திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) – ரூபன்

எங்கள்முக்கியமான வேலைத்திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் போராளியான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்துள்ளார்.

அவர் எமக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டம் சார்பாக நீங்கள் போட்டியிடுகின்றீர்கள்.  யுத்தம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த நிலையில்  இவ்வளவு காலம் தாமதித்து ஏன் தற்போது களமிறங்கியுள்ளீர்கள்?

விடுதலைப் புலிகள் அமைப்பில் 2009 மே 17 வரை போராளியாக முள்ளிவாய்க்காலில் தான்  இருந்துள்ளேன். இதிலிருந்து வெளியேறி வந்ததால் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் என்னை கைது செய்தனர். பிறகு பூசாவிற்கு எங்களை அனுப்பினார்கள். அங்கு 2 வருடங்கள் என்னை வைத்திருந்தனர். பின்னர் கொழும்பு நீதிமன்றத்தில் எங்களை ஆஜர்ப்படுத்தினார்கள். எங்கள் குற்றங்கள் நிரூபிக்கப்பட முடியாமையால் 2011 ஏப்ரல் 27 ஆம் திகதி எங்களை விடுதலை செய்தார்கள். 2011 மே மாதம் 12ஆம் திகதி திருகோணமலையில் எனது உறவினரிடம்  என்னை கொண்டு வந்து விட்டார்கள்.

அதன் பிற்பாடும் 2015 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நான் கையொப்பம் இட வேண்டும்  என்ற நிலைப்பாடு இருந்தது. அப்போது நாங்கள் அவதானிக்கப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றோம்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எங்களை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்ததால்   நாங்கள் வேறு நடவடிக்கைகளில் இறங்கக்கூடிய சூழ்நிலையில் இல்லை. எங்களை விசாரிப்பார்கள். வீட்டில் வந்து பார்ப்பார்கள். நாங்கள் எங்கு போய் வருகின்றோம் என்பதை அவதானிப்பார்கள். அதனால் அந்தக் காலப்பகுதியில் ஒன்றும் செய்ய முடியாததால் நான் அப்படியே இருந்தேன்.

2015 ஓகஸ்ட் நடைபெற்ற தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு  சார்பாக போட்டியிடுவதற்காக விண்ணப்பம் கொடுத்திருந்தேன். அது அந்தக் கட்சித் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் மாகாணசபை, பிரதேச சபை ஊடாக போட்டியிடும் நோக்கம் என்னிடம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த நான் நேராக பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தினால் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தேன்.

இந்தத் தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்தது மார்ச் மாதம் 19ஆம் திகதி 12 மணிவரையும். ஆனால் மார்ச் மாதம் 18ஆம் திகதி இரவு 1130 மணிவரையும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பாக என்னை வேட்பாளராக நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அவர்கள் என்னை வேட்பாளராக நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். நான் தேடிச் சென்றவர்கள் என்னை உதாசீனம் செய்த நிலையில் என்னை தேடி வந்தவர்களை நான் உதாசீனப்படுத்த விரும்பவில்லை. 2020 தேர்தலை நான் இலக்கு வைத்து தான் காத்திருந்தேன். தற்போது எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கேள்வி – கடந்த காலத்தில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறான செயற்பாடுகளை செய்திருக்கிறார்கள் என கருதுகின்றீர்கள்? மக்களுக்கு தேவையான செயற்பாடுகளை புரிந்திருக்கிறார்கள் என நீங்கள் கருதுகின்றீர்களா?

1947இல் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவபாலன் என்பவர் போட்டியிட்டு வென்றார். அதன் பின்னர்  1949இல் தந்தை செல்வா அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்  என்ற கட்சியிலிருந்து வெளியேறி சமஸ்டிக் கட்சியை ஆரம்பிக்கிறார். அதன் பின்னர் 1952இல் இந்த சமஸ்டிக் கட்சியில் போட்டியிட்டு இராசவரோதயம் ஐயா வெற்றி பெறுகின்றார். இதை ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால்,அந்த நேரம் தமிழரை தவிர முஸ்லிமோ வேறு எவரோ தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை குறிப்பிடுகின்றேன். 1977இல்கூட சம்பந்தன் ஐயா தெரிவு செய்யப்படுகின்றார்.

