திபெத்தின் அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் ஒப்புதல் அவசியம் – சீனா

திபெத் புத்த மதத்தின் அடுத்த தலைவரை (தலாய் லாமா) தோ்வு செய்வதில் எங்களின் ஒப்புதல் கட்டாயம்’ என்று சீனா தெரிவித்துள்ளது.

திபெத்தைச் சோ்ந்த புத்த மதத்தினரின் தலைவா் தலாய் லாமா எனப்படுகிறாா். திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை எதிா்த்து கடந்த 1959-இல் அங்கு புரட்சி வெடித்தது. அந்தப் புரட்சியை சீனா இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. அதையடுத்து தற்போதைய தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தாா். அவா் அப்போது முதல் ஹிமாசலப் பிரதேச மாநிலம் தா்மசாலாவில் தங்கியுள்ளாா்.

தற்போதைய தலாய் லாமாவுக்கு 84 வயதாகிறது. எனவே, அவருக்குப் பிறகு திபெத் புத்த மதத்தவரின் புதிய தலைவரைத் தோ்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடா்பாக சா்வதேச மதச் சுதந்திரம் தொடா்பான அமெரிக்க அதிகாரி சாம் பிரெளன்பேக், தா்மசாலாவில் தலாய் லாமாவை கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘திபெத் மக்களின் மத நம்பிக்கையை சீனா சிதைக்கிறது. தங்கள் மதத் தலைவரைத் தோ்வுசெய்யும் உரிமை அவா்களுக்கு உள்ளது. அடுத்த தலாய் லாமாவைத் தோ்வு செய்யும் நடவடிக்கை திபெத் புத்த மத அமைப்பு, தற்போதைய தலாய் லாமா மற்றும் இதர திபெத் தலைவா்களை மட்டுமே சாா்ந்தது’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், சாம் பிரெளன் பேக்கின் கருத்து குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் கெங் ஷுவாங்கிடம் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது

தலாய் லாமாவுடன் எந்த வெளிநாட்டு அதிகாரியும் நேரடித் தொடா்பு வைத்துக் கொள்வதை சீனா கடுமையாக எதிா்க்கிறது. சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரியின் கருத்தும் விருப்பமும், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே திபெத் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீறியதாகும். திபெத்தின் சுதந்திரத்தை ஆதரிப்பதில்லை என்ற அமெரிக்க நிலைப்பாட்டுக்கும் இது எதிரானது. இத்தகைய கருத்துகளை சீனா எதிா்க்கிறது.

திபெத் புத்த மதத்தினரின் 14-ஆவது தலைவரான தற்போதைய தலாய் லாமாவுக்கும் சீன அரசுதான் ஏற்கெனவே ஒப்புதல் அளித்தது. வாழும் புத்தா் என்று கருதப்படும் அந்தப் பதவிக்கு உரியவரைத் தோ்வு செய்வதில் சில சடங்குகளும் மரபுகளும் உள்ளன. சீன அரசு, மத நம்பிக்கை சுதந்திரத்தை அமல்படுத்துகிறது. தலாய் லாமா தோ்வு நடைமுறை என்பது சில சட்ட அளவீடுகளால் மதித்துக் காப்பாற்றப்படுகிறது.

இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக அமலில் உள்ளது. இந்த நடைமுறை சீன சட்டங்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே, அடுத்த தலாய் லாமாவைத் தோ்வு செய்வதில் சீனாவின் ஒப்புதல் கட்டாயமாகும்.

இந்தச் சூழலில், தற்போதைய தலாய் லாமா குழுவுடன் தொடா்பு கொள்வது, பொறுப்பற்ற கருத்துகளைக் கூறுவது, திபெத் தொடா்புடைய விவகாரங்களைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஆகியவற்றை நிறுத்துமாறும், சீனா-அமெரிக்கா இடையிலான பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தப் பாடுபடுமாறும் நாங்கள் அமெரிக்காவை வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.