தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்(பகுதி -2)- பரமபுத்திரன்.

ஈழத்து தமிழ் அரசியல் என்பதை இன்றைய அரசியல் செயல்பாட்டு சூழலுடன் மட்டும் ஒப்பிட்டு நோக்க முடியாது. இதனை கடந்தகால அரசியல் சூழலுடன் இணைத்தே சிந்திக்க வேண்டும். உலகத்திலுள்ள பல நாடுகள் குறுகிய காலத்துள் சனநாயக முறையில் அல்லது வேறு ஆட்சியமைப்பு வகையில் தம்மை வலுவான நாடுகளாக கட்டியெழுப்பியுள்ளன.

இதனால் ஈழத்திலிருந்து தமிழர்கள் மட்டுமல்ல, சிங்களவர், முஸ்லிம்கள் கூட ஏனைய முன்னேறிய நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள். இலங்கையில் அரசியல் செய்பவர்கள் கூட தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு கடைசி காலத்தில் தொடர்ந்து தங்களது அரசியலை செய்கின்றார்கள் என்று சொல்லலாம். இதற்கு காரணம் வெளிநாடுகளில் வசதியாக வாழலாம் என்பதால் என்று மட்டும் சொல்ல முடியாது. நிம்மதியாக வாழலாம் என்ற கருத்தும் இருக்கலாம்.

இந்த நிலை இலங்கை அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்கின்றது என்று உறுதியாக கூறலாம். அதாவது குறித்த தொகுதியினர் மட்டுமே இன்று அரசியல் செய்கின்றார்கள். அவர்களை மீறி புதியவர்கள் அரசியலுக்குள் புகுவது முடியாத காரியம் என்ற மாயை தோற்றுவிக்கப்பட்டு விட்டது. அதற்கும் மேலாக அரசியல் என்பது குறிப்பிட்ட மக்களின் பிள்ளைகள், சொந்தக்காரர்கள் தவிர ஏனையோருக்கு ஆபத்தானாது என்றும் ஒருநிலை உண்டு.

அத்துடன் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எதனையும் துணிந்து சொல்லும் எண்ணமும் அரசியல்வாதிகளிடம் குடிகொண்டு விட்டது. இதனை வைத்து பார்க்கும் போது தனிப்பட்ட நபரின் வெற்றியா அல்லது மக்களுக்கு வெற்றியா என்ற கேள்வி மக்களிடமும், அரசியல்வாதிகளிடமும் முன்னிறுத்தப்பட வேண்டியது.

இன்றைய உலக அரசியல் சூழல் இன அடிப்படையில் கட்டமைப்பதாக சொல்ல முடியாது. தனித்த நாடுகள் மட்டத்திலும் சரி, உலக நாடுகள் மட்டத்திலும் சரி அரசியல் என்பது மத அடிப்படை சார்ந்ததாகவே முனைப்பு பெறுகின்றது என்று சொல்ல முடியும். இலங்கையில் பௌத்தம் வலுவாக இருப்பதால் அது சார்ந்து அடக்குமுறை எழுகின்றது.

பௌத்த மதத்தின் இந்த வலுவான நிலை சைவத் தமிழர்களை மட்டுமே குறிவைப்பதாக தோன்றும். ஆனால் அந்த நிலை இன்று மாறி வருகின்றது. தமிழ் மக்கள் சிங்களவருடன் மோதுவது போல தெரியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது உண்மை அல்ல. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து குழந்தைப் பிள்ளையை கடிக்கும் நிலை போல சைவத் தமிழர்கள் தாக்கப்படும் போது அதனுடன் இணைந்த ஏனைய மதத்தினரான முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என்பவர்களும் தாக்கப்படுவர்.7dff099a65b026895942a872c251a542 XL தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்(பகுதி -2)- பரமபுத்திரன்.

உண்மையில் சைவத் தமிழர்கள் பரிதாபத்துக்குரிய மக்கள். காரணம் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மத அடிப்படையில் வலுவான பிணைப்புள்ளவர்கள். அவர்களுக்கென்று அமைப்புகள் கொண்டவர்கள்.

ஆனால் சைவர்கள் அவர்களுக்கென்று குரல் கொடுக்க வலுவான அமைப்புகள் அற்றவர்கள். காலம் முழுவதும் கோவில் கட்டுகின்றோம் என்று பணம் வசூலிப்பவர்களையும், சாமியார்கள் என்று தங்களை கடவுளின் பிரதிநிதிகள் என்று சொல்லுபவர்களையும், சாமியிடம் இவர்களின் செய்திகளை சொல்ல ஊதியமாக அருச்சனை செய்யப் பணம் வாங்குவபவர்களையும், அந்தப் பணத்தில் பங்கு கேட்கும் கோயில் நிர்வாகங்களையும் நம்பி வாழ்பவர்கள். இறைவனை கும்பிட்டு விட்டு உண்டியலில் காசு போட்டு இறைவன் எங்களை வாழவைக்கிறான் என்று முழுமையாக நம்புபவர்கள். இவர்களை சுலபமாக ஏமாற்றலாம்.

