தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்

தூத்துக்குடி முதல் இராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடலரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இராமநாதபுரம் தொடக்கம் கன்னியாகுமாரி வரையுள்ள 10,500 சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான மன்னார் வளைகுடா பகுதியானது கடல் வாழ் உயிரினங்கள் வாழ சிறந்த பகுதியாகவும், பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்வதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் பவளப்பாறைகள் நிறைந்துள்ள இத்தீவுகளால் சுனாமி போன்ற பேரிடர்களிலிருந்து இப்பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால் தற்காலிகமாக ஏற்படும் இயற்கை பேரிடர்களால் இந்தத் தீவுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு வருகின்றது. இயற்கை மாற்றம், பேரிடர் போன்ற காரணங்களால் தூத்துக்குடி பகுதியிலிருந்த விலங்கு சல்லித்தீவு, கீழக்கரை பகுதியில் இருந்த பூவரசன்பட்டி உட்பட 2 சிறிய தீவுகள் கடலில் மூழ்கிவிட்ட நிலையில், மேலும் 19 தீவுகள் கடலில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி கீழக்கரை, மண்டபம், தூத்துக்குடி, வேம்பார் கடல் பகுதிகளில் வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்லதண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டி தீவு, தலையாரி தீவு, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி தீவு, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கிள் தீவு ஆகிய 21 தீவுகள் உள்ளன.

இதில் தூத்துக்குடி பகுதியில் 4 தீவுகள், வேம்பாரில் 3 தீவுகள், கீழக்கரையில் 7 தீவுகள், மண்டபத்தில் 7 தீவுகள் என நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.

இது தொடர்பாக கடல்சார் ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி பகுதியிலுள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளது. கீழக்கரை பகுதியில் உள்ள தீவுகள் 43.49 சதவீதம், வேம்பார் பகுதியில் உள்ள தீவுகள் 36.21 சதவீதம், மண்டபம் பகுதியிலுள்ள தீவுகள் 21.84 சதவீதம் நிலப்பரப்பில் குறைந்துள்ளன. விதிவிலக்காக மண்டபம் பகுதியிலுள்ள முயல் தீவு, மனோலி  தீவு, சிங்கிள் தீவு உட்பட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தீவுகளின் பரப்பு சுருங்குவதற்கு முக்கிய காரணமாக கடலரிப்பு உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், தூத்துக்குடி பகுதியில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வரும் 2036இற்குள் முழுமையாக கடலினுள் மூழ்கிவிடும்.

இதேபோல் வேம்பார் பகுதியிலுள்ள உப்புத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள் 2064ஆண்டில் இருந்தும், கீழக்கரை பகுதியில் உள்ள ஆனையப்பர், வாலிமுனை, புவரசன்பட்டி உட்பட்ட தீவுகள் 2032ஆண்டில் இருந்தும், மண்டபம் பகுதியில் உள்ள மனோலி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் 2140 ஆண்டிலிருந்தும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இந்த ஆபத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக வனவளத்துறையினர் கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் வளைகுடா கடலில் உள்ள தீவுகளைச் சுற்றிலும் பவளப்பாறைகள் உள்ளன. இந்தப் பாறைகளை மீனவர்கள் சேதப்டுத்தாமல் இருந்தாலே தீவுகள் அழியாமல் காப்பாற்றப்படும். மேலும் தீவுகளில், வனத்துறை சார்பில் வருடத்திற்கு 500 மரக்கன்றுகளை நட்டு வருகின்றோம். ஆகவே தீவுகள் அழியாது என்றனர். அத்துடன் மீனவர்கள் பவளப்பாறைகளை சேதப்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றோம் என்றும் கூறினர்.