நிகரகுவாவில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினர் படுகொலை

நிகரகுவா நாட்டில் நில உரிமைக்காக போராடி வரும் பழங்குடியினரை ஆயுதமேந்தியவர்கள் தாக்கியதில் ஆறு பழங்குடியினர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேர் கடத்தி செல்லப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கூறும் உள்ளூர் காவல்துறை, இதுவரை இரண்டு இறப்புகளை மட்டும் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் நிலவும் குழப்பத்திற்கான காரணம் குறித்து தெளிவில்லை

நிகரகுவா நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதியில் வாழும் மாயக்னா பழங்குடியினரை மையமாக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போசாவனஸ் உயிர்க்கோளக் காப்பகத்துக்குட்பட்ட இந்த பகுதிதான் பழங்குடி குழுக்களுக்கும் புதிய குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான நில மோதல்களின் மையமாக இருந்து வருகிறது.

தனது சமூகம் படிப்படியாக “அழிக்கப்பட்டு” வரும் நிலையில் இதை தடுப்பதற்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்று மாயக்னா பழங்குடிகளின் தலைவர் கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டி இருந்தார்.