நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் பேச்சால் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் தாமதம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்காவிற்கான அண்மைய விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை 8நிமிடங்கள் சந்தித்துப் பேசியிருந்தார். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பினர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, எல்லாவற்றிற்கும் நீங்கள் இந்தியா வந்து என்னை சந்தியுங்கள் என்று கூறியதுடன், அவர்களின் பயண ஒழுங்குகளை கவனித்துக் கொள்ளுமாறு சிறிலங்காவிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இது இவ்வாறிருக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் உரையொன்றில் இந்தியா எமக்கு எந்தத் தீர்வையும் பெற்றுத் தராது என்று கூறியிருந்தார். இந்த உரையை இந்தியத் தூதரக அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரை நேரில் சந்தித்து தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், கூட்டமைப்பு MP யின் பேச்சால் தாங்கள் அதிருப்தியில் இருக்கின்றோம் எனக் கூறியிருந்தார்.

இதை வைத்துப் பார்க்கும் போது, கூட்டமைப்பினரின் இந்தியாவிற்கான பயண ஒழுங்குகள் விடயத்தில் இந்தியத் தூதரகம் அக்கறை கொள்ளாது என்பது தெரியவருகின்றது. இதனால் இவர்களின் இந்தியப் பயணம் தாமதமாகலாம், அல்லது நிகழாதே போகலாம்.