திரு.சுமந்திரன் ஏன் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்? மனோன்மணி சதாசிவம்.(பதில் நீதவான்)

ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் தமிழீழத்தில் வாழும் தமிழர்களாகிய நாங்கள், அற்ப சொற்ப சலுகைகளுக்கும் பதவிகளுக்கும் விலை போகும்,சொந்த இனத்தயையே சேர்ந்த துரோகிகளால் தொடர்ந்தும் துரோகத்துக்கு உள்ளாகிறோம்.

நாங்கள் இந்த துரோகிகளின் ஈனத்தனமான செயல்களால் இனியும் தொடர்ந்து பாதிக்கப்பட முடியாது. 2009 வரை தமிழீழத்தில் இடம்பெற்ற மாபெரும் தியாகங்களுக்கு பின்னரும் இடம்பெறும் இந்ந துரோக செயல்களின் தொடர்ச்சியினால் எங்களுடைய சகிப்புத்தன்மை எல்லை கடந்து விட்டது.
ஒரு அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் ஒருவர் தனது சொந்த கருத்தை தவிர்த்து,மக்களின் குரலாக, மக்களின் கருத்தை பொது அரங்குகளில் தெரிவிக்கும் பக்குவம் உடையவராக இருக்க வேண்டும்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான திரு. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழர்களாகிய எங்கள் மனங்களை நோகடிக்கும் விதமாக அமைகின்றன. அவரிடத்தில் கொஞ்சமாவது கண்ணியம் எஞ்சி இருந்தால், அவர் உடனடியாக தானாக முன்வந்து பதவி விலக வேண்டும். அவர் தனது சொந்த விருப்பப்படி அதை செய்யத் தவறினால்,தமிழ் மக்களாகிய எங்களின் கருத்துக்கு மதிப்பளித்து,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அவரை கட்சியிலிருந்து நீக்கிவேண்டும்.

மக்களாகிய நாங்கள் திரு சுமந்திரனின் அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அவர் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையையும் மதிக்கும் அதேவேளை, அவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கபட்ட நோக்கத்தையும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களின் அரசியல் அபிலாசைகளையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தனது சொந்த நிகழ்ச்சி நிரலைத் நிறைவேற்றும் தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த அவர் அனுமதிக்கப்படக் கூடாது என்பதை நாம் தெளிவாகக் கூற விரும்புகிறோம். அவரிடம் துணிவு இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி சுதந்திரமான ஒரு கட்சியை அமைத்துää தமது சொந்த கருத்தை தாராளமாக போதித்து வெற்றிபெற்றுக் காட்ட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பில் குளிர்காய்வதை நிறுத்த வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வரலாறு என்பது எப்போதும் விடுதலைப் புலிகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, விடுதலைப் புலிகளின் முயற்சியில் 2001 ஆண்டு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி,இலங்கை தமிழ் காங்கிரஸ்,டெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்பட்டதை தொடர்ந்து உருவாக்கபட்டது.

அப்போதைய TULF பொதுச்செயலாளர் திரு.சம்பந்தன் “ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கு (புலிகள்) முழு அரசியல் ஆதரவையும் அளிக்க வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் சக்திகளும் ஒரே பதாகையின் கீழ் ஒன்றுபடுவதற்கான நேரம் வந்து விட்டது” என்று அறிவித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில்; “இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடையே புலிகளுக்கு கிடைத்த பெரும் ஆதரவு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாக தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகளாக நடைபெற உள்ள அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளை அங்கீகரிக்கும் ஆணையையே மக்கள் தேர்தல் மூலமாகவும் கூட்டமைப்புக்கு வாக்களித்ததனூடாகவும் நிரூபித்துள்ளனர்” என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன் இலங்கை நாடாளுமன்றத்தில், வடகிழக்கில் உள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததாகவும், புலிகள் தலைவரான திரு வேலுப்பிள்ளை பிரபாகரனின் கொள்கைகளை மக்கள் இன்றும் ஆதரிப்பதாகவும், அடங்கிக்கிடந்த தமிழர்களை தட்டி எழுப்பிய பிரபாகரன் தமிழர் வரலாற்றில் சிறந்த தலைவர்” எனவும் தெரிவித்தார்.

“புலிகளின் பங்களிப்புடன் எங்கள் மக்களின் சக்தியாக உருவான தமிழ் தேசிய கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது” என்று 2019 ஆம் ஆண்டில் டெலோ தலைவர் திரு செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளின் பங்களிப்பு குறித்து பேசிய போது தெரிவித்திருந்தார்.

2010 இல் திரு.சுமந்திரன் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் தேசிய பட்டியல் மூலமாகதான் முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராகினார். கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியோ அல்லது அதன் ஆரம்பகால வரலாற்றைப் பற்றயோ அறிந்திருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்ளும் நாங்கள் அவரை அவ் வரலாற்றை எங்காவது தேடிக்கற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறோம்.

