நீராவியடி விகாரைக்கு புதிய விகாராதிபதி நியமனம்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தி, அடாத்தாக தங்கியிருந்து, புற்றுநோயால் இறந்தும், தமிழர்களுக்கு இன்னல் கொடுத்து, பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே எரியூட்டப்பட்ட மேதாலங்கார கீர்த்தி தேரரிற்கு பதிலாக புதிய விகாராதிபதி ஒருவரை பௌத்த பீடமான அமரபுர நிக்காய நியமித்துள்ளது.

குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி தேரர் புற்றுநோய் காரணமாக கடந்த 21ஆம் திகதி காலமான நிலையில், நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஆலய தீர்த்தக்குளத்திற்கு அருகில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது இடத்திற்கு அமரபுர நிக்காயவால் புதிய விகாராதிபதி கடந்த 28ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

திருகோணமலை மலைக் கிராமமான மிகிந்தபுர என்ற இடத்தைச் சேர்ந்த ரத்தனதேவ கீர்த்தி என்ற பௌத்த பிக்குவே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆசிரியர் என்றும் அறியமுடிகின்றது.

நியமனம் வழங்கப்பட்டு ஒரு வாரமாகியும் அவர் நீராவியடி விகாரைக்கு இன்னும் வரவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு நீதிமன்றில் விகாரையின் பொறுப்பானவரை அடுத்த வாரம் நீதிமன்றில் முற்படுத்த காத்திருக்கும் பொலிசார், புதிய விகாராதிபதியின் வருகையை  எதிர்பார்த்துக் காத்திருக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது.