தொடர்மழையால் சிரமங்களை எதிர்கொள்ளும் கிளிநொச்சி விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் அறுவடை செய்த நெல்லை உலர விடுவதில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக நெற்செய்கை தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மை, நோய்த்தாக்கம் என்பவற்றால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழை காரணமாக அறுவடை செய்த நெல்லை உலர வைக்க முடியாமலும் விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதுடன், சில வயல் நிலங்களில் வெள்ள நீர் வடிந்தோட முடியாது நெற் கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இதனால் அறுவடை செய்யும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தனியார், நாளுக்கு நாள் குறைந்த விலைகளில் கொள்வனவு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் 75 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூடை சிகப்பு நெல் 3400 ரூபாவிற்கும், வெள்ளை நெல் 3600 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டு வந்தது.

தற்போது 75 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மூடை சிகப்பு நெல் 2700 ரூபாவிற்கும், வெள்ளை நெல் 2500 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் நெல்லின் விலை மேலும் குறைவடையும் போது தாங்கள் மேலும் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலையே காணப்படுகின்றது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே கடந்த ஆண்டுகள் போல் விவசாயிகளிடமிருந்து உரிய விலைகளில் நெல்லை கொள்வனவு செய்வதற்கும் நெல்லுக்கான உத்தரவாத நிலையினை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.