தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

“சேவை செய்வதுதான் உண்மையான இன்பம் உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக்கொள்” மாவீரர் கேர்ணல் கிட்டு அவர்களின் அனுபவ மொழி.

தேசியத் தலைவரின் வீரத்தளபதியான மாவீர் கேர்ணல் கிட்டு என்ற தமிழீழ விடுதலை வரலாற்று மனிதனைக் காலத்தில் தோற்றுவித்ததும் காலத்துள் ஒடுங்கியதுமான மாதம் தைமாதம். இதனால் தை பிறந்தால் தாயகப் பற்றுடைய ஈழத்தமிழர் நெஞ்சங்களில் கேர்ணல் கிட்டு என்னும் தன்னலமில்லா அன்புருவின் நினைவலைகளின் ஆட்சி தங்களை அறியாமலே எழுவது இயல்பு. “சேவை செய்வதுதான் உண்மையான இன்பம்.

‘உண்மையான இன்பத்தை உணரக் கற்றுக் கொள்’ என்று தன்வாழ்வால் தமிழரை அழைத்த இவர்போன்ற மனிதர்களின் வரலாற்று உண்மைகள், ஈழமக்களின் இளைய சமுதாயத்திற்குப் பாரப்படுத்தப்பட்டாலே இன்று மட்டுமல்ல என்றும் ஈழமக்களின் தாயகம்,தேசியம், தன்னாட்சி என்ற அவர்களிடம் இருந்து யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாத அவர்களின் பிறப்புரிமையான தன்னாட்சியுரிமை, அதற்குரிய நிலையில் நிலைத்து நிற்கும்.

கேர்ணல் கிட்டு அவர்களின் இலக்குகளை எல்லாம் இலக்கின் இச்சிறு சிந்தனை வழியாக மதிப்பிடல் இயலாத விடயமாயினும் புலத்து வாழ்வில் அவர் வாழ்ந்த காலத்து அவர் தந்து சென்ற எண்ணங்களில் மிகச்சிலவற்றையாவது முன்நிறுத்தி இக்காலத்திற்கு அச்சிந்தனைகள் தரும் உந்துதல்களை பதிவாக்குவதே நோக்காக அமைகிறது.

முதலில் 2020 புத்தாண்டைத் தொடங்கும் இந்த ஆரம்ப காலத்தில் கேர்ணல் கிட்டு அவர்கள் 01.01.1992 புத்தாண்டுக்குத் தெரிவித்த வாழ்த்துடன் தொடங்கலாமென்று எண்ணுகிறேன். “வாழ்க. வாழ்க. நலமுடன் வாழ்க. அதை விட அறிவுடன் வாழ்க. அதை விட நற்பெயருடன் வாழ்க. அதைவிட மற்றவர்களுக்காக வாழ்க. அதைவிட மக்கள் சேவை செய்க. அதை விட நல்லதையே நினைக்க. மேலும் நல்லதே செய்க……வாழ்க,வாழ்கவென வாழ்த்துகிறேன்.” கேர்ணல் கிட்டு அவர்களின் இந்த வாழ்த்தொலி இன்றும் மக்கள் சேவையின் உன்னதத்தை எடுத்துரைக்கிறது.kittu3 தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

“சிந்தனையும் தேடலுமே ஒருவனை உயர்த்த முடியும். ஆனால் எப்போதும் மனித சிந்தனை மற்றவர்களுக்காகவும் மனித இனத்தை முன்னேற்றுவதற்காகவுமே இருக்க வேண்டும். அதை விடுத்து தமது விற்பன்னத்தைக் காட்டவும், மற்றவர்களை விமர்சிக்கவும் மட்டும் இருக்க கூடாது” என்பது கேர்ணல் கிட்டு அவர்களின் உறுதியான மொழியாக புலத்தில் அமைந்திருந்தது. இன்றும் இவ் அறிவுரை தமிழர்களுக்குக் காலத்தின் தேவையாகிறது.

“நாம் எமது மக்களுக்கு அமைதியையும் சுபபிட்சத்தையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். எமது எதிரியோ எமது தேவையை எமது கோரிக்கையை ஏற்பதாக இல்லை. தான் கொடுக்கும் சலுகைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றானே ஒழிய எமது உரிமையைக் கொடுக்கத் தயாராக இல்லை. நாம் பேராசை பிடித்தவர்களோ உலகின் நடைமுறை தெரியாதவர்களோ அல்ல.