திரு.சுமந்திரன் உண்மையில் ஒரு மனித உரிமை வழக்கறிஞரோ அல்லது மக்கள் பிரதிநிதியோ அல்ல என்பதை அவர் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் அவர் மனித உரிமைகள் சட்டம் அல்லது சர்வதேச சட்டத்தை படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர் எந்த அரசியல் கைதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அல்லது எந்தவொரு பொது நலன் வழக்குகளிலும் ஈடுபட்டதற்கான சாட்சிகள் இல்லை.

உண்மையில்,அவர் எப்போதுமே கொழும்பை தளமாகக் கொண்டு பணத்துக்காக வழக்காடும் ஒரு சராசரி அப்புக்காத்தாகவே வாழ்ந்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி ஒருபோதும் அவர் கவலைப்படவில்லை.

ஒரு வழக்கறிஞருக்கு உரிய அடிப்படை ஒழுக்க விதிமுறைகளை கூட திரு சுமந்திரன் என்றும் பின்பற்றியதில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக 2006 இல் வடக்கு கிழக்கை இலங்கை அரசு பிரித்ததை எதிர்த்து டெலோ சார்ப்பாக தொடரப்பட்ட வழக்கில் சட்டவாளராக நியமிக்கப்பட்ட, அந்த வழக்கை மனுதாரர்களின் அனுமதியின்றியே மீள பெற்றுக்கொண்டார்.

இது பாரதூரமான குற்றம் மட்டுமன்றி, அவர் ஒரு சட்டத்தணியாக கடமையாற்ற தகுதியற்றவர் என்பதையும் நிருபிக்கிறது. ஒரு வழக்கறிஞர்; தனக்கு பரிச்சயம் இல்லாத துறையில் தன்னை நிபுணர் என பாசாங்கு செய்வதும், எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் சட்ட ஆலோசனைகளை வழங்க முயற்சிப்பதும் கீழ்தரமான ஒரு தொழில்சார்ந்த தந்திரமாகும்.

இவ்வாறாகவே,திரு சுமந்திரன் தன்னை ஒரு மனித உரிமை வழக்கறிஞராகக் காட்டி,சர்வதேச சட்டம் தொடர்பான விடயங்களில் தவறான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் மக்களை தவறாக வழிநடத்தும் கேவலமான செயலை செய்து வருகிறார்.

எடுத்துக்காட்டாக, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2015 நவம்பரில் நடைபெற்ற ஒரு விழாவில் திரு சுமந்திரன் EXPRESS  செய்தித்தாள் ஊடகவியலாளரிடம் “1990களில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லிம்களை கட்டாயமாக வெளியேற்றியது ஒரு இன சுத்திகரிப்பு நடவடிக்கை (Ethhnic Cleansing)” என்று தெரிவித்தது மட்டுமன்றிää அதை தமிழர்கள் காலம் காலமாக அனுபவித்துவரும் இனப்படுகொலையுடன் ஒப்பிட்டும்; பேசியிருந்தார்.

அவரது இந்த கருத்து,அவர் சர்வதேச சட்டம் பற்றி அறியாதவர் மட்டுமல்ல அவருக்கு வரலாறு குறித்த அறிவும் மிகக்குறைவாக உள்ளது என்பதையும் சந்தேகத்திற்கு அப்பால் நிருபிக்கிறது. முதலாவதாக,திரு சுமந்திரன்,இன சுத்திகரிப்பு என்பதன் சட்டரீதியான வரைவிலக்கணத்தை அவர புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இன சுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கான வித்தியாசத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.

யூகோசிலாவியாவில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்களை விசாரிக்க அமைக்கபட்ட ஐக்கிய நாடுகளின் நிபுணர் ஆணையம்,அதன் இடைக்கால அறிக்கையில் (S/25274);

இனச்சுத்திகரிப்பு என்றால் “மரபுவழியாக வாழ்ந்த இடத்திலிருந்து ஒரு இன மக்களை பலத்தை பயன்படுத்தி கட்டாயமாக வெளியேற்றுதல் ” என்று குறிப்பிட்டுள்ள போதிலும், அதன் இறுதி அறிக்கையில் (S/1994/674) “ஏதாவது ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை சேர்ந்தவர்களால்,இன்னொரு இனத்தை அல்லது மதத்தை சேர்ந்த மக்களை, குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் இருந்து,வன்முறை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் நிரந்தரமாக வெளியேற்றுதற்காக, திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட கொள்கையே இனசுத்திகரிப்பு” என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம்களை முழுமையாக அகற்றி தமிழிருக்கு மட்டுமான தமிழீழத்தை உருவாக்கும் எந்தவிதமான “திட்டமோ” அல்லது ஒரு “கொள்கையோ” புலிகளிடம் என்றும் இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

சிங்கள ஆட்சியாளரின் சதியால், முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த, ஜிஹாத் என்ற ஆயுத குழு உருவாக்கபட்டது, மதக்கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்த நிலையில்,யாழ்ப்பாணத்தில் உள்ள சில முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் மசூதிகளில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து,அங்கு நடைபெறவிருந்த பெரும் மதக்கலவரத்தை தடுப்பதற்காவே முஸ்லீம்கள் தற்காலிகமாக வெளியேற்றபட்டனர்.

