நாயை தடவிக்கொண்டு கல்லைத்தேடும் ரணிலின் உத்தி தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றது – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

படை பலமும், அரசியல் இராஜதந்திரமுமம் உள்ள இனமும், நாடும் தப்பிப்பிழைக்கும் என்பதற்கு அண்மையா உதாரணமாக சிரியா விளங்கியது, அதாவது மேற்குலகத்தின் வன்முறைகளை முறியடிப்பதற்கு ரஸ்யா இருhணுவத்தின் துணையை நாடியதால் அமெரிக்காவின் “பேய்களின் கூட்டு” என்ற இனஅழிப்பு தத்துவத்தில் இருந்து சிரியா தப்பிக்கொண்டது.

அதனையே தற்போது ஈரானும் பின்பற்றுகின்றது. தனது பலத்தை தக்கவைப்பதிலும், மேற்குலகத்திற்கு எதிரான கூட்டணியின் கொள்கைகளை உள்வாங்குவதன் மூலமும் தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முற்பட்டுள்ளது ஈரான்.

சிரியாவின் வழியை பின்பற்றி, ரஸ்யாவுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியுள்ள ஈரான் தற்போது தன்னிடம் ரஸ்யாவின் அதிநவீன ஆயுதங்கள் உண்டு என்ற பீதியையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அதற்காகவே கடந்த 20 ஆம் நாள் அமெரிக்காவின் அதி நவீன உளவு விமானத்தை (Global Hawk) ஈரான் சுட்டுவீழ்த்தியிருந்தது. இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானது, ஏனெனில் 65,000 அடிகள் உயரத்தில் பறக்கும் விமானத்தை புறஊதாக் கதிர் வெப்பத்தை நாடிச்செல்லும் சாதாரண ஏவுகணை மூலம் வீழ்த்த முடியாது.

எனவே தான் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நீரிணைகளைக் கடக்கும் போது இந்த உளவு விமானங்கள் அவற்றிற்கான பாதுகாப்பு கண்காணிப்புக்களை மேற்கொள்வதுண்டு.

சிரியாவில் மட்டும் கடந்த ஆண்டு 15 இந்கு மேற்பட்ட உளவு பணிகளை இந்த விமானம் மேற்கொண்டிருந்தது. அதனை வீழ்தமுடியாது என அமெரிக்கா நம்பியிருக்கலாம், ஆனால் அமெரிக்காவின் பிந்திய தயாரிப்பான எபஃ-35 ரக உருமறைப்பு தாக்குதல் விமானத்தை (F-35A Lightning II Joint Strike Fighter) விட (89 மில்லியன் டொலர்) அதிக பெறுமதியான இந்த உளவு விமானத்தை (123 மில்லியன் டொலர்) தன்னிடம் உள்ள எஸ்-300 என்ற ரஸ்யாவின் ஏவுகணை மூலம் ஈரான் வீழ்த்தியுள்ளது.

s 300 நாயை தடவிக்கொண்டு கல்லைத்தேடும் ரணிலின் உத்தி தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றது - வேல்ஸ் இல் இருந்து அருஷ்100,000 அடிகள் உயர தூரவீச்சுக்கொண்ட இந்த ஏவுகணை ரடார் மூலம் வழிநடத்தப்படுவதாகும். ஈரானின் இந்த துணிச்சலான நடவடிக்கை அமெரிக்காவின் போர்க் கனவை பின்தள்ளியுள்ளது. அதன் மூலம் ஈரான் மக்கள் பேரழிவில் இருந்து தற்போது தப்பிக்கொண்டனர்.

அதாவது ஒரு இனத்தின் அரசியல் தலைவர்கள் என்பவர்கள் தமது இனத்தை காப்பாற்ற வேண்டிய வழிமுறைகளைத் தேடவேண்டும். சிறீலங்காவின் தென்னிலங்கையைப் பொறுத்தவரையிலும் அதனை நாம் காணமுடியும்.
சிறீலங்காவின் அரசியல் வரலாற்றில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரச தலைவர்களுக்கும் ஒவ்வொரு அரசியல் சாணக்கியம் உண்டு, ஜே. ஆர் ஜெயவர்த்தனாவின் அணுகுமுறை ஆர் பிரேமதாசாவின் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டது.

இராஜதந்திரம் என்ற அணுகுமுறையில் தமிழ் மக்களின் போரிடும் வலுவையும், தமிழ் மக்கள் மீதான ஒரு இனஅழிப்பையும் மேற்கொள்வதில் பிரேமதாசாவைவிட ஜே.ஆர் மிகவும் கைதேந்தவராக இருந்தார்.