நாம் கேட்கின்ற அடிப்படை உரிமை,எமது மண்ணிலே எமது மக்கள் உயிர் வாழ்வதற்கான உரிமைதான். அதைவிடுத்து மாகாணசபையாலோ அல்லது அதைவிடக் கூடிய அதிகாரங்களைக் கொண்ட சபையாலோ எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. எமது மக்களின் பாதுகாப்பைப் பூரணமாக உறுதிப்படுத்தப்படும் வடிவத்தையோ நாம் தேடிக் கொண்டிருக்கிறோம்”.

மேலும், தமிழர்களின் ஆயுதப்போராட்டம் என்பது தமிழர்கள் அவர்களது பாதுகாப்பு வடிவத்தை உருவாக்கிய வரலாற்று நிகழ்வு என்பதில் கேர்ணல் கிட்டு மிகத் தெளிவாக இருந்தார். “எமக்கு ஏ.கே. 47 ஒன்றும் பெரிதல்ல. நாம் எமது ஆயுதங்கள் என்று குறிப்பிடுவது எமது பாதுகாப்பு வடிவத்தையே. தமிழ் மக்களுக்குப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும். சிங்களப் படைகளை நாம் எமது பாதுகாப்புக்கு உத்தரவாதமாக ஏற்க முடியுமா? சிலர் நினைக்கலாம் நாம் ஆயுதங்களில் காதல் கொண்டவர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தவிர வேறு வழி தெரியாதவர்கள் என்று,ஆனால் நாம் அப்படியல்ல.kittu 2 தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

அரசியலையும் உலகின் நடைமுறைகளையும் நன்கு புரிந்ததனால்தான் கூறுகின்றோம், நாம் எமது உரிமைகைள வென்றெடுக்கப் போராடித்தானாக வேண்டும்’ இது கேர்ணல் கிட்டு அவர்களின் அன்றையக் கூற்று.

இன்று ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் பத்தாண்டைத் தாண்டிவிட்ட நிலையில் ஆயுதம் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்புக்கான கருவி என்ற நிலை மாறுபட்டுள்ள சூழலில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் தமிழினப் பற்றுள்ள உலகத் தமிழர்களுமே ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதமாக மாறியுள்ளனர்.

இந்த நடைமுறை எதார்த்தத்தை எத்தனை புலம்பெயர் தமிழர்களும் உலகத் தமிழர்களும் உணர்ந்து ஈழத்தமிழர்களின் பாதுகாப்பைத் தமது வாழ்வின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக முன்னிறுத்தி வாழ்கின்றார்களோ அந்த அளவுக்கே ஈழத்தமிழர்களின் பாதுகாப்புப் பலம் பெறும். இந்த ஒற்றுமை பலம் பெற சாதியுணர்வின் பொய்மைகளை உணர்த்தி, தொண்டு உணர்வின் முக்கியத்துவத்தை வளர்த்து, எங்கள் பெண்களுக்கான உரிமைகளும் போற்றப்பட வேண்டுமென்பது அவர் பெருவிருப்பாகப் புலத்தில் இருந்தது.

“மேற்குலக நாடுகளிலே பலமாற்றங்களும் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் விழிப்புணர்வும் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த மாற்றங்கள் ஆசியாவில் இன்னும் ஏற்படவில்லை. ஆனால் அதற்காக நாம் மனஞ்சோர்ந்து விடலாகாது. தொடர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் எமது உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்பது கேர்ணல் கிட்டுவின் அனுபவ மொழி; ஆனால் தன்னாட்சி உரிமை ஈழத் தமிழ் மக்களின் பிறப்புரிமை என்பதைக் கூட ஏற்காதவர்களாகச் சிங்களத் தலைமைகளும் தமிழ்த் தலைமைகளும் செயற்படுவதே ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் வன்முறைப் படுத்தப்படுவதற்கும்,அவர்கள் மேலான இனஅழிப்புக்கள் தொடர்வதற்கும் காரணமாகிறது.

