தேர்தலை பிற்போட வேண்டும்

ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வைரஸ் அச்சம் நீங்கும்வரை எந்த தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஏனையவர்களும் மக்களுடைய பாதுகாப்பினை முதன்மையாக கருதி மக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளும் பரப்புரைகளை கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை கையளித்த பின்னர் அங்கு செய்தியாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்ப்பில் யாழ்.தேர்தல் தொகுதியில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலமையில் வேட்புமனு நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 5 தேர்தல் மாவட்டங்களிலே போட்டியிடுகின்றது. இந்த 5 தேர்தல் மாவட்டங்களிலும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து தேர்தல் ஆணைக்குழு இன்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் காலம் முடிவடைந்த பின்னர் சில தீர்மானங்கள் எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளோம்.

குறிப்பாக கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக பொது மக்களுடைய பாதுகாப்பபை முதன்மையானதாக கருதி, தேர்தலை பிற்போட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரியுள்ளோம்.

பொது மக்களுடைய பாதுகாப்புத்தான் எங்களுடைய அதி உச்ச கரிசனையாக உள்ளது. ஆனாலும் அதனுடன் சேர்ந்து சுயாதீனமான தேர்தல் நடக்க வேண்டுமானதாக இருந்தால் ஜனநாயக பண்பியல்புகல் பல நடமுறைப்படுத்தப்பட வேண்டும். சுயாதீனமாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும். மக்கள் பரப்புரைக் கூட்டங்களுக்கு சென்றுவரக் கூடிய சூழ்நிலை இருக்க வேண்டும். தேர்தலன்று மக்கள் அச்சமில்லாமல் சென்று வாக்களிப்பதற்கான சூழ்நிலை இருக்க வேண்டும். இவ்வாறான சூழல் இருந்தால்தான் சரியான, முறையான தேர்தலாக இருக்கும். ஆகவே ஆட்சியிலே உள்ள கட்சியை தவிர தேர்தலில் போட்டியிடும் ஏனைய பால கட்சிகள் தேர்தலை பிற்போடுமாறு கோரியுள்ளார்கள்.

வேட்புமனுக்கான காலம் நீடிக்கப்படாத காரணத்தினாலே நாங்கள் அமைதியாக, எவருக்கும் இடையூறு இல்லாமல், சனநெருக்கடி இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.

இதை தொடர்ந்து எமது பரப்புரைகளையும் நாங்கள் நிறுத்தி வைப்போம். பொது மக்கள் கூடுகின்ற சூழ்நிலைகளை நாங்கள் தவிப்போம். பொறுப்போடு செயற்படுகின்றோம். மற்றவர்களும் பொறுப்போது செயற்படுமாறு கேட்டுக் கொள்ளுகிற்றோம். சூழ்நிலை சரியான நலமைக்கு திரும்புகின்ற போது நாங்கள் இந்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்பது எங்களது நம்பிக்கையாக உள்ளது என்றார்.