நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளர் லோகசிங்கம் பிரதாபன் காலமானார்

நீண்டகால தமிழ்த் தேசியப் பற்றாளரும் பலவகைகளில் முன்னின்று உழைத்தவருமான திரு லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் தனது 52வது வயதில் கொரோனா கொல்லுயிரியால் பிரித்தானியாவில் காலமானார். ஒரு மாதகாலமாக வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் போராடி மீண்டு வந்து விடுவார் என நம்பியிருந்த நிலையில் இன்று மே 2ஆம் நாள் காலையில் சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மிகவும் உற்சாகமான, தான் பங்கெடுக்கின்ற அனைத்து விடயங்களலும் முன்னின்றும் உழைக்கும் ஒருவர். தாயகம் சார்ந்த பணிகளில் தன் பங்களிப்பை தன்னால் முடிந்தவரையில் காத்திரமாகச் செய்து வந்தவர்.

விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட பிரதாபன் அவர்கள், எங்களது மக்களுக்கான பிரித்தானிய தழுவிய இல்ல மெய்வல்லுநர் போட்டியை ஒழுங்குபடுத்தி அதனை திறம்பட நடாத்தியவர்களுள் முதன்மையானவர். பிரித்தானியாவில் நடாத்தப்படுகின்ற பல விளையாட்டுத்துறையின் நிர்வாகிகளில் ஒருவர்.இயல்பாகவும் மிகவும் எளிமையாகவும் பழகும் இவர் அலாதியான நிர்வாகத் திறமை கொண்டவர்.

லண்டனில் Stonebridge Parkல் Bridge Park Hotelஐ நடாத்தி வந்த பிரதாபன் தொழில்முறையிலும் சிறந்து விளங்கியவர். அநேகரின் அன்பைப் பெற்றிருந்த பிரதாபன் அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கிக் கொள்கின்றோம்