BB12vWyA பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸின் தொற்றுக்கு உள்ளாகியவர்கள் பலர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட தருணத்தில் இனம் காணப்பட்டனர். குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லவேண்டிய நிலைமை உருவாகியது.

தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவிலும் ஏனைய நடைமுறைகளில் சில மாற்றங்களையும் அரசாங்கம் மேற்கொண்டது. மே மாதம் 11 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இப்போதைய நிலையில் அந்த முடிவை அரசாங்கம் மாற்றிக் கொண்டுள்ளதுடன் வேறு சில விடயங்களிலும் மாற்றங்களைச் செய்துள்ளது.

இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தேர்தல் ஆணையகத்தின் மீது அரசாங்கம் மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகித்ததன் காரணமாகவே அரசியல் கட்சிகளுடனான சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்பே தேர்தலுக்கான புதிய திகதி குறித்த அறிவித்தலை தேர்தல் ஆணையாளர்கள் வெளியிட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பதிலளிக்க முடியவில்லை……

கொரோனா வைரஸ் நோயின் ஆபத்து நிலைமைகள் இன்னும் சீராகவில்லை. ஆகவே தேர்தலைப் பின்போட வேண்டும். நாடு எதிர்கொண்டுள்ள பேரிடர் நிலையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆளும் தரப்பு தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.
அதேவேளை, கொரோனா அச்சுறுத்தல் திருப்திகர நிலைமைக்குத் தணியும் வரையில் தேர்தலை நடத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையகத்திடமும் அந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. பொது அமைப்புக்களும்கூட இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தன.

தேர்தல் ஆணையகத்துடனான சந்திப்பின்போது கொரோனா வைரஸ் நோய் அச்சுறுத்தல் இன்னும் தணியாத நிலையில் ஏன் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்தீர்கள் என்று மகிந்த தேசப்பிரியவிடம் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கேள்விகள் கேட்டு துளைத்தபோது அவர் திணறிப் போனதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அத்துடன் தங்களுடைய கேள்விகளுக்கு அவரால் சரியான பதிலளிக்க முடியாமல் இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸின் தாக்கம் தணியாமல் தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைப்பாட்டையே தேர்தல் ஆணைக்குழுவும் கொண்டிருப்பதாக அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போது தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அவ்வாறு அவர் கூறியிருப்பாரேயாகில் நடத்த முடியாத சூழலில் தேர்தலை நடத்துவதற்கு என்ன காரணத்திற்காக அவர் திகதி குறித்து அறிவித்தல் வெளியிட்டார் என்ற கேள்வி எழுகின்றது. இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் திகதியொன்றினை அறிவிக்காமல் இருக்க முடியாது.ep2 பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

திகதி அறிவிக்க வேண்டியது கடமையாகும். ஆனாலும் இப்போது தேர்தல் ஆணைக்குழு ஒரு திகதியை அறிவித்த போதிலும், இது உறுதியான நிலைப்பாடல்ல என்று தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

சிறுபிள்ளைத்தனமானதோ என சிந்திக்கத் தூண்டுகின்றது

அதேவேளை, பல்வேறு நிலைமைகள் குறித்தும் பல்வேறு காரணங்கள் பற்றியும் எடுத்துரைத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொரோனா நோய்த்தாக்கம் தணியும் வரையில் தேர்தல் நடத்தக் கூடாது எனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் திகதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டபோது அதற்காக தேர்தல் ஆணையகம் கூடி நிலைமைகள் குறித்து ஆராய்ந்து இப்போதைய முடிவை மறு பரிசீலனை செய்யும் என அவர் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து மகிந்த தேசப்பிரிய ஊடகங்களுடன் நேரடியாகப் பேசியிருக்கவில்லை. இருந்த போதிலும் தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் இன்றைய கொரோனா அச்சுறுத்தல் சூழலில் பக்கசார்பான தீர்மானமாகவே தெரிகின்றது.

