பகிஷ்கரித்தமை மக்கள் விரோதச் செயல்: அங்கஜன் கடும் சீற்றம்

எதிர்ப்புக்கள், புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இவ்வாறு எதிர்ப்பு அல்லது புறக்கணிப்பைச் செய்பவர்கள் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுபவர்களே என்றும் சாடினார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் சமுகமளித்திருக்கவில்லை.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர் என அறிவித்தனர். ஆனால் அந்தக் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலாவின் பிரதிநிதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறான நிலைமையில் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் நாடாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதமை அல்லது புறக்கணித்தமை தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்-

“யாழ்.மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்துக்கு இங்குள்ள மக்களின் பிரதிநிதிகள் சமுகமளிக்கவில்லை. அவ்வாறு சமுகமளிக்காது எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது அல்லது கூட்டத்தைப் புறக்கணிப்பதென்பது மக்களுக்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகவே அமைகிறது.

இவ்வாறான எதிர்ப்புக்கள் அல்லது புறக்கணிப்புக்கள் ஊடாக எதனையும் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியாது. மக்கள் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் கலந்து பேசி ஒரு தீர்மானம் எடுத்தே செயற்படவேண்டும். அவ்வாறு பேசுவதனூடாகத்தான் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவும் முடியும்.”