தீபாவளிக்கு தீர்வு வரும் என்று கூறும் கூட்டமைப்பினர் ஐந்து தீபாவளிகள் வந்து போனதை மறந்துவிட்டனர் – நமால்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் இணைந்து சஜித் பிரேமதாசவினை ஆதரிப்பதற்காக 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொள்வரா இல்லையா என்பதற்கு முன்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ இங்கு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவினை ஆதரிக்கும் வகையில் பொதுஜனபெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (23) மட்டக்களப்பு களுதாவளையில் நடைபெற்றது.

பொதுஜனபெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தலைமையில் களுதாவளை கலாசார மண்டபத்தில் இந்த தேர்தல் பிரசார முதல் கூட்டம் நடைபெற்றது.

இந்த பிரசாரக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஸ கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ,

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையானின் ஆட்சி மாறியதன் பின்னரும் மகிந்தவின் ஆட்சி மாறியதன் பின்னரும் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய பின்னடைவினை எதிர்நோக்கியுள்ளது.இங்கு சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாததே காரணமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பில் எதனையும் செய்யவில்லை. அதேபோன்று முஸ்லிம்
காங்கிரசும் ரிசாத்தின் கட்சியும் மட்டக்களப்பினை கவனத்தில் கொள்வதில்லை.

namal 2 தீபாவளிக்கு தீர்வு வரும் என்று கூறும் கூட்டமைப்பினர் ஐந்து தீபாவளிகள் வந்து போனதை மறந்துவிட்டனர் - நமால்தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டுவரும் போது தீபாவளிக்கு தீர்வு தருவோம் என்று மட்டும்தான் சொல்லுவார்கள். ஐந்தாவது தீபாவளியும் வந்துவிட்டது. சமந்தன் ஐயா அடுத்ததாக என்ன சொல்லலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

சம்பந்தன் ஐயாவினால் கட்சியில் எதனையும் செய்யமுடியாது. சுமந்திரனால் மட்டுமே கட்சியில் தீர்மானங்களை எடுக்கமுடியும். சுமந்திரன் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சத்துடனேயே செயற்படுகின்றனர். சுமந்திரன் ரணில் விக்ரமசிங்கவின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே செயற்படுகின்றார். சுமந்திரனை பார்த்துக்கொள்வது ஐக்கிய தேசிய கட்சியாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஐக்கிய தேசிய கட்சியின் கிளையாகவே
செயற்பட்டுவருகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் இணைந்து சஜித் பிரேமதாசவினை ஆதரிப்பதற்காக 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொள்வரா இல்லையா என்பதற்கு முன்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் பணியை ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவுக்கு விலைபோய்விட்டார்கள். தங்களது தேவைகளை மட்டும் பூர்த்திசெய்வதற்கே அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெருமளவான உயிர்கள் பறிக்கப்பட்டன. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுடன் இந்த அரசாங்கத்தின் பலருக்கு தொடர்புகள் இருந்துள்ளன. அந்த அரசியல்வாதிகளின் வீடியோக்களும் இருக்கின்றன. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் தான் உள்ளனர்.அது தெரிந்தும்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மக்களைப்பற்றி சிந்திப்பதில்லை.