தேர்தல் ஒன்றை முதற் தடவையாக அறிவிக்கும்போது தேர்தல் ஆணையகம் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்துத்தான் தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒரு திகதி அறிவிக்கப்பட்டு, அந்தத் திகதியில் தேர்தலை நடத்த முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கும் சூழலில் நெருக்கடியான நிலைமைகளுக்குள் ஒரு திகதியைத் தீர்மானிக்கும்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்தாலோசித்து ஓர் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே தீர்மானத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.

அத்தகைய ஒரு நடவடிக்கைதான் சரியானதாக இருக்க முடியும். ஏனெனில் கொரோனா அச்சுறுத்தல் சூ ழலில் வீட்டைவிட்டு வெளியில் செல்வதே ஆபத்தானதாக உள்ளது. நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டாலும்கூட நோய்த்தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் இல்லாமல் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது.

நோய்த் தற்காப்புச் செயற்பாட்டில் இருண்டு முனைகள் முக்கியம் பெற்றிருக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களின் தற்காப்பு நிலைமை ஒன்று. அவர்கள் சந்திக்கச் செல்கின்ற வாக்காளர்களின் தற்பாதுகாப்பு நிலை மற்றொன்று.
ஏனெனில் நோய்த்தொற்று மக்கள் மத்தியில் இருந்து அரசியல்வாதிகளுக்கு ஏற்படலாம். அதேபோன்று அரசியல்வாதிகளிடம் இருந்து வாக்காளர்களாகிய பொதுமக்களுக்கும் தொற்றிப் பரவக் கூடும். ஆகவே இரு தரப்பினருடைய தற்காப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இது மட்டுமல்ல. கொரோனா வைரஸ் தொற்று நிலைச் சூழலில் இதுபோன்ற பல்வேறு நடைமுறை விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய பாதுகாப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. இந்த நிலையில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்று வெளியிடப்பட்ட அறிவித்தல் உறுதியானதல்ல என்று தேர்தல் ஆணையகத்தின் தலைவரே கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள விதமும், அந்த அறிவித்தல் வெளியாகியுள்ள புற நோய்த்தாக்கச் சூழல் மற்றும் அரசியல் நிலைமையும் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு பொறுப்பான முறையில் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றதா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் ஒரு வகையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறுவது போன்று சிறுபிள்ளைத் தனமானதோ என்று சிந்திக்கவும் தூண்டி இருக்கின்றது.

அவதானிகளின் கருத்து

ஆனால் அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணைக்குழு நடந்து கொள்ளவில்லை என்றும், அதனால் அரசாங்கம் ஆணைக்குழு மீது சீற்றம் கொண்டிருப்பதாகவும் அரசியல் அவதானிகள் மற்றும் சட்டவியலாளர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகின்றது.

அரசுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையில் நிலவுகின்ற இத்தகைய முறுகலான ஒரு நிலையில் அரசாங்கத்தைச் சமாளிப்பதற்காகவே ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர்களுடைய எதிர்பார்ப்பையும் கோரிக்கையையும் நிறைவேற்றத்தக்க வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகின்றார்கள்.

அதேவேளை மற்றுமொரு விடயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றார்கள். கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி பொதுத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலைமைக்குள் நாடு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் அரசாங்கத் தரப்பின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய கடப்பாட்டில் தேர்தல் ஆணைக்குழு கட்டுண்டு கிடக்கின்றது.

அந்தக் கோரிக்கை இயல்பானதாக இருந்தாலும்சரி அதிகாரத் தொனியில் அச்சுறுத்தல் வடிவிலானதாக இருந்தாலும்சரி அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை ஆணைக்குழு தட்டிக்கழிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றது.
அரச தரப்பில் ஏற்கனவே மே 28 ஆம் திகதி தேர்தலை நடத்துதாக அறிவிக்க வேண்டும் என்ற ஆலோசனை கூறப்பட்டிருந்த போதிலும், அதனைத் தவிர்த்து தனது பொறுப்பை நிறைவேற்றும் வகையில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆணைக்குழு வெளியிட்டிருப்பதாகக் கருதப்படுகின்றது.EV7BS9bUwAEHhP3 பக்கச்சார்பான தீர்மானமா?-பி.மாணிக்கவாசகம்

