நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? – பரணி கிருஸ்ணரஜனி

இளைய தலைமுறையினர் தந்த பெரும் நம்பிக்கைகளுடன் தமிழின அழிப்பின் பத்தாவது ஆண்டு நினைவு நாட்கள் நம்மை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை எப்போதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது.

நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.

இந்தப் பத்தாவது ஆண்டு நினைவையொட்டி எழுதப்பட்ட ஆய்வுகள், கட்டுரைகள், பேச்சுக்கள், உரைகளில் கூட விதிவிலக்கில்லாமல் ஒரே ஒப்பாரி. தோல்வி உளவியல் அப்படியே வெளிப்பட்டது.

இதிலிருந்து பெற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொள்ளவோ எதுவுமில்லை.

ஆனால் இளைய தலைமுறையிடம் இறுதிப் போர் குறித்து எந்தப் புகாரும் இல்லை.

அவர்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து விலகி நந்திக்கடலிலேயே தமது கவனத்தைக் குவித்ததால் வந்த தெளிவு அது.

அவர்கள் நந்திக்கடலை ஒரு கோட்பாடாக, போராட்டத்தின் தொடர்ச்சியாக,  வெற்றியின் உள்ளடக்கமாகப் பார்ப்பதால் இது சாத்தியமாகியிருக்கிறது.

2009 தமிழின அழிப்பு நேரத்தில் 16 வயதே நிரம்பிய சிறுவன் மிகத் தீவிரமாக புலத்தில் அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியாததன் காரணமாக பலரையும் போன்று மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

பிறகு திடீரென்று காணாமல் ஒதுங்கிப் போய்விட்டான்.

கிட்டத்தட்ட அப்படி ஒருவன் இருப்பதையே நானும் மறந்தே போயிருந்தேன்.

திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தொடர்புக்கு வந்து நந்திக்கடல் குறித்து எனக்கே வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தான்.

‘அது சரி இவ்வளவு நாள் எங்கே போயிருந்தாய் ?’ என்று நான் கேட்ட கேள்விக்கு அவன் சொன்ன பதிலில் வந்த பெருமிதம் எனக்கு இன்னும் அடங்கவில்லை.

‘அண்ணே தொடர்ந்து சிந்தித்ததில் தலைவர் காட்டிய வழியின் படி அடுத்த கட்டப் போராட்டம் என்னவென்று தெளிவாகத் தெரிந்து விட்டது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற அம்மாவின் கனவை தூக்கி எறிந்து விட்டு ‘ international relations’ கற்கை நெறிக்கு பதிவு செய்து படித்து தற்போது Self – determination (சுய நிர்ணய உரிமை) இல் PhD செய்கிறேன் என்றான்.

அது மட்டுமல்ல, வேறு சக நண்பர்கள் international criminal law/ National security, Peace and War conflicts, International human rights போன்ற பல துறைகளில் PhD செய்வதாகச் சொன்னபோது மிரண்டே போனேன்.

சத்தமில்லாமல் எவ்வளவு தூரம் நகர்ந்து விட்டார்கள்.

இங்கு பத்து வருடங்களாக அமைப்புக்களை உருவாக்கி வைத்து கொண்டு ‘நண்டுப் பண்பாட்டு’ அரசியல் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழின அழிப்புக் குற்றவாளிகளை, அவர்களுக்கு உடந்தையாக இருந்த அனைத்துலக சதியாளர்களை ஒரு நாள் இவர்கள் அனைத்துலக போர்க்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஆனால் அதற்கு முன்னையவர்கள் வழி விட வேண்டும்.

அடுத்து அண்மையில் சுவிசில் வெளியிடப்பட்ட தமிழீழ நடைமுறை அரசு குறித்த ‘Structures of Tamil Eelam: A Handbook’ என்ற ஆங்கில நூலை எழுதிய மாணவிக்கு வயது இருபது. இவரும் சட்டத்துறையில் Double degree செய்பவர்தான்.

இவர் தமிழின அழிப்பு நேரம் பத்து வயது சிறுமி. இடையில் என்னவொரு பாய்ச்சல்.!

mulli kanchi நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் என்ன? - பரணி கிருஸ்ணரஜனிநந்திக்கடல் கோட்பாடுகளை கிரமமாக உள்வாங்கியதால் எல்லோரையும் போல் ஒப்பாரி வைக்காமல் நடை முறை அரசை ஆவணப்படுத்துவதன் அரசியல் புரிந்து அதை சக நண்பர்களுடன் சேர்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.

எமது நீதிக்கான பயணத்தில் இது ஒரு பாய்ச்சல் என்று துணிந்து சொல்வேன்.

பழைய பஞ்சாங்கம் பாடுபவர்கள் இளைய தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. இனியும் ஒதுங்காது முரண்டு பிடித்தால் வரலாறு உங்களை வேறு விதமாகத்தான் பதிவு செய்யும்.