திருமலை உள்ள இந்திய எண்ணைக்குதங்களை சிறீலங்காவுடன் பகிரத் திட்டம்

சிறீலங்காவின் திருமலை மாவட்டத்தில் உள்ள இந்திய எரிபொருள் நிறுவனத்தின் எண்ணை சேமிப்புக் குதங்களை சிறீலங்கா அரசு கொள்வனவு செய்யும் எண்ணைகளை தற்றகாலிகமாக சேமிப்பதற்கு தாம் வழங்கவுள்ளதாக சிறீலங்காவுக்கான இந்திய தூதுவர் கோபால் பக்கே தெரிவித்துள்ளார்.

தற்போது எண்ணைவிலை அதிகளவு வீழ்ச்சி கண்டுள்ளதனால் அதனை கொள்வனவு செய்து சேமிப்பதற்கு சிறீலங்கா அரசு ஆர்வமாக உள்ளது. ஆனால் பிரித்தானியாவின் ஆட்சிக்காலத்தில் திருமலையில் கட்டப்பட்ட 100 எண்ணைக்குதங்களை முன்னைய ஐ.தே.க அரசு இந்தியாவின் எண்ணை நிறுவனத்திற்கு வாடகைக்கு கொடுத்ததால் சேமிப்பதில் சிக்கல் எழுந்திருந்தது.

எனினும் சிறீலங்காவுக்கு தொடாந்து உதவிகளை வழங்கிவரும் இந்திய மத்திய அரசு இந்திய நிறுவனத்திடம் உள்ள எண்ணைக்குதங்களில் சிலவற்றை சிறீலங்கா அரசுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 12,100 மெற்றிக் தொன் அளவுடைய 99 குதங்களை ரணில் விக்கிரமசிங்கா அரசு இந்திய நிறுவனத்திற்கு 35 வருடங்களுக்கு வாடகைக்கு வழங்கியிருந்தது. அதற்கான வாடகையாக ஒரு இலட்சம் டொலர்களை இந்திய நிறுவனம் வழங்கிவருகின்றது.