நாம் சிந்தித்தே முடிவெடுத்தோம் – மாவை சேனாதிராசா

சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற எமது முடிவு சிந்தித்தே எடுக்கப்பட்டது. இதற்கமைவாக தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் வகையில் மக்களை வாக்களிக்கச் செய்வதற்கான முழு நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் எதைச் செய்தாலும் நிதானத்துடன் தான் செய்வோம். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாங்கள். சிந்தித்துத் தான் முடிவெடுத்துள்ளோம்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒன்றுகூடலிலும் நாங்கள் நிதானமாகவே செயற்பட்டோம். வாக்குரிமையை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த ஒன்றுகூடல்களில் கலந்து கொண்டோம்.  இதன்மூலம் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளித்து விட்டு, சஜித்தின் பிரசாரத்தில் பங்குகொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று சிலர் கேட்கின்றனர்.

மேடையில் ஏறி மட்டும் பிரசாரம் செய்வது ஆதரவு அல்ல. நாம் எமது பகுதிகளில் மக்களிடையே சந்திப்புக்களை நடத்தி வருகின்றோம். அத்துடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறினார்.

இதேவேளை தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இரண்டு கோடி ரூபா கடந்த ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிதி வடக்கு கிழக்கு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படும். அத்துடன் இந்நிதி சமமாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தத்தமது மாவட்ட பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளனர்.