அந்த சூழ்நிலையில் நிலையில், அவ்வாறான ஒரு தந்திரோபாயமான முடிவை எடுக்க புலிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்த சமயோசித முடிவால் பெரும்தொகையான உயிர் மற்றும் உடமை சேதங்கள் தவிர்க்கபட்டன என்பதை அறிவாளிகள மட்டுமே உணர்வார்கள்.

டாக்டர் ஞான சங்கரலிங்கம் தனது கட்டுரையில் சரியா கசுட்டிக்காட்டியபடி, முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தமிழர்கள் ஆக்கிரமிக்கவோ அல்லது பயன்படுத்தவோ புலிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அவை யுத்த நிறுத்தத்தின்போது திரும்பி வந்த முஸ்லிம் உரிமையாளர்களிடம் புலிகளால் பாதுகாப்பாக திருப்பி கையளிக்கபட்டன.

13 ஏப்ரல் 2002 அன்று, தமிழ்த் தேசியத் தலைவர் திரு பிரபாகரன் தலைமையில் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் ஒரு கூட்டத்தை நடத்தினர். இந்த சந்திப்பு தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் உடன்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திரு ரவூஃப் ஹக்கீம், திரு அதாவுல்லா, திரு உத்துமலேபே, திரு மொஹிதீன் அப்துல் கேடர், திரு பஸீர் செகு தாவூத், திரு மன்சூர் நூர்தீன் மற்றும் திரு மன்சூர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம்,அரசியல் துறைத் தலைவர் திரு சு.ப தமிழ்செல்வன் மற்றும் விடுதலைப் புலிகளின் மாவட்டத் தளபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து,விடுதலைப் புலிகள் சார்பில் திரு அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், “கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக நான் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்டேன். கடந்த காலத்தில் நடந்ததை மறந்துவிட வேண்டும். அவர்களுடன் பேசி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் “ என்று குறிப்பிடது மட்டுமல்லமல், வடக்கில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பலாம் என்று உறுதியளித்தனர்.இது மட்டுமன்றி, “தமிழ் தாயகமும் வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதேசங்களும் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமானது” என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லீம் தலைவர் திரு ஹக்கீம், முஸ்லீம் மக்கள் புலிகளை மன்னிக்க தயாராக இருப்பதாக் கூறினார்.

இது புலிகள் எந்த விதத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும்ää அவர்களின் பெருந்தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனால்ää தனது சொந்த சுயநல காரணங்களுக்காக பழைய காயங்களை கிளறிää தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகங்களிடையே மீண்டும் வெறுப்பைத் தூண்டுவது திரு சுமந்திரனின் கடைகெட்ட செயற்பாடு அல்லவா?

திரு சுமந்திரனுக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய இம்மியளவு அறிவு இருந்திருந்தால் கூட, 1990இல் இடம்பெற்ற முஸ்லிம் வெளியேற்றம் எந்த வகையிலும் “இன சுத்திகரிப்பு” என்ற வரையறையில் அடங்காது என்பதை அவர் உணர்ந்திருப்பார். மேலும் முஸ்லிம் தலைவர்கள் கூட நடந்தவற்றை மறந்து முன்னேற முடிவுசெய்துள்ள போதும், திரு சுமந்திரன் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக, அவர்களை தவறாக வழிநடத்த முயல்வது மிகவும் அருவருப்பானது.

டிசம்பர் 2015 இல் திரு. சுமந்திரன்,ஜெனீவாவுக்குச் சென்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும் போது, “இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தில் அரசபடைகள் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறைகளின்படியே நடந்துகொண்டன என்றும் அங்கு தமிழ் இனப்படுகொலை நடக்கவில்லை” என்றும் தெரிவித்ததாக டாக்டர் எஸ். ஐ. கீதபொன்கலன் Colombotelegraphபத்திரிகையில் எழுதியுள்ளார்.

இலங்கையில் நடப்பது ஒரு இனப்படுகொலைதான் என்பதை முதல்முதலாக,டிசம்பர் 1997, இல் லண்டனில் இயங்கும் தமிழர்; தகவல் மையம் ; (TIC) பிரகடனம் செய்திருந்தது.Dr Lutz Oette என்ற ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த,தற்போது SOAS University of London இல் விரிவுரையாற்றும்,பிரபல சட்ட வல்லுனர் மேற்கொண்ட ஆய்வுகள் அடிப்படையிலேயே தமிழர்; தகவல் மையம் “The International Crime of Genocide: The case of the Tamil People in Sri Lanka”என்ற இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதுமட்டுமின்றி 2009க்கு பின்னர்Professor Francis A Boyle, Professor Ramu Manivannan, Professor M Sornaraja, Bruce Fein, Lee Rhiannon, Deirdre McConnell போன்ற உலகின் தலைசிறந்த சர்வதேச சட்ட வல்லுனர்களின் கிடைத்த ஆதாரங்களை ஆழமாக ஆராய்ந்து,தமது ஆய்வறிக்கைகள் மூலம் இது இனப்படுnகொலை தான் என உறுதியா தெரிவித்துள்ளார்கள்.

