தேர்தல் பிரசார செலவுகளை வெளிப்படுத்திய கண்காணிப்பு நிலையம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிராதான கட்சி வேட்பாளர்கள் தங்களின் பிரச்சாரத்திற்காக பெருந்தொகை பணத்தை செலவிடுகின்றனர். இந்த நிதி போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் கறுப்புப் பண முதலைகளிடமிருந்து சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையம் சந்தேகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையத்தின் கொழும்பு அலுவலகத்தில் தேர்தல் பிரச்சார செலவுகளை வெளிப்படுத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த நிலையத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்படி கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் தமது சொத்தின் பெறுமதி சராசரியாக 10 மில்லியன்கள் என தெரிவித்திருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் கடந்த இரண்டு வாரங்களில் ஒரு பில்லியன் ரூபா வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ளனர். இவ்வாறிருக்கும் போது இது எவ்வாறு சாத்தியமாகும் எனவும் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் இணையதளத்தில் இந்த விபரங்களை பார்வையிடலாம். இதில் மக்கள் விடுதலை முன்னணியே அதிக சொத்துப் பெறுமதியைக் காட்டியுள்ளனர்.  அவர்கள் ஓரளவு உண்மையான செலவுகளை வெளிக்காட்டியுள்ளனர். ஏனைய கட்சிகள் 10 மில்லியன் வரையான தொகையையே கணக்கில் காட்டியுள்ளனர்.  இவ்வளவு தொகையை கணக்கில் காட்டியுள்ள இக் கட்சிகள் ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட்டுள்ளன.

உத்தியோகபூர்வ தேர்தல் அறிக்கையில் 5.5 பில்லியன்களாக காணப்படும் அதேவேளை, இரண்டு வாரங்களுக்குள் ஒரு பில்லியனாக காணப்படுமாயின் தேர்தல் நிறைவு பெறும் போது கட்சிகளின் செலவு 1000கோடிகளை அதாவது 10 பில்லியன்களை எட்டலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ள அறிக்கையின்படி கட்சிகளின் சொத்துகள் 10 அல்லது 08 மில்லியன்கள் என்றாலும், மேலதிக நிதி எங்கிருந்து வந்தது? எவ்வாறு பெறப்பட்டது?

இதனாலேயே இந்தப் பணம் கறுப்புப் பணமாக இருக்கலாம் அல்லது பாதாள உலகக் குழுவினரின் பணமாக இருக்கலாம்  அல்லது போதைப் பொருள் விற்பனையாளர்களின் பணமாகக்கூட இருக்கலாம் எனவும் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

கடந்த மாதம் 14ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப்பகுியில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவே அதிகளவான பணத்தை தேர்தல் பணிக்காக செலவிட்டுள்ளது. இதற்கமைவாக பொதுஜன பெரமுன கட்சி 42 மில்லியன்களை அச்சு ஊடகங்களில் பிரச்சார நடவடிக்கைக்காக செலவிட்டுள்ளது. இலத்திரனியல் ஊடகங்களுக்காக 456 மில்லியன்களையும், கட்சிக் கூட்டங்கள், நிகழ்வுகளுக்காக 76 மில்லியன்களையும் செலவிட்டுள்ளது. ஆக மொத்தம் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி இக்காலப்பகுதியில் 574 மில்லியன் ரூபாய்களை இதுவரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி அச்சு ஊடகங்களுக்காக 68 மில்லியன்களையும், இலத்திரனியல் ஊடகங்களுக்காக 219 மில்லியன்களையும் கூட்டங்கள், நிகழ்வுகளுக்காக 85 மில்லியன்களையும் செலவிட்டுள்ளது. ஆக மொத்தம் 372 மில்லியன் ரூபாய்களையும் இதுவரை செலவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஏனைய இரு பிரதான வேட்பாளர்களைவிட குறைந்தளவிலேயே செலவிட்டுள்ளது. அச்சு ஊடகங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியனை செலவிட்டுள்ளது. இலத்திரனியல் ஊடகங்களுக்காக 4 மில்லியன்களை செலவிட்டுள்ளது. அதனைவிட அந்தக் கட்சியின் கூட்டங்கள், நிகழ்வுகளுக்காக 11 மில்லியன்களை செலவிட்டுள்ளது எனவும் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.