நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் – நவநீதன்

பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி பதற்றமாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இவ்வார ஆரம்பத்தில் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தார்கள். அந்தப் பகுதியை ஆக்கிரமித்து புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துவிட்டு, பாரிய கட்டுமாணப் பணிகளை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாகவுள்ள பிக்கு, சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல் எந்தளவுக்கு அடாத்தாகச் செயற்படுகின்றார் என்பதை அவர்களினாலும் அவதானிக்க முடிந்தது.

போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் சென்றுள்ள நிலையில், புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வகையான ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவதையே இலக்காகக் கொண்டது. செம்மலைப் பகுதியின் அமைதியைக் குலைத்துள்ள குறிப்பிட்ட பிக்கு, உண்மையிலேயே ஒரு பௌத்த துறவியா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது. ஏனெனில் இத்துறவியின் இரண்டு பிள்ளைகள் இங்கிலாந்தில் கல்வி கற்பதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலமாக விளங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளவில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் கடந்த சனவரியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன்தான் இங்கு பிரச்சினை ஆரம்பமாகியது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, காவல் துறையினரின் ஆதரவுடன் அந்த புத்தர் சிலை திறந்துவைக்கப்பட்டது. பௌத்த மதத்தைப் பின்பற்றும் எவரும் வசிக்காத அந்தப் பகுதியில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது, அந்தப் பகுதியை சிங்கள மயப்படுத்துவதை விட வேறு நோக்கங்களுக்காக இருக்க முடியாது.

இதற்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இரண்டு தரப்பும் அங்கு வழிபாட்டில் ஈடுபடலாம் எனவும், ஆனால், அபிவிருத்தி கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுவதாயின் உரிய உள்ளூர் அமைப்புக்களின் அனுமதியுடனேயே அதனைச் செய்யலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், அங்குள்ள தற்போதைய நிலை என்ன என்பதையிட்டும், அமைச்சர் மனோ  கணேசன் அங்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும், “தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வீ.நவநீதனிடம் கேட்டோம். அவர் தெரிவித்ததாவது:

“கோவில் தரப்பைப் பொறுத்தவரையில் அந்தக் காணி எம்முடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் கடிதமும், பிரதேச சபையின் அனுமதி போன்றவற்றைப் பெற்றுத்தான் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். ஆனால், பிக்குவைப் பொறுத்தவரையில், அவ்வாறான ஆவணங்களோ அனுமதியோ இல்லாமலே கட்டுமாணப் பணிகளை முன்னெடுத்திருந்தார். இது குறித்து நாம் காவல் துறையினருக்கு பல தடவை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அமைச்சர் மனோ கணேசன் கடந்த செவ்வாய்க்கிழமை இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதும் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அப்போது, நாம் நீதிமன்ற உத்தரவின்படியே செயற்படுகின்றோம் என்பதையும், பிக்கு அவ்வாறில்லாமல் கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தபோது, காராசாரமான விவாதம் ஒன்று அங்கு இடம்பெற்றது.

அதன்பின்னர் அரச அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயத்தில் தலையிட்டு தற்போதுள்ள கட்டுமாண வேலைகள் குறித்து ஒளிப்பதிவு ஒன்றைச் செய்யுமாறு மனோ கணேசன் கேட்டிருந்தார். அதன்படி அவ்வாறான ஒளிப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி அனுமதியில்லாமல் புதிய கட்டுமாணப் பணிகள் எதனையும் செய்ய முடியாது. உரிய அனுமதியுடன் வரும் தரப்பை, கட்டுமாணப் பணிகளைச் செய்வதற்கு காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.”

அவர் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: இது தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒரு பகுதியா?

neeraviyady நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் - நவநீதன்நவநீதன்: கோவில் உள்ள பகுதியை தாம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி என தாம் பிரகடனம் செய்யவில்லை என தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரே பகிரங்கமாகச் சொல்லியிருக்கின்றார். ஆனால், வீதியின் எதிர்ப்பக்கத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருந்தது. அது செங்கல்லினால் கட்டப்பட்டது. அந்த செங்கல்லை எடுத்துவைத்துக்கொண்டு அதனை தொல்பொருள் என்று சொல்கின்றார்கள். 2013 ஆம் ஆண்டு இந்தப் பகுதியை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகப் பிரகடனப்படுத்துவதாக வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வந்தது. அது முறையாக நீலஅளவீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. அத்துடன் இடமும் செட்டிமலை என்றே போடப்பட்டிருக்கின்றது. செட்டிமலை என்று ஒரு இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லை. அதனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் நீதிமன்றத்தில் சொன்னோம். இப்போது அந்த வர்த்தமானி அறிவிப்பை மாற்றி வெளியிடுவதற்கான முயற்சி ஒன்று இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.