ஆனால் இன்றைய நிலையில். 4 பாராளுமன்ற உறுப்பினரில் 2முஸ்லிம்> 1சிங்களம்> 1தமிழன் என்ற ரீதியில் உள்ளது. சேருவிலவை தனியாக்கி கந்தளாயுடன் இணைத்துள்ளனர். கிட்டத்தட்ட அது வெறும் நிலமாகத் தான் உள்ளது. அந்த வெறும் நிலத்தில் கூட ஒரு சிங்கள குடியேற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தக் குடியேற்றம் வந்தால் திருகோணமலையில் உள்ள ஒரு தமிழ்ப் பிரதேசத்தையும் இல்லாமல் செய்யும் நிலையைத் தான் இன்றைய தமிழ் பிரதிநிதிகள் செய்திருக்கின்றார்கள்.

கேள்வி – திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை எதுவென நீங்கள் கருதுகின்றீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக யார் யார் என்ன வகையான தீர்வுகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்?

திருகோணமலையைப் பொறுத்தவரையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும்> சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுகு்கும் கேந்திர முக்கியமான இடமாகும். புத்தளம், காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் தமிழ்ப் பகுதியான ஏகாம்பரம் வீதியில் வந்து குடியேறியுள்ளனர். இதை பாராளுமன்ற பிரதிநிதிகள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். குடியேறுவது என்பது வேறு திட்டமிட்ட குடியேற்றம் என்பது வேறு.

திருகோணமலையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முதிர்ச்சியானவர்கள் தான். அவர்கள் இதை கண்டு கொள்ளாமல் இருந்ததால் தான்  1947இல் ஒரு தமிழன் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது. இப்போது 2000ஆம் ஆண்டு மூன்று முஸ்லிம்களும், ஒரு சிங்களவரும் தெரிவு செய்யப்பட்டு ஒரு தமிழன் கூட தெரிவு செய்யப்படாத ஒரு நிலையைத் தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.94238556 222669609175260 8141620300711198720 n திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) - ரூபன்

கேள்வி -நீங்கள் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கான ஏதாவது முக்கியமான காரணங்கள் இருக்கின்றதா?

பதில் மார்ச் 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் முடிவடைய இருந்தது. முதல்நாள் இரவு தமிழ் மக்கள் கூட்டணியினர் வந்து கும்புறுப்பிட்டியிலுள்ள எனது வீட்டில் வந்து தமிழ் மக்கள் கூட்டணியில் நிற்க வேண்டும் என்று வற்புறுத்தியதால், எனது மனைவி விக்னேஸ்வரன் ஐயாவின் கட்சியில் என்றால் சரி கூறினார்.  சிறீகாந்தா ஐயா தான் பேசுவதற்கு வந்திருந்தவர். சிவசக்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பிலிருந்தார்கள்.

ஆனால் என்னை இந்த கட்சிக்குள் கொண்டு வந்தவர் சிறீகாந்தா ஐயா தான். உடனே இரவு 11.30 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியில் நான் வேட்பாளராக இணைகிறேன் என கையொப்பம் இட்டேன். போராளிகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் இருந்ததால் நான் அவர்களுடன் இணைவதந்று எனக்கு மனக் கூச்சம் இருக்கவில்லை.  2015  தேர்தலில் சிறீகாந்தா ஐயாவிற்கு எதிராக திருகோணமலை மாவட்டத்தில் நான் வேலை செய்தேன். அப்படியிருந்தும் என்னை இந்த கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறையாக இருந்தவர்.

கேள்வி -நீங்கள் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதால் ஒரு பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என கூறுகின்றார்கள். இது தொடர்பாக என்ன கூறுகின்றீர்கள்.

அவர்களுக்கு திருகோணமலை வரலாறு பற்றி தெரியாது போலுள்ளது. 1989ஆம் ஆண்டு ஈழமக்கள் புரட்சிகர மாணவர் அமைப்பு எனப்படும் ஈரோஸ் உறுப்பினர்கள் இரண்டு பேர் வந்திருந்தனர். அப்போது கூட்டமைப்பு திருகோணமலையை காப்பாற்றிக் கொண்டிருக்கவில்லை.