கேர்ணல் கிட்டு அவர்கள் ஈழத் ‘தமிழர்களின் தேசியப் பிரச்சினை’(Tamils National Question )என்பதற்கு “நாம் ஒரு தேசிய இனம். எமது தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை எமக்கு உண்டு. இதை இப்படியும் கூறலாம். எமது அரசியல் அந்தஸ்தைத் தீர்மானிக்கும் உரிமையும் எமக்கு உண்டு. நாம் இவற்றை மறுக்கும் சிறிலங்கா அரசின் கீழ் இருக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை. நாம் தமிழீழம் என்னும் தனிநாட்டுக்காகவே போராடுகின்றோம்.

ஆனால் அதே வேளை உலகில் நடைபெறும் புதிய அரசியல் மாற்றங்களையும் பார்க்கின்றோம். அதனால் நாமும் இறைமையுள்ள சுதந்திர அரசை அமைத்துக் கொண்டு, மற்ற அரசான சிறிலங்காவுடன் சமமான அந்தஸ்துடன் சேர்ந்து வாழ முடியும். அதை விடுத்து சிறிலங்காவின் அதிகாரத்துக்குள் எமது பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் அது யாராலும் முடியாத விடயம். அதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை” என மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உலகுக்கு எடுத்துச் சொன்னார். அவர் இதனை அன்று 1991இல் தெளிவுபடுத்தியமையால் இன்று 29 ஆண்டுகளின் பின்னரும் இதுவே தமிழ் மக்களின் அனுபவ மொழியாகவும்,உள்ள உறுதியாகவும் இருப்பதையும் உலகறியும்.

“நாடிருந்தும்
நாடோடியாக
நாளெல்லாம்
நாடெல்லாம்
ஓடுகின்றேன்
ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை
மனவலு இருந்தால் மட்டும் போதும்
ஓடுவதற்கு கால் எனக்குத் தேவையில்லை
போதிய உளஉரம் வேண்டும்
ஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதி பெறுகின்றேன்
நாம் ஓடாமல் இருப்பதற்கு
ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டுமென்று!
இது கவிதையல்ல – என் எண்ணங்கள்kittu தாயக உருவாக்கம் தொடர்பில் கேணல் கிட்டுவின் பார்வை- பற்றிமாகரன்

கேர்ணல் கிட்டு அவர்கள் தனது அன்பு மனைவி ஆன் சிந்தியா கிருஸ்ணக்குமார் அவர்களுக்கு 24.06.1992இல் புலத்தில் இருந்து எழுதிய இக்கவிதையின் இறுதி வரிகளில் “ ஓடுவதால் மீண்டும் மீண்டும் உறுதி பெறுகின்றேன் – நாம் ஓடாமல் இருப்பதற்கு – ஓர் சுதந்திர நிலம் அமைக்க வேண்டுமென்று” அழைப்பதும்,அதற்குப் “போதிய உள உரம் வேண்டும்” என அவர் வலியுறுத்துவதும்,புலப்பெயர்தலை நாட்டின் பிரிவாக அல்லாமல் நாட்டு உருவாக்க முயற்சியாக(Nation building process)பயனுள்ளதாக மாற்றப் புலம் பெயர் தமிழர்கள் முயலவேண்டும் என அவர் விரும்பினார் என்பதைத் தெளிவாக்குகின்றன.

இந்தத் தேச உருவாக்கம் தானாகவே என்ன செய்ய வேண்டுமென்ற ஆர்வத்துடன் இணையும் ஒரே நோக்கில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ளத்திலும் சொல்லிலும் செயலிலும் ஒன்றிணைந்து செயற்படும் அர்ப்பணிப்பான வாழ்வின் மூலமும்,இத்தகைய ஈழத்தமிழரின் ஒன்றுபட்ட குரலாக அமையக் கூடிய திரள்நிலை ஊடக (Tamil Mass Media) இயக்கத்தின் மூலமுமே சாத்தியமாகும் என்றே அவர் ஊடகத்துறைக்கு முதன்மை கொடுத்துச் செயற்பட்டார். நாம் என்ன செய்கிறோம்? இருபது இருபதிலாவது புலம்பெயர் ஈழத்தமிழர்களும் உலகத் தமிழர்களும் அவர் வழி வாழ்வோம்.!