தென்கொரிய அதிகாரியை கொன்று உடலை எரித்த வடகொரிய இராணுவத்தினர்

கடந்த வாரம் காணாமல் போன தென்கொரிய மீன்வள அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டு, உடலை தீ வைத்து எரித்ததாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் கடல் எல்லையாக செயற்பட்டு வரும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லையில் கடந்த வாரம் தென்கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இவர் வடகொரியாவிற்குள் நுழைவதற்கு முயன்றதாக வடகொரிய இராணுவம் தெரிவித்திருந்தது.

47 வயதான அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்க வடகொரிய எல்லைக்குள் நுழையும் எவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என வடகொரியா முன்னர் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி அதிகாரி வடகொரிய ரோந்துப் படகில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும், பின்னர் உயர் அதிகாரியின் உத்தரவிற்கமைய வடகொரியப் படையினர் அவரை சுட்டுக் கொன்றதாக உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர் உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.