நளினியை புழல் சிறைக்கு மாற்றுவதில் சிக்கல்கள் உள்ளது – சிறைத்துறை

வேலூர் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சிறைத்துறை தலைவர் சுனில்குமார் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். புழல் சிறையில் நளினிக்கு பாதுகாப்பு இல்லை என்று உளவுத்துறை கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் இருக்கும் போது பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கிடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளதால் இருவரையும் புழல் சிறைக்கு மாற்றினால், அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என உளவுத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக சிறைத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் நளினியும் அவரது கணவன் முருகனும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சென்று பார்க்க முடியாது என்று 80 வயதுடைய நளினியின் தாயார் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை சென்று பார்த்து வருவதில் சிரமம் உள்ளதாகவும், தனக்கு 80 வயது ஆகிவிட்டதாகவும், அதனால் நளினியை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி தான் தாக்கல் செய்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவை பரிசீலித்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவிற்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்யும் போதே சிறைத்துறை தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

வேலூர் சிறையில் இருந்து தன்னையும் தன் கணவரையும் புழல் சிறைக்கு மாற்றக் கோரி நளினி அளித்த மனு, கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.