எனவே உலகில் வலுவான மதங்கள் என்ற நிலையை கிறிஸ்தவமும், இஸ்லாமுமே பிடித்துக் கொள்கின்றது. அவை இரண்டும் எதிர்த்து மோதும் வல்லமை கொண்டவை. அதே போன்று பெளத்தம் உள்ள நாடுகளில் பெளத்த அடக்குமுறை நடந்தபடிதான் உள்ளது. எனவே தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டதும் இலங்கையில் நடக்கக் கூடிய அடுத்த போர் இஸ்லாம், கிறிஸ்தவம் சார்ந்ததாக இருக்கும் என்பது ஏற்கனவே காட்டப்பட்டு விட்டது. அதே வேளை பௌத்த சிங்களம் எந்தக் கவலையும் இல்லாது இதனை பார்த்துக் கொண்டிருக்கும் என்பதே சரியானது. காரணம் முஸ்லிம்கள், தமிழர்கள், அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளை பாதிப்பு பகுதியாக தெரிவு செய்தால் அப்போதும் தமிழர்களே பாதிக்கப்படுவர்.

தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து நோக்கினால் அரசியல் விழிப்புணர்வு குறைந்த அல்லது விழிப்புணர்வு அற்ற மக்களாகவே வாழ்கின்றனர் என்று சொல்ல முடியும். அரசியல் என்பது தனித்து அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரித்தானது. தமிழர்களிடம் அது இல்லை. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது வெறும் பேச்சாய் எம்முன் சொல்லப்படுகின்றது. படிக்கும் மாணவர்கள் கூட பண்பற்றவர்களாகவே உள்ளனர்.

கொலை, கொள்ளை, வீதி விபத்து, போதை, சாதி என்பன மக்களை வருத்துகிறது. சமூதாயத்தை சீர்படுத்த வேண்டிய கல்விச் சமூகம் அந்த மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்கின்றது. யாரையும் நாங்கள் பகைக்க வேண்டாம் என்று இவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றது அரசியல் தலைமைகள். சிங்கள அரசு தான் மக்களை கட்டுப்படுத்துகின்றது.images 2 தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்(பகுதி -2)- பரமபுத்திரன்.

அரசு தானே கட்டுப்படுத்த வேண்டுமென்பது சரி. ஆனால் சட்டம் ஒழுங்குகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாட்டில் நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டியது யார் பொறுப்பு? எமக்குள் ஒற்றுமை, புரிந்துணர்வு வேண்டாமா?. இதனை மக்களுக்கு எடுத்து சொல்லக் கூடாதா? அரசியல் என்பது மக்களுக்கு உரிமை பெற்றுத் தருவோம் என்று சொல்வதுதானா? என்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டும். இதுவும் அரசியலுடன் சேர்ந்ததுதான்.

நான் சிறுவயதாக இருக்கும் காலத்தில் நடந்த கோவில் திருவிழாக்கள் எனக்கு ஞாபகமிருக்கின்றது. திருவிழாக் காலங்களில் அங்குள்ள இடங்கள் கடைகளால் நிரம்பும். பல்வகை பொருட்களால் அந்தக் கடைகள் நிரம்பியிருக்கும். கடலை, கச்சான், சோழப்பொரி, இனிப்புப் பண்டங்கள், குளிர்கழி இப்படி இன்னும் சொல்லலாம். அதுபோல கோவிலுக்கு தேவையான பொருட்கள் விற்கும் ஒரு சிலகடைகளும் இருக்கும்.

ஆனால் கோவிலுக்கான பொருட்கள் விற்கும் கடையிலும் பார்க்க ஏனைய கடைகளிலே கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே தேவைப்படும் காலத்தில் அவர்கள் சரியாக வியாபாரம் செய்ய தவற மாட்டார்கள். ஏனென்றால் இக்காலத்தை விட்டால் அவர்களுக்கு வருமானமும் இல்லை. வாழ்க்கையும் இல்லை. எனவே எதனை எப்போது செய்ய வேண்டுமோ அதனை அப்போதே செய்ய வேண்டும்.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” யாருக்கும் பழக்கம் மாறாது. இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார்கள். எங்களால் முடியாது என்றால் அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும் அதுவும் நடப்பதாக தெரியவில்லை. இந்த அரசியல் தலைவர்கள் அன்றே தமிழர்களுக்கு தனி உரிமை, தமிழருக்கு விடுதலை, தமிழருக்கு தனிநாடு என்று முழங்கியவர்கள்.

எனவே தலைவர்களின் வல்லமையை தமிழர்கள் அறிவார்கள். தமிழர்களின் இயல்பை அரசியல் தலைவர்கள் அறிவார்கள். இளைய சமுதாயம்கூட தமிழ் மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பதாக தெரியவில்லை. ஆகவே அரசியல் கூட்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமா என்பது மக்களுக்கே தெரிந்த ஒன்று.

தேர்தலுக்கான தமிழ் அரசியல் கூட்டுகளும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளும்-பகுதி1

http://www.ilakku.org/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf/