திருமலை கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

பஞ்ச ஈஸ்வரங்களில் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழலைக் கருத்திற்கொண்டு திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தேவார முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்தரால் கோணமாமலை அமர்ந்தார் என போற்றிப் பாடப்பட்ட திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரலாற்று தொன்மைமிக்கதாகும்.

கிழக்கின் அடையாளச் சின்னமாக விளங்கும் இந்த பாரம்பரிய திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குனி உத்தரமான எதிர்வரும் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்தது.

எனினும் கொரோனா தொற்று அச்சத்தால் மக்களின் நலன் கருதி திருவிழாவை இந்த வருடம் ஒத்திவைக்க நேற்று (1)நடைபெற்ற நம்பிக்கை பொறுப்பாளர் கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டது.

அதற்கான பிராயச்சித்தமாக சமயத்தலைவர்கள் பக்தர்களின் ஆலோசனையின் பிரகாரம் சம்புரோட்சண யாகம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே வாழ்வாதாரமின்றி இன்னல்களை எதிர்நோக்கியுள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு திருகோணமலை பலநோக்குக் கூட்டுறவு சங்கத்தின் உதவியுடன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.