அதேபோலவே தற்போது ரணிலின் அணுகுமுறையும் உள்ளது, மேற்குலகத்தின் ஆதரவைப் பெற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை கைப்பற்றிய அவர் தனது பதவி பல தடவைகள் அந்தரத்தில் தொங்கிய போதும் தமிழ் மக்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்க முன்வரவில்லை, மாறாக தமிழ்த் தலைமைகளின் ஆதரவைப் பெற்று அவர்களை ஏமாற்றுவதில் தொடர்ந்தும் வெற்றிபெற்றே வருகின்றார்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் தமது உரிமைகளுக்காக போரிட்டு உயிர்களைத்துறந்து, அதன் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைவரை கொண்டுவந்து, அனைத்துலக மட்டத்தில் ஒரு பேசும் பொருளாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு பேரம்பேசும் அரசியல் பலத்தை ஏற்படுத்தியிருந்தனர் விடுதலைப்புலிகள்.

ஆனால் அதனைகூட தமது பலமாகக் கருதி இனஅழிப்புக்கு உட்பட்ட ஒரு இனத்திற்கு தேவையான அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாத இயலாமை அரசியலை மேற்கொண்டு வருகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனைத் தான் நாம் தற்போது கல்முனைவடக்கு பிரதேச சபையினை தரமுயர்த்த மேற்கொண்ட போராட்டத்திலும் கண்டோம்.

sumi 2 நாயை தடவிக்கொண்டு கல்லைத்தேடும் ரணிலின் உத்தி தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றது - வேல்ஸ் இல் இருந்து அருஷ்1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சனை உள்ளதாக சிறீலங்கா அமைச்சரே ஒப்புக்கொள்கின்றார், அதனை தரமுயர்த்த வேண்டாம் என்ற முஸ்லீம் அமைச்சரின் கோரிக்கைக்கு ரணில் உடன்படுகின்றார், ஆனால் ரணிலுக்கு மனம்நோகக் கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை கூட கைவிட்டுவிட்டார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அவரின் போக்கை தட்டிக்கேட்க முடியவில்லை ஏனைய உறுப்பினர்களால். இது தான் தமிழ் தலைமைகளின் சாணக்கியம்.

போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும், போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை அரசியல் தேவைகளை நிறைவேற்றவோ அல்லது வேறு வடிவங்களில் சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் இனஅழிப்புக்களில் இருந்து இனத்தைக் காப்பாற்றவோ தமிழ் அரசியல்வாதிகளால் முடியவில்லை.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த ஒருவருடன் அண்மையில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பத்து வருடங்களாகியும், எமது மக்களின் துயரங்கள் விலகவில்லை, அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லை என்று தெரிவித்த போது, அவர் என்னிடம் கூறியது ஒன்று தான் அதாவது உங்களின் அரசியல்லாதிகளின் தவறுகள் இவை, அது மட்டுமல்லாது, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கூட தமது அரசியல்வாதிகளிடம் கேள்விகள் கேட்பதில்லை என்று கூறியவர்.

ஒரு ஐந்து கோரிக்கைளை எழுதி அதனை அரசியல்வதிகள் நிறைவேற்றினார்களா? நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான காரணம், அதற்கான தடைகள் குறித்து மக்கள் தமது அரசியல்வாதிகளிடம் கேள்விகளை கேட்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

உண்மைதான், பிரித்தானியாவிலும், கனடாவிலும், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பதனால்தானோ என்னவோ அந்த நாடுகளில் ஒரளவேனும் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதுடன், அந்த மக்களும் தமது உரிமைகளுடன் வாழ்கின்றனர்.

போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது இன்றும் எமது மக்கள் தமது உரிமைகளுக்காக வடக்குக்கு பயணம் செய்யும் சிங்கள அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து கதறுகின்றனர்.

எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், தமிழ் இனத்தின் இருப்பை தக்கவைக்கவேண்டும் என இந்த பத்து ஆண்டு நிறைவிற்கு பின்னர் பல இனப்பற்றுள்ள ஆவலர்களும், இளம் தலைமுறையினரும் புறப்பட்டுள்ளனர். தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளால் மட்டுமல்லாது, செயற்திறனற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலும் தாம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர்.

எனவே அவர்கள் தமது போரட்டத்தை யாருக்கு எதிராக எங்கிருந்து முதலில் ஆரம்பிக்கபோகின்றனர் என்பதை தெளிவாக தீர்மானிக்கவேண்டியது தருணமிது.