கேள்வி: அப்படியானால், குறிப்பிட்ட பிக்குவால் செம்மலையில் குடியேறி புத்த விகாரை ஒன்றையும் எவ்வாறு அமைக்க முடிந்தது?

நவநீதன்: தொல்லியல் திணைக்களத்தின் செம்மலைக்கு வந்திருந்தார். அவரது செயற்பாடுகளுக்கு வவுனியா தொல்லியல் திணைக்களம் முதலில் அனுமதி வழங்கியது. அவர்களின் அனுமதியுடனேயே கட்டுமாணப் பணிகளை தான் ஆரம்பித்ததாகவும் அவர் முதலில் சொல்லியிருந்தார். தொல்லியல் திணைக்களம் கொடுத்த கடிதம் ஒன்றைத் தவிர அவரிடம் இப்போது வேறு எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.

கேள்வி: வடக்கு கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக எத்தனை இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள? அவை எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன?

பதில்: வடக்கில் 337 இடங்கள் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க பகுதிகளாக தொல்லியல் திணைக்களத்தினால், அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் முல்லைத்தீவில் 167 இடங்கள் உள்ளன.  அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான இடங்களில் செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்லியல் திணைக்களம் எழுந்தமானமாகவே அவற்றைத் தெரிவு செய்கின்றது. அதற்காக முறைப்படி ஆய்வுகள் செய்யப்படுவதில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவே இவை உள்ளன. மணலாறு. கரைத்துறைப் பற்று பகுதிகளில் மட்டும் 47 இடங்கள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைப்பை கேள்விக்குள்ளாக்குவதும், தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதும்தான் இதன் நோக்கம். அடையாளம் காணப்படும் பகுதிகளில் புத்த விகாரைகளை உடனடியாகக் கட்டுவதும், சிங்கள குடியிருப்புகளை உருவாக்குவதும்தான் அவர்களுடைய திட்டம்.

neeraviyady2 நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் - நவநீதன்நீராவியடிப் பகுதியில் கூட, புத்த விகாரைகளைக் கட்டுவது மட்டும் அவர்களுடைய திட்டமாக இருக்கவில்லை. அதனையடுத்துள்ள கடற்பகுதியில் மீனவர் குடியிருப்பு. மற்றப் பகுதியில் விவசாயக் குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிங்களவர்களைக் கொண்டுவருவதுதான் அவர்களின் திட்டம். இங்கு சுமார் 1,000 ஏக்கரில் காணியைப் பெற்று பௌத்த மயமாக்கல் திட்டம் ஒன்று அவர்களிடம் இருந்துள்ளது. இது வெறுமனே குறிப்பிட்ட பிக்குவின் திட்டம் அல்ல. அதன் பின்னணியில் பௌத்த மயமாக்கல் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளனர்.

கேள்வி:  இந்த பௌத்த மயமாக்கல் திட்டத்தில் இராணுவப் பங்களிப்பு எப்படியுள்ளது?

பதில்: நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் இராணுவ முகாம் இருந்தது. பின்னர் அவர்கள் வெளியேறினாலும், பிள்ளையார் கோவில் இருந்த பகுதியில் புத்தர் சிலையை அமைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது அவர்கள்தான். இராணுவம் வெளியேறும்போது அந்தப் பகுதி பிக்குவிடம் கொடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இராணுவக் காப்பரண் அமைக்கப்பட்டு புத்தர் சிலையைப் பாதுகாக்கின்றார்கள். வடக்கில் இந்தளவுக்கு பெருமளவில்  பாரிய இராணுவ முகாம்கள் இருப்பதன் மற்றொரு நோக்கம் இவ்வாறான குடியேற்றங்களைப் பாதுகாப்பதும், அதற்கு அனுசரணை வழங்குவதும்தான்.