இது மட்டுமன்றி, ஜேர்மனியில் நடைபெற்ற இலங்கையின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் (Permanent People’s Tribunal) பெரும் புகழ்வாயந்த பன்னிரு நீதிபதிகள் கொண்ட குழு, ஆதாரங்களையும் சாட்சிகளையும் பலநாட்களாக கேட்டு ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்றது மற்றும் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனப்படுகொலைதான் என்று ஐயம் தெளிவுற தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த தீர்ப்பாயம் சர்வதேச உரிமைகள் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு உதவியுடன் நடத்தபடுகிறது. இவ் அமைப்பு 1979 இல் இத்தாலியில் உருவாக்கபட்டது. இதில் ஐந்து நோபல் பரிசுபெற்ற அறிஞர்கள் உட்பட 31 நாட்டு சமூக தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்த அமைப்பு வியட்னாம் மீதான தீர்ப்பாயம்(1966-67) மற்றும் இலத்தீன் அமெரிக்கா சர்வாதிகாரம் (1974-1976) போன்றவிடயங்களை கையாண்டுள்ளது.

இவை தொடர்பாக திரு சுமந்திரன் அறியவில்லை போலும். இறுதி யுத்தத்தில் நடந்த இனப்படுகொலைக்கான போதிய ஆதாரங்களுடன் வணபிதா இராயப்பு யோசப்பு ஆண்டகை Stephen Rapp என்ற அமெரிக்க தூதருக்கு புரியவைத்தார். அதனைக்கூட திரு சுமந்திரனுக்கு அறியவில்லையா?

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று முன்பு வாதிட்டு வந்த திரு சுமந்திரன், தற்போது, சற்று நழுவி, தற்போது”இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என சர்வதேசத்திடம் உறுதிப்படுத்த எம்மிடம் இன்று போதிய சாட்சிகள் இல்லை எனவே எதிர்காலத்தில் அதை நிரூபிக்கும் வரை அதை இனப்படுகொலை என்று கூறக்கூடாது” என்று புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கதைவிட்டு வருகிறார்.

வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவந்த போது தான் எதிர்த்ததற்கான காரணம், அந்த கோரிக்கையை சர்வதேச நீதிமன்றம் அல்லது யு.என்.எச்.ஆர்.சி நிராகரிப்பதை தான்; விரும்பவில்லை என்பதுதான் எனக் கூறிவருகிறார்.

செப்டம்பர் 2015 இல் ஜெனீவாவில் திரு லதன் சுந்தரலிங்கம் இவரை பேட்டி கண்டபோது, திரு சுமந்திரன் வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒரு ”முட்டாள்தனமான நடவடிக்கை” என்றும் கூறினார். முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் தனது ஆலோசனையை எதிர்த்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி இனப்படுகொலை விசாரணைக்கான கதவை மூடிவிட்டதாக மேலும் தெரிவித்தார். நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னைவிட சட்டத்துறையில் எத்தனைபடி சிறந்தவர் என்பதைக்கூட திரு சுமந்திரனின் மறந்துவிட்டார்.

DAN தொலைக்காட்சி நேர்காணலில் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, திரு சுமந்திரன், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணை முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், 16 நவம்பர் 2015 அன்று ஜெனீவாவில் வெளியிட்ட 251 பக்க அறிக்கை ஒரு முழுமையான மற்றும் விரிவான ஆவணமாகும் என்றும் அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

முதலாவதாக,இந்த அறிக்கை முழுமையயானது அல்ல என்பதை திரு சுமந்திரன் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது பெப்ரவரி 2002 முதல் நவம்பர் 2011 வரை மட்டுமான விடயங்களையே உள்ளடக்கியுள்ளது. இரண்டாவதாக,இவர் கூறுவது போல இந்த அறிக்கையானது யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்டதை உறுதிசெய்கின்ற போதிலும்,நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.

இது போலவே,ஐ.நா. மனித உரிமை சபையின் முன்னாள்; ஆணையாளர்,இளவரசர் சாயிட் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அவரும் நடந்தது இனப்படுகொலை என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரம் இல்லை என்று பதிலளித்ததாக சொல்வது முற்றிலும்; பொய்யானது. இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றதற்கான பதிவுகள் எங்கும இல்லை.

அதே நேர்காணலில்,திரு சுமந்திரன், தான் தமிழர்களை ஆதரிக்கும் பல சட்ட நிபுணர்களுடன் பேசியதாகவும், ”அவர்கள் அனைவரும்” இனப்படுகொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அறிவுறுத்தினர் என்றும் கூறினார். ஆனால் எந்தவொரு நிபுணரையும் அவரால் பெயர் குறிப்பிட முடியவில்லை என்பது அவரது கூற்றில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

அவரது நேர்மையற்ற தன்மையையும்,தமிழ் சமூகத்தை முட்டாளாக்கும் திறனையும் நிரூபிக்க இந்த உண்மைகள் போதுமானவை.

விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களைச் செய்ததை ஒப்புக் கொள்ளத் தயாராக இருப்பதாக 2019 ஜனவரியில் திரு சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ”இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இரண்டும் போர்க்குற்றங்களைச் செய்ததாக அனைத்து சர்வதேச அறிக்கைகளும் மிகத் தெளிவாகக் கூறுகின்றன” என்றும் அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார்.

ஆனால், ஐ.நா.வின் OISL   அறிக்கையில்; ”இலங்கை அரசபடைகளால் தமிழ் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் மிகக்கொடுரமான பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுவருவதனை இந்த விசாரணை உறுதிப்படுத்தியிருப்பது மிகவும் வருத்தமானது. அத்துடன் பாலியல் தொடர்ந்து வருவது மிகவும் அதிர்ச்சி தருகிறது.விடுதலைப்புலிகள் பாலியல் சித்திரவதைகளில் ஈடுபட்டதுக்கான எந்தவிதமான தகவலும் எமக்கு கிடைக்கவில்லை” என்றும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தான் நன்கு அறிந்திருப்பதாக கூறிவரும் திரு சுமந்திரன்,மேலே உள்ள முக்கிய தகவலை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்துவருவது அவர் தனது சொந்த தமிழ் சமூகத்திற்கே செய்யும் துரோகம் அல்லமல் வேறு எக்கவாக முடியும்.

திரு சுமந்திரன் தன்னை மீண்டும் மீண்டும் தலைமைத்துவ ஆற்றல் கொண்டவரோ அல்லது தனது சொந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் கொண்டவரோ இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். ஒரு தலைவராக அல்லது மக்கள் பிரதிநிதியாக இருப்பதற்கான மிக அடிப்படையான தகமை,தனது சொந்த கருத்துக்களை ஒதுக்கி வைத்து,தன்னையோ தான் சார்ந்த கட்சியையோ நம்பி வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கு பிரதிநிதித்துவப்படுத்துவதே ஆகும்.

எது எப்படி இருப்பினும் திரு சுமந்திரன் தனக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களை பற்றி எள்ளவவு கூட கவலைப்படாமல், தனது தவறான சொந்த கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருவதுடன்,அதனை மக்களிடம் திணிக்க முற்படுவதும் சகிக்க முடியாதது.

மிக சமீபத்தில், 08 மே 2020 அன்று,திரு சுமந்திரன், முன்னாள் ஊடக இயக்குநராக இருந்த திரு சமரவிக்ரமாவுடனான சிங்கள பேட்டியில் கூறிய கருத்துக்களால் அவரது சொந்தக் கட்சியினர் உட்பட தமிழ் அரசியல் வட்டாரம் முழுவதும் கொதிப்படைந்துள்ளது யாவரும் அறிந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் குறித்து அவர் அப்பட்டமாக பொய் சொன்னார் மேலும் தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைபடுத்தினார். மேலும் வடகிழக்கு முழுவதும் தமிழர்களிடையே பரவலான கோபத்தையும் சீற்றத்தையும் தூண்டிய இலங்கையின் சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை தான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியதானது அவரது சொந்தக் கட்சியில் உள்ள சக சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து கூட விமர்சனங்கள் ஏற்பட காரணமாகியது.

இது போலவே, 2015 ஆம் ஆண்டில் அவர் சண்டே லீடரில் ஆங்கிலத்தில் தனது கட்சிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் இல்லை என்றும் அவர்களின் சித்தாந்தத்திற்கு உடன்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் தமது கட்சி ”பயங்கரவாதத்திற்கு” ஆதரவளித்தில்லை என்று தெரிவிததன் மூலம்; விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்ற கருத்தை மறைமுகமாக வழங்கியிருந்தார். திரு சுமந்திரன் தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளிடமிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டதாக காட்டிக்கொண்டு ”புலி ஆதரவு புலம்பெயர்ந்தோருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறியது புலம்பெயர்ந்த தமிழரை கடுமையாக புண்படுத்தியது.

திரு சுமந்திரானுக்கு கடுமையான எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியபோதுääதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார். நான் சுமந்திரனின் சிங்கள் நேர்காணலை முழுமையாக பார்க்கவில்லை எனினும்”இது அவரது தனிப்பட்ட கருத்து தமிழ் தேசிய கூட்டணியின் அல்லது இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடாக கருதப்படக்கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திரு சம்பந்தனின் சொந்தக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டணியின் மூத்த உறுப்பினர்கள், பிற தமிழ் கட்சிகளின் தலைவர்கள் திரு சுமந்திரனைப் போலல்லாமல்,தமிழீழ விடுதலைக்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான காரணங்களுடன் நீண்டகால தொடர்பினைக் கொண்டவர்கள்.