பின்னர் 1994 இல் தங்கத்துரை ஐயா அவர்களும் சம்பந்தன் ஐயா அவர்களும் கேட்டார்கள். இதில் தங்கத்துரை ஐயா வெற்றியடைந்தார். 2000ஆம் ஆண்டு ஒருவரும் வெற்றியடையவில்லை. மூன்று முஸ்லிம்களுக்கும், சிங்களவருக்கும் திருகோணமலையை தாரைவார்த்துக் கொடுத்து விட்டு கையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.

2001இல் தொங்கு பாராளுமன்றம் வந்தது. அப்போது தேசியத் தலைவர் என்னை அழைத்து திருகோணமலை எங்கள் தலைநகரம். அங்கு தமிழர் பிரதிநிதி கட்டாயம் தேவை. அதற்காக  நீ சென்று அதற்கான வேலைகளைப் பார் என தலைவர் அவர்கள் என்னை அனுப்பி வைத்தார். பின்னர் 2001 தேர்தலில் சம்பந்தன் ஐயா வெற்றியடைகின்றார்.

கேள்வி – நீங்கள் முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினராக இருந்துள்ளீர்கள். பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால், திருகோணமலை மாவட்ட மக்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்வீர்கள்?

முன்னர்  தமிழ், முஸ்லிம், சிங்களப் பத்திரிகையாளர்கள் என்னை சந்தித்தார்கள். தமிழ், சிங்கள,முஸ்லிம் மக்களை கொண்ட இடம் திருகோணமலை. நான் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டேன். சிங்கள மக்களுக்கான பிரச்சினைகளை என் ஊடாகவே நடத்தி முடித்தார்கள்.

அதேபோல் புல்மோட்டையிலிருந்து முஸ்லிம்கள் இரவில்கூட என்னை வந்து சந்தித்துச் செல்லும் சந்தர்ப்பமும் உண்டு. எங்கள் மத்தியில் நல்ல உறவு இருந்தது. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த செயலால் இன்னும்  பத்து பதினைந்து வருடங்களில் திருகோணமலை தமிழர் பிரதிநிதித்துவத்தை இழந்து விடும்.

1947இல் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மட்டும் இருந்த நிலையில், 2000ஆம் ஆண்டு  மூன்று முஸ்லிமும் ஒரு சிங்களவரும் வந்தவர்கள். இன்றைக்கு இரண்டு முஸ்லிம், ஒரு சிங்களம்,ஒரு தமிழ் என்ற ரீதியில் தான் உள்ளது. 21 ஆண்டுகளை பின்நோக்கி பார்த்தால், திருகோணமலையில் அதிகூடிய தொகையாக 19ஆயிரம் தமிழ் மக்கள் இருந்துள்ளனர். அடுத்த நிலையில் உள்ளவர்கள் 4,000 மட்டும் தான். அவர்களை மூன்றாவது நிலைக்கு தள்ளும் போது எமது தமிழ் பிரதிநிதிகள் பார்த்துக் கொண்டு தான் இருந்தவர்கள். சிங்கள குடியேற்றம் நடந்துள்ளது. முஸ்லிம் குடியேற்றம் நடந்துள்ளது.

எங்கள் தமிழர்களில் ஒரு பிரச்சினை உள்ளது. என்னவெனில்> 1983 காலப்பகுதியில் பிரச்சினையான காலத்தில் உயிர்ப் பாதுகாப்பிற்காக  வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முயற்சிக்கவில்லை. திருகோணமலையில் தமிழ் மக்கள் குறைவடைந்ததற்கு காரணம் இதுவுமாகும். வெளிநாடு சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டார்கள்.

அந்த இடங்களை நிரப்பியவர்கள் சிங்களவர்களும் முஸ்லிம்களுமே. அத்துடன் 574 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட பகுதியை சிங்கள அரசிற்கு எழுத்து மூலமாக தாரைவார்த்துக் கொடுத்துள்ளார்கள். எங்கள்முக்கியமான வேலைத்திட்டம் இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும்.

தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும். திருகோணமலையைச் சொந்த மாவட்டமாகக் கொண்டவர்களை மீள வரும்படி வேண்டுகோளை முன் வைக்க வேண்டும். இவ்வளவு வேலையையும் செய்ய வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. இதன் மூலம் தான் எங்கள் மாவட்டத்தை எதிர்காலத்தில் காப்பாற்றக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு இருக்கும்.