நெய்வேலி அனல் மின்நிலையத்தில் விபத்து 8பேர் உயிரிழப்பு

தமிழகம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள NLC அனல் மின் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்ததில் இதுவரை 8பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நெய்வேலியில் அமைந்துள்ள NLC அனல் மின் நிலையத்தின் 2ஆவது மின்னிலைய கொதிகலன்  இன்று(01) காலை வெடித்தது. அதில் 300இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து தீயணைப்புப் படையினர் பணியில் இறங்கினர்.

சம்பவ இடத்தில் 2பேர் உயிரிழந்ததுடன் 25இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் NLC  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இன்று பிற்பகல் வரையில் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனல்மின் நிலைய வெடிப்பை தொடர்ந்து அனல் மின்நிலைய பொது மேலாளர் கோதண்டம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொதிகலனை சரியாக பராமரிக்காது விட்டமையாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

50 ஆண்டுகளுக்கு மேல் கொதிகலன்களை பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தும் பழுதடைந்த கலன்கள் பயன்படுத்தப்பட்டு வந்ததே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் இதே போன்ற விபத்தில் 5பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.