அவர்கள் திரு சுமந்திரனின் நடவடிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு எதிராக தங்கள் கவலையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கும் திரு சுமந்திரனின் கருத்துக்கள் அவரது சொந்த கருத்தாக கருதி விட்டுவிட கூடாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழரசுகட்சி தலைவர் திரு மாவை சேனதிராஜா ”புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது” என்று திரு சுமந்திரன் கூறிய கருத்துக்களை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கோபத்துடன் தெரிவித்தார்.

சக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்டமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரபதம் சரவணபவன்,”மனிதகுலத்திற்கு எதிரான செயல்களில் பங்கேற்கவோ அல்லது ஈழப்போராட்டத்தை கேலி செய்யவோ ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசுகட்சியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது” என்று கூறினார். அவர் திரு சம்பந்தனிடம் திரு சுமந்திரனை அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணியும், புகழ்பெற்ற வழக்கறிஞரும் இலங்கை தமிழரசுகட்சியின் கொழும்பு மாவட்டக் கிளையின் தலைவருமான திரு கே.வி. தவரசா கூறுகையில், “திரு சுமந்திரனுக்கு ஆயுதப் போராட்டத்தை கொச்சைபடுத்த அதிகாரம் இல்லை. திரு சுமந்திரன் அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவது குணப்படுத்த முடியாத காயங்களை உருவாக்கி தமிழ் மக்களின் இதயங்களில் வலியை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான திரு சார்லஸ் நிர்மலநாதன் திரு சம்பந்தனிடம் “சுமந்திரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிலையிலிருந்து நீக்க வேண்டும் மற்றும் புலிகளின் ஆயுத போராட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்க அனுமதிக்க கூடாது” என கேட்டுக்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை அமைப்பின் (டெலோ) தலைவர் திரு செல்வம் அடைகலநாதன், “திரு சுமந்திரனின் கருத்துக்கள் முற்றிலும் மன்னிக்க முடியாதவைஇ முழு ஆயுத தமிழ் போராட்டமும் தவறானது என்று சொல்வது முற்றிலும் மன்னிக்க முடியாதது” என்றார்.

மற்றொரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் (PLOTE) தலைவருமான திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் “திரு சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தெரியாமல் பேசுகிறார்” என்றார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் தமிழ்த் கட்சி எம்.பி.யான திரு ஞானமுத்து சிறினேசன்,திரு சுமந்திரனின் கருத்துக்களுக்கு தீர்வு காணும் பொறுப்பான நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை வலியுறுத்தினார். அவர்களின் ஊடக செய்தித் தொடர்பாளரான திரு சுமந்திரனின் கருத்துக்களுக்கு தமிழ்த் தேசியக் கட்சி பொறுப்பு, “சிங்கள பேரினவாதிகளை மகிழ்விப்பதற்கான சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னாள் தமிழரசுகட்சி இளைஞர் பிரிவு தலைவரும், தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தற்போதைய தலைவருமான திரு வி. சிவகரன் கூறுகையில், “திரு சுமந்திரன், வடக்கில் ஒரு கதையையும்,தெற்கில் மற்றொரு கதையையும், தமிழில் ஒரு கதையையும், சிங்கள மொழியில் மற்றொரு கதையையும் சொல்லி அரசியலை வணிகமயமாக்கியுள்ளார்” என கூறினார் அவர் மேலும் “அவ்வப்போது சந்தர்ப்பவாதிகள் தமிழ் தரப்பில் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டணியைவிட்டு பலர் விலகி செல்ல சுமந்திரனே காரணமாக இருந்துள்ளார். மக்களுக்காக கட்சியா? அல்லது கட்சிக்காக மக்களா? என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணி உறுதியான நிலை எடுக்கவேண்டிய காலம் வந்து விட்டது.

சட்டத்தரணி மற்றும் தமிழரசுகட்சி இளைஞர் பிரிவின் துணைத் தலைவரான எஸ். தினேசன்“வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் தேசிய கூட்டணி பெற்றது. எனவே,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக செய்தித் தொடர்பாளர்,இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதுபோன்ற கருத்துக்களை நான் முழுமையாக கண்டிக்கிறேன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நிச்சயமாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு டி. ரவிகரன் “தமிழ் மக்கள் சுமந்திரனின் கூற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் இது விடுதலைப்போராட்டத்தையும் அதில் பங்கு பற்றி மடிந்த மற்றும் அங்கவீனமானவர்களையும் ஏன் தலைவர் பிரபாகரனைக்கூட அவமதிக்கும் செயலாகும்” என கூறினார்.

அவர் மேலும் “தமிழ் தலைவர்களுக்கு எதிரான அட்டூழியங்களை எதிர்த்து தமிழ் தலைவர்கள் பல வழிகளில் போராடினர். தமிழர்களின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை அகிம்சை வழிமுறைகளால் தீர்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட இளைஞர்கள் ஆயுதங்களைத் தூக்க தொடங்கியதையடுத்து புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அனைத்து தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்ட நிலைமையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிறுவ உதவியது எனவே ஆயுதப் போராட்டத்தையோ அல்லது ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையோ யாராவது இழிவுபடுத்தும்போது தமிழ் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

சிறீசார்பு டெலோவின் பொதுச்செயலாளர் திரு பரராஜசிங்கம் உதயரா.திரு சுமந்திரன் முழு ஆயுதப் போராட்டத்தையும் நிராகரித்த கருத்துக்களை” கண்டித்ததுடன்.“திரு சுமந்திரனின் கருத்துக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்மீது நடவடிக்கை எடுக்குமா?” என்று கேட்டுள்ளார்.

“புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத வழிமுறைகளை நிராகரித்த, திரு சுமந்திரனின் கருத்துக்களால் நான் ஆச்சரியப்பட்டேன்” என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் தலைமை நீதிபதி சி வி விக்னேஸ்வரன் கூறினார்.

“தம்பி பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்; எம்.பி.யாக அவர் எப்படி இருக்க முடியும்? என்னுடைய முன்னாள் மாணவர் என்ற முறையில், அவரது கருத்துக்கள் எனக்கு பெரும் அவமானத்தைத் தருகின்றன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் நன்கு அறிந்ததே” எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் ,தமிழர்களுக்கு சுயாதீனமான ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்கான அபிலாசைகளுடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியற்ற தன்மையின் அறிகுறிகளைக் காட்டுகிறது. திரு சுமந்திரனுக்கு கட்சியைச் சுற்றியுள்ள வரலாறு தெரியாது! அல்லது அவர் தெரியாது என்று பாசாங்கு செய்கிறாரா? அவர் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும். திரு சுமந்திரன் ஒரு ஊழியரைப் போல நடத்தப்படுவதில் பெருமிதம் கொள்ளலாம்,ஆனால் தமிழர்கள் சார்பாக பேசும்போது அவருக்கு அவ்வாறு செய்ய அவருக்கு உரிமை இல்லை. கொழும்பில் வசதியாக வாழ்ந்தபின்,தமிழ் மக்களின் போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதற்காக வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி திரும்புவதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை” என தெரிவித்தார்.

நீதியரசர் மேலும் கூறுகையில்,”தமிழ் மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கேட்டு அவர்களின் கவலைகளுக்கு குரல் கொடுப்பது முக்கியம். இல்லையென்றால், அவர் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும் அல்லது சிங்கள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டும். நாங்கள் எமது விடுதலைப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிங்கள மக்களுக்கு எங்கள் தேவைகளை உணர்த்தவேண்டும் தம்பி பிரபாகரன் ஆயுதமேந்தி பேராட்டத்தை தொடர வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ளும் பல சிங்கள மக்கள் உள்ளனர். தெற்கில் சிங்கள தலைவர்கள் போராட்டங்கள் மற்றும் தமிழ் மக்களின் நீதிக்கான தேவை பற்றி பேசுகிறார்கள்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தையும், இதுவரை செய்த தியாகங்களையும் குறைக்கும் எந்த முயற்சிகளையும் நாம் அகற்ற வேண்டும். சிங்கள மொழியில் என்னிடம் ( விக்னேஸ்வரன்) கேள்வி கேட்கப்பட்டிருந்தால்,பிரபாகரனின் போராட்டம் சிங்கள அரசியல்வாதிகளால் ஏற்பட்டது என்பதை நான் தெளிவாகக் கூறியிருப்பேன்” என தொடர்ந்தார்.

” சில நாட்களுக்கு முன்பு ஒரு சிங்கள நேர்காணலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் தமது கட்சி ஆயுதபேராட்டத்தை எப்போதும் குறைகூறியே வந்துள்ளது என்றும் தான் இலங்கை கொடியை ஏற்று சிங்களத்தில தேசிய கீதம் பாட தாயராக உள்ளேன்” என தெரிவித்திருக்கிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது ட்வீட்டரில் பதிவுசெய்திருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,” திரு சுமந்திரன் தமிழ் தேசியவாதத்தை மறந்துவிட்டார். அதனால்தான் தமிழ் போராட்டத்திற்கான ஆயுத போராட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

” அவர் இலங்கை சிங்கக் கொடி மற்றும் தேசிய கீதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எங்கள் வலி பல ஆண்டுகளாக நீடிக்கிறது. 11 ஆண்டுகளாக அவர்களின் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் கட்சியின் அடிப்படை அபிலாசைகளிலிருந்து விலகிச் செல்கின்றன என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். திரு மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கத்தை உள்நாட்டுப் போரில் அவர்கள் வகித்த பங்கிற்கு திரு சுமந்திரன் பாராட்டியுள்ளார் ” என கூறினார்.

முன்னாள் புலிகளை உறுப்பினராக கொண்டுள்ள கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுமந்திரனை கடுமையாக சாடியதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் வழங்கிவரும் ஆதரவை விலக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்தும் உள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கம் உட்பட பல சிவில் சமூக அமைப்புகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரைக் கண்டித்ததுள்ளன” திரு சுமந்திரன் கொழும்புக்கு விசுவாசமானவர், கொழும்பை விரும்புகிறார். அவர் தமிழ் மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. சிங்கள மக்கள் அவரை சேர் பொன்னம்பலம் ராமநாதனுக்கு ஒத்த நபராகவே பார்க்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர் செயல்படுகிறார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பைப் பாதுகாக்க அவர் பணியாற்றுகிறார்” என்று தெரிவித்தன.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்களது 715 வது நாளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ” சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரை தமிழ் அரசியலில் இருந்து நீக்கிய பின்னர் தமிழர்களுக்கு முதலில் சுதந்திரம் கிடைக்கும்.” என்று எழுதப்பட்ட ஒரு பெரிய பதாகையை ஏந்தி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களை திரு சுமந்திரன் “புலம்பெயர் புலிகள்” என்று குறிப்பிடுவது மிகவும் புண்படுத்தக்கூடியது மற்றும் மன்னிக்க முடியாதது,இது வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் குறித்து இலங்கை உளவுத்துறையின் அதே கருத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார் என்ற உண்மையை தெளிவாக அம்பலப்படுத்துகிறது.

இது போலவே பிப்ரவரி 2017 இல் தன்னை கொலை செய்யும் முயற்சிக்கான திட்டமிடல் வெளிநாட்டில் நடந்துள்ளது என்று ஒரு போலியான குற்றச்சாட்டையும் அவர் புலம் பெயர் தமிழ் மக்கள் மீது சுமத்தியிருந்தார். புலம்பெயர் செயற்பாட்டாளர்களை இவ்வாறு புலி முத்திரை குத்துவதானது, அவர்கள் இலங்கை திரும்பும்போது கைது செய்யப்ட்டு சித்திரவதைக்கு உள்ளாவதற்கு வழிகோலி உள்ளது.;STF பாதுகாப்பை பெறுவதற்காக திரு சுமந்திரனால் அரங்கேற்றப்பட்ட ஒரு திட்டமிட்ட சதி நாடகம் தான் இந்த கொலைமுயற்சி என்றபதற்கான நம்பகமான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த சதியில் பலிக்கடாவாக்கப்பட்ட அப்பாவிகளான  5 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, இன்னும் சிறையில் சித்திரவதை அனுபவித்து வருவதற்கான முழுப்பொறுப்பம் திரு சுமந்திரன் ஏற்க வேண்டும். இந்த 5 முன்னாள் புலி உறுப்பினர்களை மட்டுமல்லாமல் இலங்கைக்கு திரும்பியதும் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட தமிழ் ஆர்வலர்களையும் சித்திரவதை செய்யப்படுவதற்கும் இவரே உடந்தையாகிறார்.

சுருக்கமாக சொல்வதானால்,திரு சுமந்திரன் எப்போதுமே தனக்கும் அவரது தமிழ்த் தேசியக்கட்சிக்கும் வாக்களித்த தமிழ் மக்களின் விருப்பங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் முரணாக செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையானது. தனது சமீபத்திய நேர்காணலின் மூலம், ஏற்கனவே இழப்பின் வேதனையால் பாதிக்கப்பட்டு, நீதி இல்லாமல் விடப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத காயத்தையும் வலியையும் அவர் உருவாக்கியுள்ளார்.

தனது சொந்த கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்ää அவரும் அவரது கட்சியும் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் கருத்துக்களை மதிக்கத் தவறிவிட்டார். தனது சொந்த கருத்துக்களை ஒதுக்கி வைக்க இயலாமையை நிரூபிப்பதன் மூலம், அவர் தனது சொந்த மக்களை ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

தனது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் கருத்துக்களையும் விற்கும் ஒரு தளமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்த அவர் அனுமதிக்கப்படக்கூடாது. சுயேட்சையாக நிற்கவோ அல்லது தனது சொந்தக் கருத்துக்கள் அடிப்படையில் தனது சொந்தக் கட்சியை உருவாக்கவோ அவருக்கு முழு சுதந்திரமும் உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழர்களின் ஆணையை அவர் மதிக்க முடியாததால்ää அவர் உடனடியாக தனது பதவியை துறந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேற வேண்டும்.

அவரிடம் சுயகௌரவம் கொஞ்சமானது எஞ்சியிருநடதால்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை நீக்குவதற்கு முன்பு அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். தவறினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் ஆணைப்படி செயல்பட வேண்டும்,அவரை கட்சியைவிட்டு நீக்க வேண்டும் அல்லது தமிழர்களிடமிருந்து அனைத்து ஆதரவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிடும்.

திருமதி. மனோன்மணி சதாசிவம்,
மூத்த சட்டத்தரணி,பிரபல நொத்தாரிசு,
பதில் நீதவான், உயர் நீதிமன்றம், வவுனியா