இந்த அறிவித்தலிலும் ஒரு சூட்சுமம் ஒளிந்திருப்பதாகவும் அவதானிகள் மத்தியில் கருதப்படுகின்றது. கொரோனா வைரஸானது ஏனைய நாடுகளின் வரிசையில் இலங்கையையும் சாதாரணமாகத் தொற்றித் தாக்கியிருக்கவில்லை. ஒரு முக்கியமான பொதுத் தேர்தல் கால அரசியல் சூழலில் நாட்டுக்குள் அந்த நச்சுக்கிருமி புகுந்து அரசியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அரசியல் சிக்கல்களை – குறிப்பாக அரசியலமைப்பு ரீதியான சிக்கல்களை நன்கு இனம் கண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அந்த சிக்கல்களில் சிக்கிக் கொள்ளாமல் தனது கடமை தேர்தல் நடைபெறுவதற்கான ஒரு திகதியை அறிவிப்பது மட்டுமே என்ற நிலையில் ஜுன் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

பல முனைகளில் அழுத்தம்

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை றடத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபாயாவின் பிரகடனத்தின்படி ஜுன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். இது அரசியலமைப்பு ரீதியான தவிர்க்க முடியாத நியதி. அரசியலமைப்பு ரீதியான ஒர் இறுக்கமான நிலையில் அதனால் ஏற்படக் கூடிய சிக்கல்கள் வாதப்பிரதிவாதங்கள் என்பவற்றைக் கடந்த நிலையிலேயே மகிந்த தேசப்பிரிய ஜுன் 20 ஆம் திகதியை அறிவித்துள்ளார்.

தேர்தல் திகதி ஒன்றினை அறிவிக்காமல் இருக்க முடியாது. திகதி அறிவிக்கப்பட வேண்டியது கடமையாகும். ஆகவேதான் நாம் திகதி ஒன்றினை இப்போது அறிவித்துள்ளோம் ஆயினும் அது உறுதியான நிலைப்பாடல்ல என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் அவர் வெளியிட்டுள்ள கூற்று இதனை உறுதி செய்வதாக அமைந்திருக்கின்றது.

எப்படி இருந்த போதிலும் தேர்தல் ஆணைக்குழுவும்சரி தேர்தல் ஆணையாளர்களும்சரி இலங்கையின் வரலாற்றில் இத்தகைய ஒரு சிக்கலான நிலைமைக்கு முகம் கொடுத்திருப்பது இதுவே முதற் தடவை.

இந்த சிக்கல் நிலைமை ஆபத்து எங்கிருந்து வருகின்றது எதிரியாக இருப்பவர்கள் யார் என்று தெரிந்திருந்த போர்க்காலத்தைப் போன்றதல்ல. அத்துடன் உருவம் தெரியாது. யார் யாரிடம் இருந்து வருகின்றது, எந்தெந்தப் பொருட்களில் இருந்து பற்றிப் பிடிக்கப் போகின்றது என்று தெரியாமல் தொற்றிப் பிடித்து உயிருக்கே உலை வைக்கின்ற கொரோனா வைரஸை எதிர்கொள்கின்ற நிலைமையைப் போன்றதுமல்ல.

மாறாக அரச தரப்பு, அரசியல் கட்சிகள் மற்றும் வாக்காளர்களாகிய பொதுமக்கள் என்ற முத்தரப்புகளுக்கு மத்தியில் மத்தளத்தையும்விட பல முனைகளில் மொத்தப்படுகின்ற நிலைமைக்குள்ளேயே தேர்தல் ஆணைக்குழு இப்போது சிக்கியிருக்கின்றது.

இந்த சிக்கல்கள் எவ்வாறு விடுவிக்கப்படப் போகின்றன எவ்வாறு பொதுத் தேர்தல் நடத்தப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. அதனை ஊகம் செய்வதும் கடினமானதாகவே உள்ளது