துயிலும் இல்லத்தில் படையினர் மேற்கொள்ளும் கட்டுமானங்கள் நிறுத்தப்படவேண்டும் – ஜீவராசா

விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் உடன் நிறுத்த வேண்டும்!

இராணுவத்தினர் துயிலுமில்லத்தில் மேற்கொள்ளும் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் சமூக ஆர்வலருமான ஜீவராசா தெரிவித்துள்ளார்.

 ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது விஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் அண்மைக் காலமாக இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது இது ஓர் சுமூகமான சூழ்நிலைக்கு எதிரானதொன்றாக நான் கருதுகின்றேன் இதனை உடனடியாக நிறுத்தி நிலைமைகளை சீர் செய்ய வேண்டும்

யுத்தத்தில் இறந்த வீரர்ககளை ஒவ்வொரு வருடமும் அமைதியான முறையில் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்துவருவதனை அனைவரும் அறிந்த விடையம் இனவாதிகளை பொறுத்தவை அவர்கள் புலிப் பயங்கரவாதிகள்??

ஆனால் அவர்கள் அனைவரும் எமது உறவுகள் எங்களின் பிள்ளைகள் அவர்களின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்யப்பட முடியாத ஒன்று அவர்களை வருடத்தில் ஒருநாள் நினைவு கூர்ந்து வருகின்றோம்

எமது பிள்ளைகள் விதைக்கப்பட்ட புனித பூமியில் இராணுவத்தினர் நிரந்தர கட்டிடங்களை அமைப்பது மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயலாகவே நான் பார்கின்றேன் முதலில் இவ்வாறான கடும்போக்கு வேலைகளை நிறுத்தி மக்களின் மனங்களை வெல்லப் பாருங்கள்.

அதனை விடுத்து தொடர்ந்தும் இவ்வாறான செயல்களை முன்னெடுத்து நீங்களே மக்களுக்கும் உங்களுக்குமான இடைவெளிகளை அதிகரித்து செல்கிறீர்கள்.

துயிலுமில்லம் என்பது எங்களுக்கு கோவில் நாங்கள் பூசிக்கவே செல்கின்றோம் கடந்த காலத்தில் கல்லறைகளை கனரக வாகனங்கள் கொண்டு உடைத்தீர்கள் அவற்றை தாங்கிக் கொண்டோம் வழிபாட்டு இடம்போன்று கண்காணித்து வரும் இப் பூமியில் நிரந்தரக் கட்டிடம் அமைப்பதனை உடனே நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப் படுவோம் இவை தொடர்பில் தற்போதைய நிலைமைகளை தெளிவு படுத்தி நாட்டின் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவிப்பு ஒன்றை செய்ய உள்ளேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது